» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மத்திய அரசின் கைக்கூலியாக செயல்படுவதா? அதிமுக அரசுக்கு வைகோ கண்டனம்

புதன் 11, ஜூலை 2018 3:47:31 PM (IST)

மத்திய அரசின் கைக்கூலியாக அதிமுக அரசு செயல்படுவதால்தான் மூலக்கொத்தளம் மொழிப்போர் தியாகிகளின் நினைவிடத்தை அழிக்க நிணைக்கிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர்  வெளியிட்ட அறிக்கை: "சென்னை மூலக்கொத்தளம் பகுதியில், 20 ஏக்கர் பரப்பில் உள்ள மயானத்தில், உயிர் இழந்தோரின் உடல்கள், கடந்த 120 ஆண்டுகளாக எரிக்கப்பட்டும், புதைக்கப்பட்டும் வருகின்றது. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டோரின் விடியலுக்காகவும், செந்தமிழ் மொழியின் தனித்தன்மையை, உரிமையைப் பாதுகாக்கவும், சமூக நீதியைக் காக்கவும், சமதர்ம சமுதாயம் காணவும் போராடிய மாவீரர்களின் உடல்கள், மூலக்கொத்தளம் மயானத்தில்தான் எரிக்கப்பட்டும், புதைக்கப்பட்டும் வந்துள்ளன.

இந்தி எதிர்ப்பு முதல் போரில் சிறை சென்று மடிந்த வீரத் தியாகிகள் தாளமுத்து, நடராசன் இருவரின் நல்லுடல்களும் இங்குதான் எரிக்கப்பட்டன. ராஜா சர் முத்தையச் செட்டியாரும், மேயர் பாசுதேவும், அவ்வுடல்களைச் சுமந்து வந்தனர். அண்ணா மூலக்கொத்தளம் சுடுகாட்டில் எரிகின்ற நெருப்பு, தமிழர்கள் நெஞ்சில் ஒருபோதும் அணையாது என்று உருக்கமாக உரை ஆற்றினார். தமிழ் மொழி உரிமைக்காகவும், சமூக நீதிக்காகவும் போராடிய டாக்டர் தர்மாம்பாள் கல்லறையும் இங்குதான் உள்ளது.

ஈழத்தமிழ் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்த, 2009 ஜனவரி 29 இல், தன் மேனியில் பெட்ரோலை ஊற்றித் தன் உடலைத் தீயின் நாக்குகளுக்கு அர்ப்பணித்த முத்துக்குமார், அவரது உயிர்த்தியாகத்தைச் சுட்டிக்காட்டி, தன் உடம்பில் பெட்ரோல் ஊற்றி எரித்து உயிர் நீத்த அமரேசன் ஆகியோரது உடல்களும் இந்த மயானத்தில்தான் எரியூட்டப்பட்டன. இப்படி, நூற்றாண்டுக்காலத் தமிழர்களின் தியாக வரலாற்றின் அடையாளச் சின்னம்தான் மூலக்கொத்தளம் சுடுகாடு ஆகும்.

அண்ணா 1938 ல் தனது உரையில், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த நடராசனுக்கும், வேறு சமூகத்தில் பிறந்த தாளமுத்துவுக்கும் சிலைகள் எழுப்பி, நாம் வீர வணக்கம் செலுத்த வேண்டும் என்றார். மூலக்கொத்தளம் மயானத்தில் குடிசைமாற்று வாரிய வீடுகள் கட்டும் தமிழக அரசின் திட்டத்தை வகுத்த அதிகாரிகள், தங்கள் குடும்பத்துடன் மயானத்தில் வீடுகள் கட்டி வசிக்க முன்வருவார்களா? தமிழகத்தில் உள்ள இதர நகரங்கள், கிராமங்களில் சுடுகாடுகளில் வீடுகளைக் கட்டி மக்களைக் குடி அமர்த்த முடியுமா? எந்த ஊரிலாவது இதை அனுமதிப்பார்களா?

இந்த மயானத்தைச் சுற்றிப் புதிதாக உருவாகி இருக்கின்ற அடுக்குமாடி வீடுகளில் வசிப்போர், இந்தச் சுடுகாட்டை அகற்றுவதற்காக, அதிகாரிகளைச் சரிக்கட்டி, ஏன் தமிழக அரசையும் சரிக்கட்டி இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முனைந்துள்ளனர். இது ஆதி திராவிட மக்களுக்குச் செய்கின்ற மிகப்பெரிய அநீதி ஆகும். மூலக்கொத்தளம் மயானத்தை சிதைக்கக்கூடாது என்று 06.03.2018 இல் ஈரோடு மாநகரில் நடைபெற்ற மதிமுகவின் 26 ஆவது பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம்.

மூலக்கொத்தளம் மயானத்தை அகற்றும் தமிழக அரசின் முடிவை மாற்ற வேண்டும் என்று அரசியல் எல்லைகளைக் கடந்து, ஆளும் கட்சி தவிர்த்த தமிழ் உணர்வுகொண்ட அனைத்து அரசியல் கட்சியினரும், தமிழ் உணர்வு அமைப்புகளும், தமிழ் உணர்வாளர்களும் கலந்துகொண்ட அறப்போர் ஆர்ப்பாட்டம் அரசுக்கு விடும் முதல் எச்சரிக்கையாக எனது தலைமையில் 13.03.2018 செவ்வாய்க்கிழமை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது.

இந்த அறப்போர் ஆர்ப்பாட்டம் குறித்து, 22.03.2018 அன்று சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோரது கல்லறை அமைவிடத்தில் இருந்து 300 மீட்டர் இடைவெளிக்கு அப்பாலும், மொழிப்போர் தியாகி தருமாம்மாள் அம்மையாரின் கல்லறை அமைவிடத்திலிருந்து 100 மீட்டருக்கு அப்பாலும் மட்டுமே திட்டப் பகுதிக்கான நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.

மொழிப்போர் தியாகிகளின் கல்லறைகளுக்கு எந்த ஊறும் விளைவிக்காமல் இருப்பதே எங்கள் கடமை என்று சட்டமன்றத்தில் கூறிவிட்டு, மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோரது கல்லறைக்கு மிக அருகாமையில் பகுதி 1 இல், மூன்று மீட்டர்கூட இடைவெளி விடாமல், கல்லறை அமைந்துள்ள பகுதியிலேயே திட்டப் பணிகளைத் தொடங்கி உள்ளது சட்டப்பேரவையில் அளித்த உறுதிமொழிக்கு எதிரான மிகப்பெரிய ஏமாற்று வேலையாகும்.

திட்டப் பகுதி குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை எண். 249, நாள் 04.08.2017 சிறப்பு நிபந்தனைகளான 1. காற்று மாசு ஏற்படாமல் அப்பகுதியைக் காத்தல், 2. மயானத்தில் தொன்றுதொட்டு கடைபிடித்து வரும் பழக்க வழக்கங்களுக்கு காப்புறுதி அளித்தல், 3.மயானப் பகுதியில் அமைந்துள்ள கல்லறைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பாதுகாத்தல், 4. சாலை, பொதுக் கழிப்பிடம், பூங்கா, விளையாட்டுத் திடல்கள் தொடர்ந்து இயங்குவதற்கு உத்தரவாதம் அளித்தல், 5. பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும், சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், பொதுக்கழிபபிடங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு இடையூறு செய்யாமல், மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலேயே இருக்க உத்தரவாதம் அளித்தல் ஆகிய சிறப்பு நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை மாவட்ட ஆட்சியரின் புலதணிக்கைக் குறிப்பு, நாள் 15.12.2016 இன் படி நடைபெற்ற புலதணிக்கை ஆய்வில் திட்டப் பகுதி 1 இல், புல எண்.1802/1இல், 2 ஏக்கர் 58 சென்ட் பயன்பாட்டில் உள்ள மயானம் என்றும், திட்டப் பகுதி 2 இல் புல எண்.1802/1இல், வடக்கில் ஒரு ஏக்கர் 96 சென்ட் மயானம் மற்றும் கல்லறைகளாக பயன்பாட்டில் உள்ளது என்றும், கிழக்கில் ஒரு ஏக்கர் 55 சென்ட் இறந்தவர்களைப் புதைக்கும் மயானமாக இருந்து, தற்போது புதர்களாக உள்ள பகுதி என்றும், பகுதி 3 இல் ஒரு ஏக்கர் 43 சென்ட் பழைய சமாதிகள் மற்றும் கல்லறைகள் உள்ள பகுதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கொத்தளம் மயான பூமியில் 2016 ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத பிணங்கள் 315, மற்றும் 2,417 பிணங்கள் அடக்கம் மற்றும் தகனம் செய்யப்பட்டதாகவும், 2017 ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத பிணங்கள் 448 மற்றும் 2500 பிணங்கள் அடக்கம் மற்றும் தகனம் செய்யப்பட்டதாகவும், நடப்பு 2018 ஆம் ஆண்டில் மே மாதம் வரை அடையாளம் தெரியாத பிணங்களாக 250 மற்றும் 954 பிணங்கள் அடக்கம் மற்றும் தகனம் செய்யப்பட்டதாகவும் கோட்டம் 53, மண்டலம் 5, பொது சுகாதாரத்துறை மண்டல நல அலுவலர் தகவல் அளித்துள்ளார்.

ஆனால் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அந்த 11 ஏக்கர் இடத்தில் எந்த ஒரு நினைவுச் சின்னமும் கிடையாது. அந்த இடங்களில் இதுநாள்வரை ஒரு பிணம்கூட புதைக்கப்படவில்லை என்று சட்டமன்றத்தில் குறிப்பிட்டு, நிலைமைகளை திசை திருப்பி, பண்நெடுங்காலமாக பயன்பாட்டில் இருக்கும் மயானப் பகுதியை சட்ட விதிகளுக்குப் புறம்பாகவும், பழக்கம் மற்றும் வழக்காறுகளுக்குப் புறம்பாகவும், மாவட்ட ஆட்சியர் புலதணிக்கைக்கு மாறான தகவல்களை அளித்திருக்கிறார்.

அரசாணை மற்றும் புலத்தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதி 1, பகுதி 2, பகுதி 3 ஆகிய இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கல்லறைகள் மற்றும் உறைவிடங்களை சட்டத்துக்குப் புறம்பாகவும், அரசாணைக்குப் புறம்பாகவும் அகற்றி, திட்டப் பணிகளை தமிழக அரசு அவசர கதியில் செய்து வருகிறது. சட்ட விதிகளுக்கும், சட்டமன்ற அறிவிப்புக்கும் எதிராக பணிகளைத் தொடங்கி இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகப் போராடிய மொழிப்போர் தியாகிகளின் கல்லறைகளை மதிக்க வேண்டிய தமிழக அரசு, திராவிட இயக்கக் கொள்கைகளை குழிதோண்டிப் புதைக்கும் செயலில் ஈடுபடுவது எந்த வகையில் நியாயமானதாகும்? டெல்லியில் அமைந்துள்ள மத்திய அரசு தமிழர் பண்பாட்டின் அடித்தளத்தை அழிக்கும் உள்நோக்கத்தோடு, பல முனைகளிலும் தாக்குதல் தொடுத்து வருகின்ற வேளையில், தமிழகத்தின் ஆட்சிப்பொறுப்பில் உள்ள அதிமுக, மத்திய அரசின் கைக்கூலியாகச் செயல்படுவதால்தான் மொழிப்போர் தியாகிகள் நினைவிடம் அமைந்துள்ள மூலக் கொத்தளம் மயானத்தை இடித்து அகற்ற முடிவு செய்துள்ளது.

மூலக்கொத்தளம் சுடுகாட்டை இடித்து, குடியிருப்புகள் கட்டும் திட்டத்தைத் தமிழக அரசு உடனடியாகக் கைவிட்டு, மக்கள் வாழும் தகுதியான பகுதியில் நல்ல தரமான குடியிருப்புகளை அமைத்துத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன். இல்லையேல், உணர்ச்சிக் கொந்தளிப்பான அறப்போரைச் சந்திக்க நேரிடும். அதனால் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் தமிழ்நாடு அரசுதான் பொறுப்பு ஆகும்” என்று வைகோ எச்சரித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

CSC Computer Education

Anbu Communications


Nalam Pasumaiyagam

Black Forest Cakes


Joseph Marketing
Thoothukudi Business Directory