» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆயுள் தண்டனை கைதிகள் முன்கூட்டியே விடுதலை கோர முடியாது: தமிழக அரசு பதில் மனுத்தாக்கல்

புதன் 14, ஆகஸ்ட் 2019 12:35:22 PM (IST)

ஆயுள் தண்டனை கைதிகள் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டுமென உரிமை கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏழு பேரின் விடுதலை விவகாரத்தில் ஆளுநரே முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இதுதொடர்பாக தமிழக அமைச்சரவையில் தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பியது. இந்த விவகாரத்தில் ஆளுநர் இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை.

முன்னதாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டுமென நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்குத் தமிழக உள் துறை செயலாளர் சார்பிலும், வேலூர் மகளிர் சிறை கண்காணிப்பாளர் சார்பிலும் நேற்று (ஆகஸ்ட் 13) பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், "நளினி உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு அளித்த பரிந்துரை ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது. ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது அரசின் தனிப்பட்ட அதிகாரங்களுக்குட்பட்டது. ஆயுள் தண்டனை கைதிகள் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டுமென உரிமையாகக் கோர முடியாது. ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுக்க சிறைத் தண்டனை அனுபவிப்பதைக் குறிப்பதாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கைதிகளை முன்கூட்டியே விடுவிப்பது, தண்டனையைக் குறைப்பது போன்ற மாநில அரசின் அதிகாரங்களை நீதிமன்றங்கள் செயல்படுத்த முடியாது. முன்கூட்டியே விடுவிப்பது குறித்துப் பரிசீலிக்கும்படி மட்டும்தான் அரசுக்கு உத்தரவிட முடியும் என்றும் அம்மனுவில் கூறப்பட்டுள்ளது. எனவே, நளினியின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இம்மனுவை விசாரித்த நீதிபதி சுப்பையா, சரவணன் அடங்கிய அமர்வு, வழக்கை ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory