» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கட்கரி பேச்சுக்கு எடப்பாடியும், ராமதாஸும் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? : ஸ்டாலின் கேள்வி

திங்கள் 15, ஏப்ரல் 2019 3:38:18 PM (IST)"நிதின் கட்கரி எட்டு வழிச் சாலை அமைத்தே தீருவோம் என்று கூறும்போது எடப்பாடியும், ராமதாஸும் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை" என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் எட்டு வழிச் சாலை வழக்கில் தீர்ப்பு வந்தபோது, அதிமுக அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யாது என்கிற உத்தரவாதத்தை வழக்கு போட்ட பாமக பெற்றுத்தருமா? அது முடியவில்லை எனில் அதிமுக - பாஜக கூட்டணியிலிருந்து பாமக விலகுமா? என்று சவால் விடுத்திருந்தார். இதற்கிடையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘எட்டு வழிச் சாலை திட்டம் பற்றிய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டியது அரசின் கடமை’ என்று கூறியிருந்தார்.

முதல்வரின் பேச்சை வரவேற்ற பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்த விஷயத்தில் பாமகவின் வெற்றியையும், திமுகவின் தோல்வியையும் ஒப்புக்கொண்டு அரசியலை விட்டு திமுக தலைவர் விலகுவாரா என்று ஸ்டாலின் சவாலுக்குப் பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 14) சேலத்தில் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி திட்டமிட்டபடி எட்டு வழிச் சாலையை அமைத்தே தீருவோம் என்று உறுதியாகக் கூறினார். முதல்வரும், எட்டு வழிச் சாலையை எதிர்த்த பாமக தலைவரும் மேடையிலிருந்தபோது கட்கரி இவ்வாறு பேசியது குறித்து ஸ்டாலின் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்காக ஸ்டாலின் 39ஆவது கூட்டமாக நேற்று ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது எட்டு வழிச் சாலை தொடர்பாகப் பேசிய ஸ்டாலின், ”இத்திட்டத்தை 10,000 கோடி ரூபாயில் நிறைவேற்றப் போவதாக முதல்வர் தீவிரமாக இருந்தார். விவசாயிகள் நிலங்கள் கைப்பற்றப்பட்டன. மாநிலத்தின் வளர்ச்சிக்குச் சாலைகள் அமைக்கப்படுவது அவசியம் என்றாலும், விவசாயிகள் பாதிக்கப்படாத நிலையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக உட்பட அனைத்துக்கட்சிகளும் வலியுறுத்தின. எட்டு வழிச் சாலைக்கு எதிராக விவசாயிகள் மற்றும் பாமக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 

இதை விசாரித்த நீதிமன்றம் எட்டு வழிச் சாலையை அமல்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறைவேற்றுவது அரசின் கடமையா? இல்லையா? ஆனால், கட்கரி எட்டு வழிச் சாலையை நிறைவேற்றியே தீருவோம் என்று கூறுகிறார். அப்போது அந்த மேடையில் எடப்பாடியும், பெரியய்யா ராமதாஸும் இருக்கின்றனர். இவர்களை வைத்துக்கொண்டே பேசுகிறார்கள் என்றால் என்ன அர்த்தம். இதை மறுத்து ஏன் இருவரும் கேள்வி எழுப்பவில்லை. அப்படியானால் ரூ.10,000 கோடி திட்டத்துக்கு 4,000 கோடி ரூபாய் கமிஷன் வாங்கியிருக்கிறார் முதல்வர் என்பதுதான் உண்மை. அனைவரும் கூட்டுவைத்துள்ளனர். இது ஒரு வியாபாரக் கூட்டணி” என்று ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes


Nalam Pasumaiyagam

Anbu Communications

CSC Computer Education
Thoothukudi Business Directory