» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக மீண்டும் கருப்புக் கொடி: வைகோ அறிவிப்பு

புதன் 6, பிப்ரவரி 2019 5:26:39 PM (IST)

தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தனது தலைமையில் கருப்புக் கொடி காட்டப்படும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில், "2014 மே மாதம் நரேந்திர மோடி தலைமையில் பாஜக அரசு மத்தியில் பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில் ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கின்றது. அரசியல் சட்ட நெறிமுறைகளைக் காலில் போட்டு மிதித்து வரும் பாஜக அரசு, நாட்டின் பன்முகத்தன்மையைச் சிதைத்து வருகிறது. ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே மதம்; ஒரே பண்பாடு என்று மதவெறி சனாதன சக்திகள் கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருவதை நிலைநாட்டும் வகையில், மோடி அரசு ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி வருவது பேராபத்து ஆகும்.

மத சகிப்பின்மை, சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்கள், பசு பாதுகாப்பு எனும் பெயரால் ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், இந்தி, சமஸ்கிருத மொழி திணிப்பு, அரசின் முக்கியத்துவம் வாய்ந்த அனைத்துத் துறைகளிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சார்ந்தோர் நியமனம், திட்டக்குழு கலைக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட நிதி ஆயோக் மூலம் மாநில உரிமைகள் பறிப்பு, கல்வித்துறை காவி மயம், அரசியல் சாசனத்தின் கீழ் செயல்படும் மத்திய அமைப்புகளின் சீர்குலைவு போன்றவை நாடு பாசிசத்தின் கோரப் பிடியில் போய்க்கொண்டிருப்பதையே காட்டுகிறது.

காந்தியை சுட்டுக்கொன்ற சனாதன மதவெறிக் கூட்டம், அவரது 71 ஆவது நினைவு நாளான ஜனவரி 30 ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம், அலிகாரில் இந்து மகாசபா அலுவலகம் எதிரே காந்திஜி உருவ பொம்மையை வைத்துத் துப்பாக்கியால் சுட்டு, அதிலிருந்து ரத்தம் வழிந்தோடுவதைப் போன்று சித்தரித்து உள்ளனர். இக்கொடூர வக்கிரச் செயலை இந்துமகா சபா பெண் தலைவர் பூஜா சகுண் பாண்டே தலைமையில் நிகழ்த்தியது மட்டுமின்றி, காந்தியைக் கொலை செய்த நாதுராம் கோட்சே புகழ்பாடி உள்ளனர்.

காந்தி முதல் கவுரி லங்கேஷ் வரை சங்பரிவாரை எதிர்த்தவர்களைச் சுட்டுக் கொன்றும் இன்னும் அதே கொலைவெறி தணியவில்லை. நாடாளுமன்றத்திலேயே பாஜக உறுப்பினர் சாக்சி மகராஜ், கோட்சேவுக்கு சிலை எழுப்ப வேண்டும் என்று கூறினார். இதற்கெல்லாம் பின்னணியில் இருப்பது மோடி தலைமையிலான பாஜக அரசு என்பது வெள்ளிடை மலை. மோடி அரசின் செயல்பாடுகளால் தமிழகம் எல்லா வகையிலும் வஞ்சிக்கப்பட்டு வருவதை எவராலும் மறுக்க முடியாது.

திராவிட இயக்கம் நாட்டுக்கு வழங்கிய கொடை சமூக நீதித் தத்துவத்தைத் தகர்க்கும் வகையில் செயல்படும் பாஜக அரசு, உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்க சட்டத் திருத்தம் கொண்டுவந்து, இடஒதுக்கீட்டுக் கொள்கையை நீர்த்துப்போகச் செய்து இருக்கிறது. நீட் நுழைவுத் தேர்வைத் திணித்து பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட, பழங்குடி மாணவர்கள் மருத்துவராகும் கனவைத் தகர்த்தது, தமிழ்நாட்டின் உயிராதாரமான காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழக உரிமைகளைப் பறித்தது மட்டுமின்றி, கர்நாடகம் காவிரியின் குறுக்கே தடுப்பு அணை கட்டுவதற்கு அனுமதி அளித்தது.

காவிரி வேளாண்மையை ஒழித்துக்கட்டி, டெல்டா பகுதியை பாலைவன பூமியாக மாற்றிட மீத்தேன், ஷேல், ஹைட்ரோ கார்பன் போன்ற நாசகாரத் திட்டங்களை மக்கள் எதிர்ப்புக்களை மீறி செயல்படுத்த பாஜக அரசு துடிக்கிறது. காவிரி டெல்டா மாவட்டங்களை பெட்ரோலிய முதலீட்டு மண்டலமாக அறிவித்துள்ள திட்டம், சொந்த மண்ணிலிருந்து மக்களை வெளியேற்றும் பேரழிவுத் திட்டமாகும்.முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரளாவின் வஞ்சகத் திட்டத்துக்கு பாஜக அரசு துணைபோனது.

கஜா புயலால் பேரழிவுக்கு உள்ளான காவிரி டெல்டா மக்களின் துயரத்தில் பங்கு கொள்ளவோ, உயிரிழந்த நூற்றுக்கு மேற்பட்டோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்கவோ பிரதமர் மோடி அவர்களுக்கு ஈர இதயமில்லை. வாழ்வாதாரம் உள்ளிட்ட அனைத்தையும் இழந்து நிர்க்கதியாகி நிற்கும் சோழவள நாட்டு மக்களின் மீள்வாழ்வுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்வதிலும் மோடி அரசு வஞ்சகம் இழைத்துவிட்டது.

சுற்றுச்சூழலுக்கும், மக்கள் நல்வாழ்வுக்கும் கேடு விளைவிக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு முனைந்து இருப்பதும், தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகம் நிறுவத் துடிப்பதும் தமிழகத்திற்கு பெரும் பாதிப்பை எற்படுத்தும்.மத்திய பாஜக அரசின் தலைமைப் பொறுப்பில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ள வருவது அவரது உரிமை. ஆனால் தமிழ்நாட்டிற்கு பச்சைத் துரோகம் இழைத்து வரும் பிரதமர், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் கருப்புக் கொடி காட்டுவோம் என்று மதிமுக அறிவித்தது.

அதன்படி பிப்ரவரி 10 ஆம் தேதி திருப்பூருக்கும், பிப்ரவரி 19 ஆம் தேதி கன்னியாகுமரிக்கும் வருகை தந்து அரசு விழாவில் பங்கேற்க உள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது தலைமையில் கருப்புக் கொடி காட்டும் அறப்போராட்டம் நடைபெறும். இதில் மதிமுகவினர், தமிழ் உணர்வாளர்கள், பாஜக அரசின் எதேச்சாதிகாரத்தை எதிர்த்துப் போராடும் அமைப்புகள் தமிழகத்தின் எதிர்ப்பைத் தெரிவிக்க பெருமளவில் திரண்டு வர வேண்டும்" என வைகோ வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து

சாமிFeb 9, 2019 - 08:06:01 PM | Posted IP 108.1*****

பைத்தியக்காரத்தனமான உளறல்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


Nalam Pasumaiyagam


Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory