» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தீபா கணவர் மாதவனுடன் எனக்கு தொடர்பில்லை: போலி வருமான வரித் துறை அதிகாரி திடீர் பல்டி

புதன் 14, பிப்ரவரி 2018 11:42:40 AM (IST)

ஜெ.தீபாவின் கணவர் மாதவனுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும் தான் கூறிய வாக்குமூலம் உண்மையில்லை என்றும் போலி வருமான வரித்துறை அதிகாரி பிரபாகரன் திடீர் பல்டி அடித்துள்ளார்.

தி.நகரில் உள்ள ஜெ.தீபா வீட்டில், கடந்த சனிக்கிழமை அன்று வருமானவரி அதிகாரி மித்தேஷ் குமார் என்ற பெயரில் சர்ச் வாரண்டுடன் ஒருவர் வந்திருந்தார். அவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் இருந்ததால் போலீஸுக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீஸ் வந்து விசாரணை நடத்தியபோது அந்த இளைஞர் தப்பியோடினார். இதுகுறித்து தீபா கணவர் மாதவன் மாம்பலம் போலீஸில் புகார் அளித்தார். மேலும் தப்பியோடிய நபரை பிடித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

விசாரணையில் அவர் பெயர் பிரபாகரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து மாம்பலம் காவல் நிலையத்தில் அவராகவே வந்து சரணடைந்துள்ளார். அவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது கொடுத்த வாக்குமூலத்தில், வருமானவரி சோதனை நாடகத்திற்கு பின்னணியில் செயல்பட்டவர் ஜெ.தீபாவின் கணவர் மாதவன் என்று குறிப்பிட்டிருந்தார். தனக்கு சினிமா வாய்ப்பு வாங்கி தருவதற்கான மாதவன் ஒத்திகை நடத்தியதாகவும் அவர் கூறியிருந்தார். அவர் கொடுத்த வாக்குமூலம், வீடியோ காட்சியாக தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது.

தீபாவிடம் உள்ள சொத்துகளின் ஆவணங்களை கைப்பற்றவே இது போல் ஒரு டிராமாவை மாதவன் நடத்தியதாக கூறப்படுகிறது. பிரபாகரன் வாக்குமூலம் அளித்த நிலையில் மாதவனிடம் விசாரணை நடத்த அவரை தேடிய போது அவர் தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது. சுமார் 3 நாட்களாக அவர் தலைமறைவாகவே உள்ளார். கைதான போலி வருமானவரி அதிகாரி பிரபாகரன் திடீரென்று பல்டி அடித்து நான் கொடுத்த வாக்குமூலத்தில் உண்மை இல்லை என்றும், ஜெ.தீபாவின் கணவர் மாதவனுக்கு அதில் தொடர்பு இல்லை என்றும் போலீஸாரிடம் கூறியிருப்பதாக புதிய தகவல்கள் நேற்று வெளியானது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில் இதையடுத்து பிரபாகரனுடம் தொடர்புடைய 3 பேரிடம் விசாரணை நடத்தினோம். அவர்களில் ஒருவர் புதுச்சேரியைச் சேர்ந்த ஆனந்தவேல் என்பவர். அவர் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தி வந்தார். அவரை பிடித்து விசாரித்தபோது, பிரபாகரன் வருமானவரி அதிகாரி போன்ற அடையாள அட்டை, வருமானவரித்துறையினரின் வாரண்டு போன்றவற்றை போலியாக தயாரித்தது ஆனந்தவேல் நடத்தும் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தான் என்று தெரியவந்தது. மேலும் இந்த விவகாரத்தில் மாதவனுக்கு தொடர்பு இல்லை என்றும், பிரபாகரன் தான் போலி அடையாள அட்டை, போலி வாரண்டு போன்றவற்றை தயாரித்தார் என்றும் ஆனந்தவேல் குறிப்பிட்டார். போலி அடையாள அட்டை மற்றும் போலி வாரண்டு போன்றவற்றை தபால் மூலமாக மாதவன் தனக்கு அனுப்பி வைத்ததாக பிரபாகரன் தெரிவித்தார்.

குறிப்பிட்ட கூரியர் நிறுவனத்தில் விசாரித்தபோது அதுபோன்ற தபால் எதையும் அனுப்பவில்லை என்று தெரியவந்தது. மேலும் வாட்ஸ்-அப் வாயிலாகத்தான் மாதவன் தன்னிடம் செல்போனில் பேசினார் என்று பிரபாகரன் குறிப்பிட்டார். அதுபற்றி ஆய்வு செய்தபோது அதுவும் உண்மை இல்லை என்று தெரியவந்தது. அதன்பிறகு பிரபாகரன் கூறியது பொய் என்று தெரியவந்ததால் அவரிடம் விசாரிக்க வேண்டிய முறையில் தீவிரமாக விசாரித்தோம். அதன்பிறகு தான் கூறியது அத்தனையும் பொய் என்று பிரபாகரன் ஒப்புக்கொண்டார்.

ஷேர் மார்க்கெட் தொழிலில் பிரபாகரனுக்கு ரூ. 20 லட்சம் கடன் ஏற்பட்டதாகவும் அதை அடைப்பதற்காக வருமான வரித் துறை அதிகாரி போல் தீபா வீட்டுக்கு சென்று பணம் பறிக்க இதுபோல் நாடகத்தை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரபாகரனுக்கு பின்னணியில் வேறு யாராவது இருக்கிறார்களா? என்பது பற்றி மேலும் தீவிரமாக விசாரிக்க உள்ளோம். நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை மேலும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.

மாதவன் தவறு செய்யவில்லை என்றால் அவர் ஏன் தலைமறைவாக வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரபாகரன் போலீஸாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலம் தனக்கு எதிராக இருந்ததால், போலீஸார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் கைது நடவடிக்கையை தவிர்க்க மாதவன் தலைமறைவாகி இருக்கலாம் என்று தெரிகிறது. இதற்கு மாதவன் விளக்கம் அளிப்பார் என்று நம்பப்படுகிறது. பிரபாகரனுக்கு சொந்தமான ஹோட்டலில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing

crescentopticals

New Shape Tailors

CSC Computer EducationThoothukudi Business Directory