» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இந்தியாவிலேயே முதல்முறை..தமிழ்நாடு அரசு கேபிள் டிவிக்கு டிஜிட்டல் உரிமம்: பிரதமருக்கு முதல்வர் நன்றி

செவ்வாய் 18, ஏப்ரல் 2017 5:00:03 PM (IST)

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் டிஜிட்டல் உரிமம் வழங்கியுள்ளது. இந்தியாவிலேயே மாநில அரசின் நிறுவனத்திற்கு டிஏஎஸ் உரிமம் வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு எடுத்த பல்வேறு தொடர் நடவடிக்கைகளின் காரணமாகவும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு மத்திய அரசு டிஜிட்டல் உரிமம் வழங்கியுள்ளது. இதற்கான ஆணையினை மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் 17.4.2017 அன்று வெளியிட்டது.

அரசு கேபிள் டிவி நிறுவனம் 4.10.2007 அன்று துவக்கப்பட்டது. குறைந்த கட்டணத்தில் நிறைவான கேபிள் டிவி சேவையை பொதுமக்களுக்கு வழங்குவதே இதன் நோக்கம் ஆகும். இதற்கென, தஞ்சாவூர், திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் வேலூர் ஆகிய நான்கு இடங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டன. பல்வேறு காரணங்களினால் இந்நிறுவனம் செயலிழந்த நிலையில் இருந்தது.

ஜெயலலிதா மே 2011-ல் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், அரசு கேபிள் டிவி நிறுவனத்தை புனரமைத்து, புத்துயிரூட்டி "தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்” என்று பெயர்மாற்றம் செய்தார்கள். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவையை சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் 2.9.2011 அன்றும், சென்னை மாநகர ஒளிபரப்பு சேவையை 20.10.2012 அன்றும் துவக்கி வைத்தார்கள். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தற்பொழுது குறைந்த கட்டணத்தில் 90-100 சேனல்களை உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. 

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கேபிள் டிவி சேவை, கேபிள் ஆபரேட்டர்களிடமும் பொதுமக்களிடமும் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 2.9.2011 அன்று 4.94 லட்சங்கள் என இருந்த இந்நிறுவனத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை மாண்புமிகு அம்மாவின் அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக 70.52 லட்சமாக உயர்ந்துள்ளது. அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், சென்னை மாநகரப் பகுதிகளுக்கு மட்டும் சிஏஎஸ் முறையிலான பன்முக கேபிள் ஆபரேட்டர் உரிமத்தினை வழங்கியது.

கேபிள் டிவி நெட்வொர்க் திருத்தச் சட்டம் 2011-ன்படி முதல் கட்டமாக சென்னை உள்ளிட்ட இந்தியாவிலுள்ள நான்கு பெருநகரங்களை 31.10.2012-க்குள் டிஜிட்டல் மயமாக்கிட வேண்டும் என்றும், நாடு முழுவதும் 31.12.2016-க்குள் டிஜிட்டல் மயமாக்கிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் டிஜிட்டல் மயமாக்கலுக்குத் தேவையான, சென்னை பகுதிகளுக்கான டிஏஎஸ் உரிமம் வழங்கக் கோரி 5.7.2012 அன்றும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கு டிஏஎஸ் உரிமம் வழங்கக் கோரி 23.11.2012 அன்றும், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் விண்ணப்பித்திருந்தது.

இது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அமைப்பின் கவனத்திற்குக் கொண்டு சென்றது. இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரை குறித்து முடிவெடுப்பதற்காக, அமைச்சகங்களின் கூட்டுக்குழுவினை 3.1.2013 அன்று மத்திய அரசு அமைத்தது.

முதலமைச்சர் 16.12.2012 அன்று அப்போதைய பாரதப் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு டிஏஎஸ் பகுதிகளுக்கான டிஏஎஸ் உரிமம் (டிஜிட்டல் உரிமம்) வழங்கிட தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கு அறிவுறுத்துமாறு கோரியிருந்தார். அதனைத் தொடர்ந்து பிரதமரை நேரில் சந்தித்தும் கோரிக்கை விடுத்தார்.

மேலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர், தகவல் தொழில்நுட்பவியல் துறையின் செயலாளர் மற்றும் இந்நிறுவனத்தின் உயர் அலுவலர்கள், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சரை 8.12.2014 அன்று புதுடில்லியில் நேரில் சந்தித்து டிஏஎஸ் உரிமம் வழங்குவதை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தினர்.

இதற்கிடையே, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சென்னை டிஏஎஸ் பகுதிகளுக்கும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கும் எம்.எஸ்.ஒ உரிமம் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் நிலுவையில் இருந்த நிலையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு தற்காலிக உரிமம் உடனடியாக வழங்குமாறு 29.10.2015 அன்று விண்ணப்பிக்கப்பட்டது.

பின்னர் முதல்வர் 14.6.2016 அன்று பாரதப் பிரதமரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு டிஏஎஸ் பகுதிகளுக்கான எம்.எஸ்.ஒ உரிமம் வழங்குவது குறித்து மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.மேலும், முதலமைச்சர் அவர்கள் 27.2.2017 அன்று பாரதப் பிரதமரையும், 28.2.2017 அன்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் வெங்கைய நாயுடுவையும் நேரில் சந்தித்து டிஏஎஸ் உரிமம் வழங்குவது குறித்து வலியுறுத்தினார்கள்.

இந்நிலையில், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு டிஏஎஸ் உரிமம் வழங்கி ஆணையிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்கியதற்கு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, பிரதமருக்கும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சருக்கும் தமிழக அரசு சார்பாகவும், தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும் தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Adscrescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Joseph Marketing


New Shape Tailors

Thoothukudi Business Directory