» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாஜகவின் அழுத்தத்தால் தன்னிலை மறந்து பிதற்றத் தொடங்கியுள்ளார்: கமல் மீது முரசொலி சாடல்!

திங்கள் 11, பிப்ரவரி 2019 4:17:09 PM (IST)

"பாஜகவின் துப்பாக்கி அழுத்தத்தின் காரணமாக தன்னிலை மறந்து பிதற்றத் தொடங்கியுள்ளார் கலைஞானி" என கமல்ஹாசனை விமர்சித்து முரசொலியில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. 

திமுகவை அழுக்கு பொதி மூட்டை என கமல்ஹாசன் ஒரு தனியார் தொலைக்காட்சியில் அளித்த சிறப்பு பேட்டியில் விமர்சனம் செய்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் முரசொலியில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதில் கலைஞானி கமல்ஹாசனின் தோல் உரியத் தொடங்கியுள்ளது. நரித்தனத்தில் பெயர் போன ரத்த வார்ப்பல்லவா அவர்! காலம், நேரம் பார்த்து தன் சுயரூபத்தை வெளிக் கொணர்ந்துள்ளார். வண்ணங்களைக் கலந்து அழகுருவங்களை வடிப்பார்கள் ஓவியர்கள். இவரோ வண்ணங்களைக் குழப்பி புதிய ஓவியம் படைக்கப் போவதாக அறிவித்து நம்பியோர் முகத்தில் கரியைப் பூசியுள்ளார்!

திரையில் பல்வேறு வேடங்களைக் காட்டினார்! நடிப்பாற்றல் என்று மகிழ்ந்து அவரைப் பாராட்டினோம்! இப்போது அரசியல் பிரவேசம் நடத்தி, அதே போல வேடங்களை மாற்றி வித்தை காட்டத் துவங்கியுள்ளார். ஜென்மத்தோடு பிறந்ததை எதைக் கொண்டும் சீர் செய்ய முடியாது என்பார்கள் உதாரணமாக நாய் வாலை நிமிர்த்த இயலுமா?- என்பதையும் கேட்பார்கள். ஆனால் அதிசயமாக நிமிர்ந்து நின்ற வாலைப் பார்த்து வா.ரா.வை போல் இதோ ஒரு அதிசய மனிதர் தோன்றியிருக்கிறார் என வியந்தோம்!. ஆனால் இப்போதுதான் வாலில் கட்டிய சிம்பு விலகியதால் வால் மீண்டும் வளைந்துள்ளது!

ஊடக விவாதங்களிலும் சில அரசியல் மேடைகளிலும் பேசி வரும் தோழர் மதிமாறன், கமல் அரசியல் வேடம் கட்டிய நாளிலிருந்து இவர்களெல்லாம் பாஜகவால் உருவாக்கப்பட்டவர்கள் என்பதை சுட்டிக் காட்டி வருகிறார். நம்மில் சிலர் கூட நினைத்தோம். ஏன் நாம் கூட எண்ணினோம், கமல்ஹாசனை தேவையின்றி ஏன் சீண்ட வேண்டும். திராவிட இயக்க உணர்வோடு ஒத்து போகும் அவரை நோக்கி ஏன் இதுபோன்ற குண்டூசித் தாக்குதலை நடத்த வேண்டும் என்றெல்லாம் நம்மிடையே கருத்துக்கள் நிலவின!

மதிமாறன் போன்றோர் கொண்ட கருத்து, எத்தனை தீர்க்கதரிசனமானது என்பதை நிரூபித்திடும் வகையில் கலைஞானி கமல்ஹாசனின் இன்றைய பேச்சு துல்லியமாக அமைந்துள்ளது. அரிதாரங்கள் மேல் உடலை மாற்றலாம். ஆனால் உள்ளுணர்வை மாற்ற இயலாது என்பதற்கு சிறப்பான எடுத்துக் காட்டாகி விட்டார் கமல்ஹாசன்! மூட்டைகளைச் சுமக்கும் பிராணிக்கு கனம் தெரியுமே தவிர, அதனுள் இருப்பது என்ன என்பதை உணர முடியாது! மூட்டைக்குள் என்ன இருக்கிறது என்பது தெரியாது. எஜமான் தூக்கி வைப்பதைச் சுமந்து செல்வதுதானே அதன் வழக்கம்!

சில பிராணிகள் கூட மோப்பத்தில் எஜமானை அறிந்து விசுவாசத்தில் வால் ஆட்டும்! மூட்டை சுமக்கும் பிராணியோ கோல் தூக்கியவனை எல்லாம் எஜமானாகக் கருதிச் செல்லும்! கோல் தூக்கி மிரட்டிய எஜமானுக்குப் பயந்து கோலோச்சப் புறப்பட்ட கமல்ஹாசனுக்கு செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாது போய்விட்டது! பாவம் அவரை சொல்லிக் குத்தமில்லை. கட்சித் துவங்கி பல மாதங்கள் கடந்த பின் இப்போதுதான் திமுக ஊழல் கட்சியாகக் காட்சி தருகிறது அவருக்கு!

பத்மஸ்ரீ பட்டம் பெற்றபோதும், பாராட்டுவிழாவுக்கு அன்றைய முதல்வர் கருணாநிதி அழைத்த போதும் திமுக ஊழல் கட்சியாகத் தோன்றவில்லை. மருதநாயகம் படப்பிடிப்பைத் துவக்க அன்றைய திமுக முதல்வரை அழைத்த போது ஊழல் தெரியவில்லை. ஏன் அவ்வை சண்முகியாக வேடம் கட்டி தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்ற போதும் ஊழல் தெரியவில்லை. ஆனால் இப்போது திடீரென திமுக ஊழல் கட்சியாக அவர் முன் உருவெடுத்திருக்கிறதென்றால் என்ன காரணம்? ஆட்சியில் இருந்த போதெல்லாம் ஊழல் கட்சியாகத் தோன்றாத ஒன்று ஆட்சி அதிகாரத்தை இழந்து 7 ஆண்டுகள் முடிந்தபின் திடீரென ஊழல் கட்சியாக கமலுக்கு காட்சியளிக்கிறது என்றால் அது அவரது சொந்த கருத்தாக இருக்க முடியுமா?

சினிமா பாணியில் சொல்ல வேண்டுமெனில் நாம் பல படங்களில் பார்த்த காட்சி மூலமே இதனை விளக்கிட இயலும்! நாயகனின் நண்பன் பாத்திரத்தில் தோன்றுபவன் திடீரென நாயகனுக்கு எதிராக பேசுவான், நாயகன் குற்றவாளி என்பான். படம் பார்ப்பவர்கள் திகைப்பார்கள்! என்ன இப்படி நேரம் பார்த்து காலை வாரி விட்டு விட்டானே என படம் பார்ப்பவர்கள் எல்லாம் திகைத்திருக்க அதுவரை இரு பாத்திரங்களை மட்டும் குளோசப்பில் காண்பித்த கேமரா பின்நோக்கி செல்லும். அப்போது மூன்றாவது பாத்திரம் ஒன்று நாயகனின் நண்பனுக்குப் பின்னால் அவர் முதுகின் மீது கத்தியையோ அல்லது துப்பாக்கியையோ வைத்து அழுத்திக் கொண்டிருப்பது போல் காண்பிக்கப்படும்.

அதே நிலைதான் பின்னால் பாஜகவின் துப்பாக்கி அழுத்தத்தின் காரணமாக தன்னிலை மறந்த பிதற்றத் தொடங்கியுள்ளார் கலைஞானி! ஆளானப்பட்டதாகக் கருதப்படும் புரட்சி நடிகர்கள் கூட அமலாக்கத் துறை, வருமானத் துறை மிரட்டலுக்குப் பயந்து, அவர்களை வளர்த்த கட்சியின் மார்பில் பாய்ந்த வரலாற்றைத் தெரிந்தவர்கள் நாம்! "வளர்த்த கடா மார்பில் பாய்ந்த தடா" எனத் தன் வெண்கலக் குரலால் மறைந்த நாகூர் ஹனிபா பாடிய பாடல் கேட்டிருப்போம். அதனையே எதிர்கொண்டு போராடி இந்தப் பேரியக்கத்தைக் காப்பாற்றி வந்தவர்கள் நாம்! நம்மை இந்த "பூம் பூம்" காரனின் மாடு என்ன செய்துவிடும்!

தலைவர் கருணாநிதி அடிக்கடி கூறுவது போல் புலி வேட்டைக்குச் செல்பவன், இடையிலே பன்றிகள் வீசும் சேற்றை பற்றிக் கவலைப்படக் கூடாது. அது நமது கவனத்தை குறியை திசை திருப்பும் செயலாகும். அவற்றை அலட்சியப்படுத்தி இலட்சியத்தை எட்ட பீடு நடை போடுவோம் என்று முரசொலியில் கமலை விமர்சனம் செய்து கட்டுரை தீட்டப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam PasumaiyagamBlack Forest CakesAnbu Communications

CSC Computer EducationThoothukudi Business Directory