» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு: கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வியாழன் 12, ஜூலை 2018 9:00:17 AM (IST)கர்நாடகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கர்நாடகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

கர்நாடகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கர்நாடகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் உள்ள முக்கிய அணைகளாக கருதப்படும் கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜ சாகர்), கபினி, ஹாரங்கி, ஹேமாவதி, பத்ரா, துங்கபத்ரா, மல்லபிரபா உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதில் கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டிவிட்டது.

மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் காவிரியின் குறுக்கே அமைந்துள்ள கே.ஆர்.எஸ். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக குடகு மாவட்டம், கேரள மாநிலத்திற்கு உட்பட்ட வயநாடு பகுதிகள் விளங்கி வருகின்றன. அப்பகுதிகளில் இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் காவிரியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

நேற்றைய நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 35 ஆயிரத்து 698 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி கே.ஆர்.எஸ். 115.20 அடியை எட்டி இருந்தது. அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 124.80 அடி ஆகும். அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக உள்ளதால் விரைவில் நிரம்பிவிடும் தருவாயில் உள்ளது. அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 3,657 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

ஏறக்குறைய முழு கொள்ளளவை எட்டிவிட்ட கபினி அணையின் நீர்மட்டம் தற்போது 2,282.22 அடியாக (கடல் மட்டத்தில் இருந்து) உள்ளது. கபினி அணையின் மொத்த நீர்மட்டம் 2,284.00 அடி ஆகும். இந்த அணை மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடுவில் கபிலா ஆற்றின் குறுக்கே அமைந்திருக்கிறது. நேற்றைய நிலவரப்படி கபினி அணைக்கு வினாடிக்கு 40 ஆயிரத்து 363 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 39 ஆயிரத்து 667 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் மதியம் 4 மணிக்கு மேல் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. இதனால் வினாடிக்கு அணையில் இருந்து 50 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கபினி மற்றும் கே.ஆர்.எஸ். ஆகிய இவ்விரு அணைகளில் இருந்து தமிழகத்திற்கு மொத்தம் வினாடிக்கு 53 ஆயிரத்து 657 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்தை பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். காவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீர் வருவதால் ஒகேனக்கல் அருவிகளில் நேற்று 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு தொடர்ந்தது. காவிரி ஆற்றில் புதுவெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்ட நிர்வாகம் பரிசல்களை இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் விதித்துள்ள தடை நேற்றும் நீடித்தது.

கபினி, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்) அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு தற்போது வினாடிக்கு 53,657 கனஅடியாக உயர்ந்து இருப்பதால் இன்று (வியாழக்கிழமை) ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

ஒகேனக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் குறிப்பாக ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் வரை சுமார் 75 கிலோமீட்டர் தூர காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் குளித்தல், துணிதுவைத்தல் உள்ளிட்ட செயல்களை தவிர்க்க வேண்டும். காவிரி ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் ஆற்றங்கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும், என்று சேலம், தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 9-ந்தேதி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1,533 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்தானது படிப்படியாக அதிகரித்து நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 32,284 கனஅடியாக அதிகரித்து உள்ளது. இதன் எதிரொலியாக மேட்டூர் அணையின் நீர்மட்டமும் மளமளவென உயர்ந்து வருகிறது. கடந்த 9-ந் தேதி 63.72 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 65.15 அடியாக உயர்ந்தது. அது நேற்று மேலும் உயர்ந்து காலை 68.42 அடியாக இருந்தது. இது இரவு 70 அடியை எட்டியது. அதாவது அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 5 அடி உயர்ந்துள்ளது.

இந்த நீர்வரத்தானது மேலும் அதிகரிக்குமானால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர வாய்ப்புள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதற்கிடையில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் மத்திய நீர்வள கமிஷன், தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் வெள்ளத்தால் அபாயம் ஏதும் ஏற்படாமல் இருக்க முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

Black Forest CakesNew Shape Tailors


Nalam Pasumaiyagam

CSC Computer Education

Anbu CommunicationsThoothukudi Business Directory