» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் தமிழகம் பயனடைந்து வருகிறது: தமிழிசை பேட்டி

வியாழன் 7, பிப்ரவரி 2019 12:39:26 PM (IST)

நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் தமிழகம் முன்னணியில் பயனடைந்து வருகிறது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, கடந்த 3 ஆண்டுகாலமாக நீட் தேர்வை நாடுமுழுவதும் உள்ளதைப்போல் தமிழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் அனைவருமே நீட் தேர்வை எதிர்கொண்டு சிறப்பான இடங்களை பெற்று வருகிறார்கள். நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதற்கு பின்பு தமிழகத்திலிருந்து மத்திய தொகுப்பிற்கு அதிக அளவில் தமிழக மாணவர்கள் சேரும் நிலை ஏற்பட்டுள்ளது கடந்த காலங்களில் மத்திய தொகுப்பிற்கு தமிழக மாணவர்கள் குறைந்த அளவே தேர்வானார்கள் என்பதே உண்மை. இந்த நிலை தற்போது மாறி இருக்கிறது. 

சமீப காலத்தில் வெளிவந்த முதுநிலை மருத்துவ பட்ட மேற்படிப்பில் தமிழக மாணவர்கள் அகில இந்திய அளவில் முன்னணியில் இருப்பது தமிழகத்திற்கு பெருமை. இந்தாண்டு இந்திய அளவில் முதுநிலை மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு எழுதிய 143148 பேரில் 79633 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அதில் தமிழகத்திலிருந்து தேர்வெழுதிய 17067 பேரில் 11121 பேர் பேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். மராட்டிய மாநிலத்தில் தேர்வெழுதிய 15451 பேரில் 7441 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். கர்நாடக மாநிலத்தில் தேர்வெழுதிய 15216 பேரில் 9219 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். ஆந்திராவில் தேர்வெழுதிய 10885 பேரில் 6323 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். 

உத்திரபிரதேசத்தில் தேர்வெழுதிய 9712 பேரில் 4173 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இந்தியாய் அளவில் முதுநிலை மிருதுவா படிப்பிற்கான நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 79633 பேரில் 11121 பேர் என்று சொன்னால் இந்திய அளவில் 1:7 என்ற விகிதத்தில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் முதுநிலைப் பட்டபடிப்பிற்கு தேர்வாகி இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் கோடிகள் இல்லாமல் தகுதியின் அடிப்படையில் தான் சேரப்போகிறார்கள்.  நீட் தேர்வால் சாமானியர்களும் குறைந்த கட்டணத்தில் மருத்துவ படிப்பு பயில முடியும் என்பதே இன்றைய நிதர்சனம். 

நீட் தேர்வால் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்பு விலை பேசி விற்கப்படாமல் தகுதி, மதிப்பெண் அடிப்படையில் யாருடைய சிபாரிசும் இல்லாமல் சாமானியர்களும் மருத்துவராக முடிகிறது. உதாரணத்திற்கு நெல்லையில் ஒரு எளிய குடும்பத்தில் துப்புரவு தொழிலாளரின் மகன், சென்னையில் பிரபல தனியார் மருத்துவ கல்லூரி வளாகத்திற்குள் சாதாரண டீ கடை நடத்தி வந்த ஏழை குடும்ப பெண்ணிற்கு மருத்துவம் படிக்க கிடைத்த அரிய வாய்ப்பு போன்ற பல உதாரணகளை மறைக்க முடியாது. அனிதாவின் மரணம் வருந்தத்தக்கது அனிதாவின் சொந்த மாவட்டத்திலே கடந்த காலங்களை விட அதிக எண்ணிக்கையில் நீட் தேர்வின் மூலம் பயன் அடைந்து உள்ளார்கள் என்ற புள்ளி விவரமும் தெரிய வந்துள்ளது. 

பலரின் மருத்துவராகும் கனவும் நனவாகிறது. நீட் தேர்வை பொதுமக்களும், மாணவர்களும் ஏற்றுக்கொண்டுவிட்டதால் முன்பு இருந்ததை விட ஏறத்தாழ 2 மடங்கு மாணவர்கள் நீட் தேர்வை எழுதியுள்ளார்கள். இந்தியா முழுவதும் நீட் தேர்வு கடந்த ஆண்டுகளில் நடந்த நிலையில் தமிழக அரசு கேட்டுக்கொண்டதால் மத்திய அரசு நீட் தேர்விற்கு தமிழகத்திற்கு 1 வருடம் விலக்கு அளித்தது. அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படித்தான் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. 

நீட் தேர்வு கருத்துருவாக்கம் திமுக -காங்கிரஸ் கூட்டணியின் மன்மோகன்சிங் ஆட்சிக்காலத்தில்தான் உருவானது. அதன் இறுதிவடிவம் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மோடி அவர்கள் அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயப்படுத்தப்பட்டது. 4 ஆண்டு கால ஆட்சியில் 6000 மருத்துவ மேற்படிப்பு இடங்கள்,13000 க்கும் அதிகமான புதிய MBBS இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 80 க்கும் அதிகமான மருத்துவ கல்லூரிகள் நாடெங்கும் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. மேலும் அரசு மருத்துவர்களின் பணிக்காலம் 65 வயதிலிருந்து 70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

நாடெங்கிலும் மலிவு விலை மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளது. உயிர்காக்கும் மருந்துகள்,அன்றாட அத்தியாவாசிய மருந்துகளான சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு,கொழுப்பு நோய், இருதயம் சம்பத்தப்பட்ட நோய்கள், சிறுநீரக நோயாளிகள் பயன்படுத்தக்கூடிய மருந்துகள் போன்ற 200 வகை மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இது தவிர இருதய ஸ்டெண்ட் விலை 150000 திலிருந்து 25000 மாக விலை நிர்ணயம் செய்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கான செயற்கை மூட்டுகளின் விலை லட்சங்களிலிருந்து சில ஆயிரங்களாக குறைக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்கள் சிறப்பு பேறுகால கவனிப்பு திட்டங்கள் மற்றும் இந்தியா முழுவதும் பல மக்கள் நலம் சார்ந்து செய்து வரும் மோடி அவர்களின் அரசை வெறும் நீட் தேர்வை காட்டும் வைத்து விமர்சிக்க வேண்டாம். 

இதேபோல்தான் கீழடி அகழ்வாய்வு ஆராய்விலும் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது. எனவே நீட் தேர்வை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் அதன் பயன்களை சாமானியர்களும் அனுபவித்து கொண்டிருக்கிறார்கள் என்பதை ஸ்டாலின் அவர்கள் உணர வேண்டும். அதை தேர்தல் அரசியலுக்காக கருவியாக பயன்படுத்த வேண்டாமென்று தமிழக நலன் கருதி கேட்டுக்கொள்கிறேன். கடந்த காலங்களில் திமுக -காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தான் இலங்கை தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள் அதற்கு துணை நின்ற காங்கிரஸ் உடன் தான் தற்போதும் கூட்டணி வைத்துள்ளீர்கள் இலங்கை தமிழர்களுக்காக வாழ்வதாக காட்டிக்கொண்டிருக்கும் வைகோ-திருமாவளவன் போன்றோர் இன்று அதையெல்லாம் மறந்து சுய லாபத்துக்காக அதே காங்கிரஸ் உடன் கைகோர்த்து நிற்பதை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 


மக்கள் கருத்து

சாமிFeb 9, 2019 - 08:04:44 PM | Posted IP 162.1*****

உண்மையை உரக்க சொல்லுங்கள் மேடம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

Nalam Pasumaiyagam

Black Forest Cakes
CSC Computer Education

New Shape TailorsThoothukudi Business Directory