» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தாது மணல் தொழிலை யாருமே நடத்த முடியாது: அமைச்சர் சி.வி.சண்முகம் திட்டவட்டம்!!

வெள்ளி 12, ஜூலை 2019 12:13:04 PM (IST)

மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து தமிழகத்தில் தாது மணல் தொழிலை இனி யாருமே நடத்த முடியாது என்று சட்டசபையில் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

தமிழக சட்டசபையில் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மானியக் கோரிக்கை மீது நேற்று எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். பென்னாகரம் தி.மு.க. எம்.எல்.ஏ. இன்பசேகரனின் விவாதத்துக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் குறுக்கிட்டு பதிலளித்தார். அப்போது அவர் பேசியதாவது: உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆணை பிறப்பித்தது. அந்த வகையில் சுற்றுச்சூழல் அனுமதி பெறாத 1,099 கிரானைட் குவாரிகள் மூடப்பட்டன. வெட்டி எடுக்கப்பட்ட கனிமங்களுக்கான அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

பக்கத்து மாநிலங்களில் கிரானைட் குவாரிகள் நடத்தப்படுகிறது என்றால், அது சட்ட விரோதமாக இருக்கலாம். கிரானைட் குவாரிகள் முறைகேடு தொடர்பாக தமிழக அரசு விசாரணை மேற்கொண்டு மதுரை மாவட்டத்தில் மட்டும் 77 குவாரிகளை நிறுத்தி உத்தரவிட்டது. டாமின் நிறுவனம் மூலம் தரப்பட்ட குத்தகை உரிமங்களும் நிறுத்தப்பட்டன. இது அந்த நிறுவனத்தின் வருவாயை குறைத்தாலும் அரசு ரூ.40 கோடியை வழங்கியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் பிளாட்டினம் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அங்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. என்றாலும், ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.தாது மணல் தொழிலில் முறைகேடுகள் நடப்பதை அறிந்து அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன்படி 68 தாது மணல் குத்தகை உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. 13 ஆயிரத்து 922 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 11 ஆயிரத்து 862 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தற்போது இதுதொடர்பாக மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி தனியார் என்றாலும், பொதுத்துறை நிறுவனம் என்றாலும் தாது மணல் தொழிலை நடத்த முடியாது. எனவே அனைத்து தாது மணல் குவாரிகளை ரத்து செய்வதற்கு உரிமையாளர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. கனிமப் பொருள் வழக்குகள் தொடர்பாக சிறப்பு கோர்ட்டுகளை நியமித்து கடந்த ஜூன் 13-ந் தேதி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் கலசம்பட்டியில் பாலாற்றில் மணல் எடுப்பதற்கு கலெக்டர் அனுமதி அளித்திருப்பதாகவும், அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கூறினார். அங்கு அனுமதி இல்லாமல் மணல் எடுத்தால் அரசு நடவடிக்கை எடுக்கும். ஆனால் அனுமதி பெற்று மணல் எடுக்கும் நிலையில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அதுபற்றி முதல்-அமைச்சருடன் கலந்துபேசி முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

செயற்கைக்கோள் கண்காணிப்பு

மேலும் அமைச்சர் சி.வி.சண்முகம் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:- கனிம நிர்வாகத்தை கணினி மூலம் நிர்வகிக்கவும், சட்ட விரோத குவாரிகளை கட்டுக்குள் கொண்டு வரவும் 32 மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தின் 39 அதிகாரிகளுக்கு கையடக்க கணினிகள் வழங்கப்படும். விதிகளை மீறி எடுக்கப்படும் கனிமங்களை துல்லியமாக அளவீடு செய்வதற்காக ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் சுரங்கங்கள் மற்றும் குவாரிகள் கண்காணிக்கப்படும்.

செயற்கைக் கோள் மூலம் சுரங்கங்களை கண்காணிக்கும் அமைப்பு, சிறு கனிமங்களுக்கும் அறிமுகம் செய்யப்படும். தமிழகத்தில் 503 பெருங்கனிம குத்தகைகளிலும், 3,306 சிறு கனிம குத்தகைகளிலும் பணியாற்றும் 34 ஆயிரத்து 500 குவாரி தொழிலாளர்களை தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவார்கள். இவ்வாறு அவர் அறிவிப்புகளை வெளியிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu CommunicationsBlack Forest Cakes


Thoothukudi Business Directory