» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிளாஸ்டிக் தடை தீவிரமாக அமல்படுத்தப்படுகிறதா? அரசு அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

வெள்ளி 13, செப்டம்பர் 2019 8:57:43 AM (IST)

பிளாஸ்டிக் தடை தீவிரமாக அமல்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த சிரஞ்சீவி, மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை சில நாட்கள் மட்டுமே தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது பிளாஸ்டிக் தடையானது, அதிகாரிகளால் கண்காணிக்கப்படவில்லை. இதனால் பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனை முன்பை காட்டிலும் அதிக அளவில் இருந்து வருகிறது. பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளை அதிகப்படுத்தி வருகின்றன.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் லாரி மற்றும் தனியார் பஸ்கள் மூலம் கடத்தப்படுகின்றன. அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு, இதை கண்டுகொள்வது இல்லை. உதாரணமாக மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதிக அளவில் செயல்படுகின்றன. பிளாஸ்டிக் பயன்பாட்டினால் விவசாய பொருட்கள் மதிப்பிழக்கின்றன. குறிப்பாக மூங்கில் பொருட்கள், பனை ஓலை பொருட்கள் போன்றவற்றின் விற்பனை நலிவடைந்து உள்ளது.

எனவே பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய வலியுறுத்தும் அரசாணையை தீவிரமாக கடைபிடித்து, சட்டவிரோதமாக பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையை முழுமையாக தடுக்க வேண்டும். பிளாஸ்டிக் இல்லா தமிழகத்தை உருவாக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல்கள் நீலமேகம், முகமது ரஸ்வி ஆகியோர் ஆஜராகி, "தமிழகத்தில் தடை செய்யப்பட்டு இருந்தபோதும், மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே இதற்கான தடையை தீவிரமாக அமல்படுத்தி, கண்காணிக்க உத்தரவிட வேண்டும்” என்று வாதாடினார்கள். விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். பிளாஸ்டிக் தடை அரசாணையை அமல்படுத்தியது குறித்தும், அதன் தற்போதைய நிலையை அறிக்கையாக தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Black Forest Cakes

CSC Computer EducationNalam Pasumaiyagam
Thoothukudi Business Directory