» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குழந்தையின் தொடையில் 20 நாட்களாக இருந்த ஊசி : அரசு மருத்துவமனை மீது பெற்றோர் புகார்

செவ்வாய் 10, செப்டம்பர் 2019 12:45:48 PM (IST)

பச்சிளம் குழந்தையின் தொடையில் 20 நாட்களாக சிக்கி இருந்த ஊசி குளிக்க வைக்கும்போது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு காரணமாக டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் எம்.எஸ்.ஆர்.புரத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (28). இவர் சொந்தமாக செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி மலர்விழி (20). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் மீண்டும் கர்ப்பமடைந்த மலர்விழி பிரசவத்துக்காக கடந்த மாதம் 19-ந் தேதி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் 20-ந் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அழகான ஆண் குழந்தை பிறந்தது.
 
இதையடுத்து அங்கு தாயும், சேயும் சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் கடந்த 21-ந் தேதி மாலை 6 மணியளவில் அந்த ஆண் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காக இடது கை மற்றும் இடது தொடையில் தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் கடந்த 31-ந் தேதி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து மலர்விழி வீடு திரும்பினார்.வீட்டிற்கு சென்ற நாளில் இருந்து பச்சிளம் குழந்தை தொடா்ந்து அழுது கொண்டே இருந்தது. குழந்தை அழுவதற்கான காரணம் தெரியாமல் தாய் மலர்விழி பரிதவித்தார். இதற்கிடையே கடந்த 21-ந் தேதி குழந்தைக்கு தடுப்பூசி போட்ட இடது தொடையில் லேசான வீக்கம் இருந்தது. நாளடைவில் வீக்கம் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகிக்கொண்டே வந்தது. குழந்தையும் தொடர்ந்து இடைவிடாது அழுது கொண்டே இருந்தது.

நேற்று காலை மலர்விழியின் தாய் தேன்மொழி அந்த குழந்தையை குளிப்பாட்டினார். அப்போது இடது தொடையை தேய்க்கும் போது தேன்மொழியின் கையில் சுருக்கென்று ஏதோ குத்தியது. குத்திய இடத்தில் இருந்து ரத்தம் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தேன்மொழி குழந்தையின் இடது தொடையை தொட்டுப்பார்த்தார். அப்போது அதில் ஒரு ஊசியின் கூர்முனை வெளியே தெரிந்தது. பின்னர் இதுகுறித்து அவா் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தார்.

குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டபோது சிரஞ்சியில் இருந்து ஊசி உடைந்து தொடைக்குள் சிக்கி இருந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து அவா்கள் குழந்தையின் தொடையில் சிக்கியிருந்த ஊசியை அகற்றினார்கள். அப்போது வலி தாங்க முடியாமல் குழந்தை அழுதது.இதையடுத்து குழந்தையின் பெற்றோா் மற்றும் உறவினர்கள் அந்த குழந்தையை எடுத்துக்கொண்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு தலைமை மருத்துவ அலுவலர் (பொறுப்பு) இளஞ்செழியனிடம் நடந்த சம்பவம் குறித்து எடுத்துக்கூறி இடது தொடையில் சிக்கிய ஊசியையும் காட்டினார்கள்.

அத்துடன் அவாிடம் புகார் மனு ஒன்று அளித்தனர். அதில் எங்களது குழந்தையின் உடலில் இருந்த ஊசியால் குழந்தையின் உடல் நிலை மோசமாக உள்ளது. எனவே குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும் இதில் சம்பந்தப்பட்ட நர்சு மற்றும் பணியில் இருந்த டாக்டா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இருந்தது. இதுகுறித்து தலைமை மருத்துவ அலுவலர் இளஞ்செழியன் கூறும்போது, பச்சிளம் குழந்தைக்கு போடப்பட்ட ஊசியானது தொடையில் சிக்கியது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதில் உண்மை என்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu CommunicationsBlack Forest Cakes


Thoothukudi Business Directory