» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி உத்தரவு

செவ்வாய் 12, மார்ச் 2019 5:34:47 PM (IST)

பொள்ளாச்சியில் பெண்களை துன்புறுத்தி, வன்கொடுமை செய்து, அவர்களிடம் இருந்து பணம், நகை பறித்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழக மக்களை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் குறித்து கோவை காவல்துறை விசாரணை போதுமானதாக இல்லை என்றும், குற்றவாளிகளைத் தப்புவிக்க அரசியல் கட்சிகள் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் எழுந்த புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் 19 வயது பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி விடியோ எடுத்து மிரட்டிய புகாரின் கீழ் 4 முக்கியக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களின் செல்போனில் இருந்து 4 விடியோக்களை ஆய்வு செய்து அதன் மூலம் இந்த கும்பலிடம் சிக்கிய 2வது பெண்ணின் அடையாளத்தை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

இது குறித்து கோவை காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், குற்றவாளிகளின் செல்போனில் இருந்து 4 விடியோக்களை ஆய்வு செய்து ஒரு பெண்ணை அடையாளம் கண்டுள்ளோம். அந்த பெண் திருமணமானவர். அவர் தைரியத்தோடு காவல்நிலையத்துக்கு வந்த புகார் அளித்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். இல்லையென்றால் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று தெரிவித்திருந்தார்.

மேலும், இந்த செல்போன்களில் ஏராளமான விடியோக்கள் அழிக்கப்பட்டுள்ளன. அவற்றை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே போல கடந்த 2 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த இளம் பெண்களின் வழக்குகளையும் தூசு தட்டி எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல, இவர்களால் பாதிக்கப்பட்டவர்களும் முன்வந்து புகார் அளிக்க வேண்டும். உங்களுக்கு காவல்துறையிடம் புகார்  அளிக்க விருப்பமில்லை எனில், நீதிபதியிடம் நேரடியாக முறையிடலாம் என்று பொள்ளாச்சி டிஎஸ்பி கே. ஜெயராமன் கூறியிருந்தார்.

இந்த வழக்கில், அரசியல் பிரமுகர்கள் சிலரின் பெயர்களும் இடம்பெறுவதால் இது தமிழகத்தில் பெரிய அளவில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில், சிபிசிஐடியின் ஒரு பெண் எஸ்பி வழக்கு விசாரணையை மேற்கொள்வார் என்றும் டி.கே. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கிடையே, திருநாவுக்கரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டது.

இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை மிரட்டிய வழக்கில், அதிமுகவின் இளைஞர் அணி உறுப்பினர் பொள்ளாச்சி நாகராஜன் நேற்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அதிமுக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகள் என் மீது பழிபோட நினைக்கிறார்கள். ஆனால், உண்மையான குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும், டிஜிபியை சந்தித்து வழக்கு தொடர்பாக தான் பேசியதாகவும் பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம் அளித்தார்.


மக்கள் கருத்து

நிஹாMar 13, 2019 - 03:37:55 PM | Posted IP 162.1*****

சிபிசிஐடிக்கு மாற்றி என்ன பிரயோசனம்.சி பி ஐ க்கு மாற்றினாலாவது ஏதாவது நடக்க வாய்ப்புள்ளது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing
New Shape Tailors

Anbu Communications

CSC Computer Education


Black Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory