» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருவண்ணாமலை அருகே ஜலசமாதி அடைந்தானா சிறுவன்? உடலை தோண்டிஎடுத்து பரிசோதனை!!

செவ்வாய் 23, ஏப்ரல் 2019 12:06:27 PM (IST)

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜல சமாதி அடைந்ததாகக் கூறப்பட்ட சிறுவனின் உடல் நேற்று தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த படவேடு செண்பகத்தோப்பு அருகேயுள்ள ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரிகிருஷ்ணன் - சுமதி தம்பதி. இவர்கள் தங்களது விவசாய நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்களது மகன் தனநாராயணன்(16).  இவர், பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 24-ஆம் தேதி, வலிப்பு நோய் வந்து தனநாராயணன் விவசாயக் கிணற்றில் விழுந்துவிட்டார். தீயணைப்பு வீரர்கள் தனநாராயணனின் உடலை மீட்டனர். 

பின்னர், 108 அவசரகால ஊர்தி மருத்துவர்கள் தனநாராயணனின் உடலைப் பரிசோதித்துவிட்டு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அப்போது, அந்தப் பகுதிக்கு வந்த நாடி ஜோதிடர் பழனி, தனநாராயணனின் நாடியைப் பிடித்துப் பார்த்து உயிர்நாடி உள்ளது எனக் கூறி, ஜலசமாதி ஆகியுள்ளதாகத் தெரிவித்தார். இதையடுத்து, அரிகிருஷ்ணன் தனது நிலத்திலேயே பள்ளம் தோண்டி தனநாராயணனின் உடலை சம்மணமிட்டு அமர்ந்தவாறு புதைத்துவிட்டார். இந்நிலையில், ஜலமாதி பற்றி வாட்ஸ்அப், பேஸ்புக்  உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் பரவியதால், படவேடு கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம் சந்தவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவின் பேரில் தனநாராயணனின் உடல் திங்கள்கிழமை தோண்டி எடுக்கப்பட்டு, அதே இடத்தில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. இதில், தனநாராயணன் கிணற்றில் விழுந்ததில்தான் மரணமடைந்தது தெரிய வந்தது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, காவல் கண்காணிப்பாளர் சிபி.சக்கரவர்த்தி ஆகியோர் அரிகிருஷ்ணன், சுமதி தம்பதியிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து ஆட்சியர் கந்தசாமி கூறியதாவது: மருத்துவப் பரிசோதனையில், கிணற்றில் விழுந்த சிறுவன் மூச்சுத் திணறித்தான் இறந்ததாகத் தெரிய வந்துள்ளது. தவறான தகவலை நம்ப வேண்டாம். கட்செவி அஞ்சலில் தவறான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesAnbu CommunicationsThoothukudi Business Directory