» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

லாட்ஜில் ரயில்வே பெண் ஊழியர் கொடூர கொலை: கள்ளக்காதலன் கைது - பரபரப்பு வாக்குமூலம்

திங்கள் 12, ஆகஸ்ட் 2019 4:33:32 PM (IST)

சென்னை லாட்ஜில் ரயில்வே பெண் ஊழியர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரை தூக்கில் தொங்கவிட்டு சென்ற அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.

சென்னை பெரியமேடு வி.வி.கோவில் தெருவில் உள்ள பிரபல லாட்ஜில் நேற்று முன்தினம் கணவன்-மனைவி என்று சொல்லிக்கொண்டு இருவர் அறை எடுத்து தங்கினார்கள். மாலையில் அந்த அறையில் தங்கி இருந்த வாலிபர் வெளியில் சென்றார்.ஆனால், அறையில் தங்கி இருந்த பெண் வெளியில் வரவில்லை. நீண்டநேரமாக வெளியில் சென்ற வாலிபரும் திரும்பி வரவில்லை. அறைக்கதவு திறக்கப்படாமல் இருந்தது. வெளிப்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மாற்று சாவி மூலம் லாட்ஜ் அறை கதவை திறந்து பார்த்தார்கள். அறையில் அவர்கள் கண்டகாட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்கு தங்கி இருந்த பெண், அரைகுறை ஆடையுடன் கிட்டத்தட்ட நிர்வாண கோலத்தில் மின்விசிறியில் அவர் கட்டிய சேலையிலேயே தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது உடலில் ரத்தக்காயங்கள் இருந்தன. அவர் கொடூரமாக தாக்கப்பட்டு இருந்தார். அவரது முகம் தாக்கப்பட்டு 2 பற்கள் உடைந்து இருந்தன. 2 கண்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டு இருந்தது.

அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருக்கவேண்டும் என்று தெரியவந்தது. அவருடன் கணவன் என்று சொல்லிக்கொண்டு தங்கி இருந்த வாலிபரை காணவில்லை. அந்த பெண் அணிந்து இருந்த தாலிச்சரடு, காதில் அணிந்து இருந்த கம்மல் மற்றும் மூக்குத்தி ஆகியவற்றையும் காணவில்லை. அந்த பெண்ணை கொன்றுவிட்டு, அவர் அணிந்து இருந்த நகைகளை கொள்ளை அடித்துக்கொண்டு அவருடன் தங்கி இருந்த வாலிபர் தப்பிச்சென்று இருக்கலாம் என்று கருதப்பட்டது. இது தொடர்பாக லாட்ஜ் ஊழியர்கள் பெரியமேடு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

வேப்பேரி உதவி கமிஷனர் மகேஸ்வரி மேற்பார்வையில் பெரியமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பா போலீஸ் படையுடன் விரைந்துசென்று சம்பவம் நடந்த லாட்ஜில் விசாரணை நடத்தினார். கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய வாலிபர் யார்? என்பது பற்றி பெரியமேடு போலீசார் அதிரடி விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் மோகனா(வயது 36) என்றும், திருவொற்றியூர் ரயில்வே ஊழியர் குடியிருப்பில் அவர் வசித்ததும் கண்டறியப்பட்டது. திருமணம் ஆன அவருக்கு கணவரும், ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். மோகனா, தண்டையார்பேட்டை ரயில் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்தார். ரயில்வே ஊழியரான இறந்துபோன அவரது தந்தையின் வேலை வாரிசு அடிப்படையில் மோகனாவுக்கு கிடைத்தது. மாதம் ரூ.45 ஆயிரத்துக்கும் மேல் சம்பளம் வாங்கினார்.

தவறான நடத்தை காரணமாக மோகனாவுக்கும், அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவரது கணவர் 3 குழந்தைகளோடு பொன்னேரியில் தனியாக வாழ்ந்து வந்தார். கணவரை பிரிந்து வாழ்ந்த மோகனாவின் வாழ்க்கை தடம்புரண்டு போய்விட்டது. தண்டையார்பேட்டை ரயில்வே கேண்டீனில் டீ மாஸ்டராக வேலை பார்த்த வீராசாமி (32) என்ற வாலிபருடன் மோகனாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும், நெருக்கமாக பழகினார்கள். மோகனாவின் வீட்டுக்கு அடிக்கடி சென்று அவருடன் வீராசாமி உல்லாசமாக இருப்பார்.

பெரியமேட்டில் உள்ள லாட்ஜிலும் அறை எடுத்து தங்கி இருவரும் உல்லாசம் அனுபவிப்பார்கள். அவ்வாறு உல்லாசமாக இருந்தபோதுதான், தகராறு ஏற்பட்டு மோகனாவை கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு, வீராசாமி தப்பிச்சென்றுவிட்டார். அவரை நேற்று பெரியமேடு போலீசார் திருவொற்றியூர் பகுதியில் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோகனாவிடம் கொள்ளையடித்த நகைகள், ரூ.2,500 மற்றும் லாட்ஜ் அறையின் சாவி பறிமுதல் செய்யப்பட்டது. மோகனாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு வீராசாமி போலீசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். அவர் கொடுத்த வாக்குமூலம் விவரம் வருமாறு:-

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள முருகன்குடி எனது சொந்த ஊராகும். 6-வது வகுப்பு வரை படித்துள்ள நான், ரயில்வே கேண்டீனில் வேலை பார்த்து வந்தேன். தண்டையார்பேட்டை ரயில்வே கேண்டீனில் நான் வேலை செய்தபோது, அங்கு மோகனா தினமும் காலையிலும், பகலிலும் சாப்பிட வருவார். அப்போது, எனக்கும், அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. அவரது கணவர் பிரிந்து வாழ்ந்தது எங்கள் காதல் வளர வசதியாக இருந்தது. திருவொற்றியூரில் மோகனாவோடு அவரது வயதான தாய் மட்டுமே தங்கி இருந்தார். இதனால் இரவு வேளைகளில் மோகனா வீட்டுக்கு சென்று அவரோடு உல்லாசம் அனுபவிப்பேன்.

மோகனா கை நிறைய சம்பாதித்ததால் நன்றாக செலவு செய்வார். இருவரும் ஒன்றாக வெளியில் சுற்றுவோம். எனக்கு கஞ்சா போதைப்பழக்கம் உள்ளது. ஒருநாள் கஞ்சா போதையில் மோகனாவின் வீட்டுக்கு சென்றேன். போதை மயக்கத்தில் வீட்டு வாசலில் படுத்துவிட்டேன். அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்துவிட்டனர். போலீசார் வந்து என்னை அழைத்துச்சென்றனர். மோகனா அழைத்ததின் பேரில் தான் நான் அவரது வீட்டுக்கு சென்றேன். போதையில் படுத்துவிட்டேன் என்று போலீசாரிடம் கூறினேன்.

ஆனால், மோகனா தான் அழைக்கவில்லை என்று கூறியதோடு, என்னை யார் என்றே தெரியாது என்று கூறிவிட்டார். இதனால் போலீசார் என் மீது வழக்கு போட்டு சிறையில் அடைத்துவிட்டனர். சிறையில் வந்து என்னை மோகனா பார்க்கவில்லை. என்னை ஜாமீனிலும் எடுக்கவில்லை. 40 நாட்கள் சிறையில் இருந்துவிட்டு, வெளியே வந்தேன். இனிமேல் மோகனாவோடு பழகக்கூடாது என்று முடிவு எடுத்து இருந்தேன்.இந்தநிலையில் மோகனா மீண்டும் என்னிடம் வந்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். அக்கம்பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களுக்கு பயந்து நான் உங்களை தெரியாது என்று கூறிவிட்டேன் என்று மோகனா என்னை சமாதானம் செய்தார்.

அதன்பிறகு மீண்டும் ஒன்றாக சுற்றினோம், உல்லாசம் அனுபவித்தோம். எங்கள் கள்ளக்காதல் உறவு வெளியில் தெரிந்துவிட்டதால் மோகனாவின் வீட்டுக்கு போவதை நான் நிறுத்திக்கொண்டேன். இருவரும் பெரியமேடு லாட்ஜில் அறை எடுத்து தங்கி அடிக்கடி உல்லாசம் அனுபவிப்போம். சம்பவத்தன்று, உல்லாசம் அனுபவிக்க வந்தோம். 2 முறை உல்லாசமாக இருந்துவிட்டு, நான் வெளியில் வந்து கஞ்சா பயன்படுத்தி கடுமையான போதையோடு மீண்டும் லாட்ஜ் அறைக்கு சென்றேன். மோகனாவை மீண்டும் உல்லாசத்துக்கு அழைத்தேன். அதற்கு மறுத்த மோகனா, வீட்டுக்கு செல்ல இருப்பதாக கூறினார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அந்தநேரத்தில் என்னை சிறைக்கு அனுப்பிய சம்பவம் நினைவுக்கு வந்தது. போதையில் இருந்த நான், மோகனாவை கடுமையாக தாக்கினேன்.

முகத்தில் மாறி, மாறி குத்தினேன். பின்னர் அவரது சேலையால் கழுத்தை இறுக்கி தீர்த்து கட்டினேன். பின்னர் மோகனா தற்கொலை செய்துகொண்டது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த சேலையால் அவரது கழுத்தை கட்டி மின்விசிறியில் தூக்கில் தொங்கவிட்டேன். அவர் அணிந்து இருந்த நகைகளையும், அவர் வைத்து இருந்த ரூ.2,500 பணத்தையும் எடுத்துக்கொண்டு அறைக்கதவை பூட்டிவிட்டு, சாவியை எடுத்துக்கொண்டு தப்பி வந்துவிட்டேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட வீராசாமி, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

அருண்Aug 13, 2019 - 01:51:57 PM | Posted IP 192.8*****

பெண் என்பவள் குலவிளக்காக இருக்க வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

CSC Computer Education


Nalam PasumaiyagamAnbu CommunicationsThoothukudi Business Directory