» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எலெக்‌ஷன் முடியட்டும்னு காத்துக்கிட்டிருக்கீங்களா? தமிழக முதல்வருக்கு கமல்ஹாசன் கேள்வி

வெள்ளி 15, மார்ச் 2019 11:49:18 AM (IST)

பொள்ளாச்சி விவகாரத்தில் எலெக்‌ஷன் முடியட்டும்னு காத்துக்கிட்டிருக்கீங்களா? என தமிழக முதல்வருக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல், தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு வருமாறு: அந்தப் பொண்ணு அலறுன குரல் கேட்டதில இருந்து மனசு பதறுது. என்ன ஒரு பதினெட்டு, பத்தொன்பது வயசு இருக்குமா? அந்தப் பொண்ணோட குரல்ல இருந்த அதிர்ச்சி, பயம், நண்பன்னு கூட்டிக்கிட்டு வந்தவன், தன்னைக் காப்பாத்திக் கூட்டிட்டுப் போயிடமாட்டானாங்கற தவிப்பு... கண்ணை மூடுற ஒவ்வொரு நொடியும் திரும்பத் திரும்ப காதுல கேக்குது.

நிர்பயாவுக்கு நேர்ந்த கொடுமையை எதிர்த்து, ஊரு ஒலகமே ஒண்ணாத் திரண்டு எதிர்த்தப்ப, தமிழக முதல்வர் ஒரு அறிக்கையை விடுறாங்க. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கொடூரக் குற்றங்களாகக் கருதப்பட்டு, உயர்மட்ட போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் அப்படின்னு சொன்னாங்க. அந்தப் பெண்மணியின் பெயரால் ஆட்சி செய்ற இந்த அரசாங்கம், எப்படி இவ்வளவு கவனக்குறைவாவும் மெத்தனமாகவும் இருக்கமுடியுது.

பெண்ணைப் பெத்த எல்லாருக்குமே பதறுதே! உங்களுக்குப் பதறலையா? குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லைன்னு சொல்றதுல இருக்கிற மும்முரம், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனையை இந்த அரசாங்கம் உறுதியாகத் தரும்னு மக்கள்கிட்ட சொல்றதுல இல்லையே. ஏன்?

வழக்கை விசாரிக்கிற எஸ்.பி. புகார் கொடுத்த பெண்ணின் பெயரை தவறுதலாகச் சொல்லிட்டாராம். சரி அதை விடுங்க. பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை வெளியிடக்கூடாதுங்கற உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு எதிரா, அவர் செயல்பட்டாலும் அரசாங்கம் அமைதியாவே இருக்கு. அடுத்த ரெண்டு நாள்ல, பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோ, வெளியே வருது. எப்படி?

குற்றவாளிகள் வீடியோக்களை அழிச்சிட்டதா காவல்துறை சொல்லும்போது, இந்த வீடியோ எப்படி வெளியே வந்துது? முதல்ல வந்ததே... அந்த பாதி மறைக்கப்பட்ட வீடியோ...அது எப்படி வெளியே வந்துச்சு? யார் வெளியிட்டது? என்ன காரணம்? பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்றேன்னு சொன்ன தலைமையை, பாக்கெட்ல போட்டோவா வைச்சிருக்கிற நீங்க, பெண்களுக்கு எதிரா நடக்கிற இந்த அநியாயத்துக்காக என்ன பண்ணியிருக்கீங்க?

நான் சொல்லட்டுமா? தன்னுடைய எதிர்ப்பை, கோபத்தைப் பதிவு பண்ண வந்த மாணவர்களை, பலவந்தமா அப்புறப்படுத்தியிருக்கீங்க. பெண்களை, வன்முறையை உபயோகப்படுத்தி பயமுறுத்த முயற்சி பண்ணியிருக்கீங்க. நேர்மையான வழில, நியாயமான கோபத்தைப் பதிவு பண்ண வந்த  பெண்கள்கிட்ட, முறைதவறி நடந்துகிட்ட இந்தக் காவல்துறையா எங்க பெண்களின் பாதுகாப்பை உறுதிபண்ணப் போவுது அப்படின்னு எங்க பொண்ணுங்க கேக்கறது உங்களுக்கு கேக்கலையா மிஸ்டர் சி.எம்? இந்தக் கேள்வியெல்லாம் உங்களுக்கு.

பேரைச் சொல்றீங்க, வீடியோவை விட்டுடுறீங்க. ஏன் இப்படி நடக்குதுன்னு போராட்டம் நடத்த வர்ற பெண்களை, போலீஸை விட்டு அடிக்கிறீங்க. ஆனா உங்க ஆட்சி, ஒரு பெண்ணின் பெயரால்தான் நடக்குதுன்னு நீங்க சொல்றீங்க. எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு. மக்கள் நீதி மய்யத்தின் தலைவரா கேக்கலை. ரெண்டு பொண்ணோட அப்பாவாக் கேக்கறேன். என்ன பண்ணி, இந்தத் தப்புகளுக்கான பரிகாரம் பண்ணப் போறீங்க? எந்தப் பொண்ணும் புகார் கொடுக்க வெளியே வரக்கூடாதுன்னு வீடியோவை வெளியிட்டு மிரட்டுறீங்களோனு பயப்படுற சகோதரிகளுக்கு, என்ன பதில் சொல்லப்போறீங்க?

கட்சிப் பாகுபாடுகள் எல்லாத்தையும் தாண்டி, இந்தக் கொடூரமான காரியத்தைச் செஞ்சவங்க மேல இந்த அரசாங்கம் எடுக்கப்போற நடவடிக்கை, நீங்க கொடுக்கப் போற தண்டனை மட்டுமில்ல! பெண்களுக்கு எதிரான கொடுமையை எவனாவது செஞ்சா, அரசாங்கம் விடாதுங்கற நம்பிக்கையும்தான்! எப்போ செய்யப்போறீங்க? இன்னும் எதுக்காகக் காத்துக்கிட்டிருக்கீங்க? எலெக்‌ஷன் முடியட்டும்னு காத்துக்கிட்டிருக்கீங்களா?

நம்ம நாட்ல இருபெரும் காவியங்களா கருதப்படும் மகாபாரதமும் ராமாயணமும் ஒருபெண்ணுக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைப்பதற்காக ஏற்பட்ட போர்களைப் பற்றியது. தன் பொண்டாட்டிக்கு ஒண்ணுன்னாலே போருக்குப் புறப்பட்ட கடவுளர்கள் வாழ்ந்த இந்த நாட்ல, உங்க அம்மாவுக்கே ஏற்பட்ட இந்த அவமானத்தை எப்படித் துடைக்கப்போறீங்க சாமீ? இவ்வாறு கமல் வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

நிஹாMar 15, 2019 - 01:35:34 PM | Posted IP 172.6*****

நாக்கை பிடுங்கிக்கொள்ளும்படியான கேள்வி.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape TailorsAnbu Communications

Black Forest Cakes

Nalam Pasumaiyagam

Joseph MarketingCSC Computer EducationThoothukudi Business Directory