» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ காட்சிகள் அழிப்பு: அப்பல்லோ மருத்துவமனை பரபரப்பு தகவல்

புதன் 19, செப்டம்பர் 2018 3:49:55 PM (IST)

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சி.சி.டி.வி. வீடியோ பதிவுகள் அழிந்து விட்டதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்காததால் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் கூறப்பட்டது. இதையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய விசாரணை கமி‌ஷனின் காலம் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து மீண்டும் நீட்டிக்கப்பட்டது. நீதிபதி ஆறுமுகசாமி ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆம்புலன்ஸ் டிரைவர், அப்பல்லோ மருத்துவமனை நர்சுகள், பிசியோதெரபிஸ்ட்கள், டாக்டர்கள், எய்ம்ஸ் டாக்டர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர், செயலாளர் என அனைத்து தரப்பினருக்கும் சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினார். அவர்களது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

விசாரணை கமி‌ஷனில் சசிகலா சார்பில் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் சாட்சியம் அளித்தும் குறுக்கு விசாரணை நடத்தியும் வருகிறார். அப்பல்லோ மருத்துவமனை சார்பில் மருத்துவ ஆவணங்கள், சிகிச்சை விவரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள சி.சி.டி.வி. வீடியோ காட்சிகளை வெளியிட வேண்டும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் சி.சி.டி.வி. காட்சிகள் தங்களிடம் இல்லை என்றும், முக்கிய பிரமுகர்கள் சிகிச்சை பெறும் அறைகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் வைப்பது இல்லை என்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அடிக்கடி கூறி வந்தது.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது திடீரென்று ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் ஜெயலலிதா ஜூஸ் குடித்துக் கொண்டே டி.வி. பார்ப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்தது. இந்த வீடியோவை தினகரன் அணியைச் சேர்ந்த வெற்றிவேல் வெளியிட்டார். இந்த வீடியோ கிராபிக்ஸ் செய்யப்பட்டது என்று சந்தேகம் கிளப்பப்பட்டது. ஆனால் சசிகலாவே எடுத்தார் என்று வெற்றிவேல் கூறியிருந்தார்.

இதையடுத்து ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை விசாரணை ஆணையத்திடம் ஒப்படைக்குமாறு நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டார். மேலும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்துக்கும் சி.சி.டி.வி. வீடியோ பதிவுகளை ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு கடிதம் அனுப்பினார்.

அதற்கு அப்பல்லோ மருத்துவமனை சார்பில் கடந்த 11-ந்தேதி சுருக்கமான பதில் அனுப்பப்பட்டது. அதில் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சி.சி. டி.வி. வீடியோ பதிவுகள் அழிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதில் மேலும் கூறியிருப்பதாவது: அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள சி.சி.டி.வி. சர்வர்களில் ஒரு மாத பதிவுகள் மட்டுமே சேமித்து வைக்க முடியும். அதற்கு மேல் சேமிக்க முடியாது. புதிதாக பதிவுகள் சேரும்போது பழைய பதிவுகள் தானாகவே அழிந்து விடும். எனவே வீடியோ பதிவுகளை தாக்கல் செய்யவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதுபற்றி அப்பல்லோ மருத்துவமனை வக்கீல் மைமூனா பாஷா கூறுகையில், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம் ஜெயலலிதா சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட சி.சி. டி.வி. வீடியோ பதிவுகளை விசாரணை ஆணையம் கேட்டு இருந்தது. அதற்கு உரிய விளக்கம் அளித்து இருக்கிறோம். அதில் தங்களால் வீடியோ பதிவுகளை சமர்ப்பிக்க முடியவில்லை என்பதை தெரிவித்து இருக்கிறோம். முக்கியமான சில இடங்களில் உள்ள சி.சி. டி.வி. பதிவுகளை 30 நாட்களுக்கு மட்டுமே சர்வரில் சேமிக்க முடியும். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போதும் இந்த நிலைமைதான் இருந்தது என்றார்.

இதற்கிடையே அப்பல்லோ மருத்துவமனை சி.சி.டி.வி. பதிவு சர்வரை நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்து அதில் பழைய பதிவுகள் இருக்கிறதா? என்று கண்டுபிடிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது. மேலும் முக்கிய பிரமுகர்கள் சிகிச்சை பெறும் பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் வைப்பதில்லை என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கூறியிருந்தது. இது தொடர்பாக மருத்துவ ஆய்வகங்களிடம் விளக்கம் கேட்டு இருப்பதாக ஆணைய வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

அப்பல்லோ மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் விசாரணை கமி‌ஷன் முன் ஆஜராகி ஏற்கனவே விளக்கம் அளித்துள்ள நிலையில் வருகிற 25-ந்தேதி அவர் மீண்டும் ஆஜராகிறார். அப்போது அவரிடம் சசிகலா வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை செய்கிறார். ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி கமி‌ஷனின் விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. அடுத்த மாதம் (அக்டோபர்) அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Joseph MarketingBlack Forest Cakes

Nalam Pasumaiyagam


New Shape Tailors

Anbu Communications

CSC Computer EducationThoothukudi Business Directory