» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் தீவிரம்: இன்று 50 கிராமங்களில் கடையடைப்பு

புதன் 11, ஜனவரி 2017 5:08:54 PM (IST)



ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரை, கோவை, சென்னை, நெல்லை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. 50 கிராமங்களில் கடையடைப்பு நடத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொங்கல் தினத்தன்று மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசல்களில் அணிவகுத்து வரும். அதனை அடக்க நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள். இந்த வீர விளையாட்டு கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெறவில்லை. 

மாடுகள் துன்புறுத்தப்படுகிறது, உயிர் இழப்புகள் ஏற்படுகிறது என்ற காரணத்தால் "பீட்டா” அமைப்பு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் விதித்த தடையால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்டு உள்ளது. இது தமிழர்கள் கலாச்சாரத்திற்கு விடுக்கப்பட்ட சவாலாக கருதி, தமிழகத்தில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் கட்டாயம் நடத்தப்பட்டே ஆக வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி மாணவர்கள் அமைப்புகளும் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளன.

சென்னை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டத்தை முன்னெடுத்து உள்ளனர். இதனால் ஜல்லிக்கட்டின் தாக்கம் அதிகரித்துள்ளது. உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, இந்த ஆண்டு கண்டிப்பாக நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் மதுரை மாவட்ட மக்கள் காத்திருக்கிறார்கள். இதற்காக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டை திட்டமிட்டபடி நடத்த மத்திய, மாநில அரசுகள் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டை நடத்த உச்சநீதிமன்றத்தில் உரிய உத்தரவுகளை பெற்றுத்தர வேண்டும், "பீட்டா” அமைப்பை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை, கோவை, சென்னை, நெல்லை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. மதுரையில் இன்று 2-வது நாளாக மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மதுரை அருகே உள்ள தனிச்சியம், மேலூர் ஆகிய இடங்களிலும் இன்று மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு போராட்டத்தில் குதித்தனர். மாணவர்களுடன் சேர்ந்து பொதுமக்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.

மேலூர் அருகே உள்ள வெள்ளலூர், கோட்ட நத்தம்பட்டி, உறங்கான்பட்டி, அம்பலக்காரன்பட்டி, புதுப்பட்டி, மேலவலசை, இடையவலசை, குறிஞ்சிபட்டி உள்ளிட்ட 50 கிராமங்களில் கடையடைப்பு நடத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். கிராமங்களில் இருந்து ஒன்றுதிரண்டு ஊர்வலமாக மேலூரில் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் உச்சக்கட்டதை எட்டி உள்ளது. உரிய அனுமதி கிடைக்காவிட்டால், தடையை மீறி, ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவோம் என்று ஆர்வலர்கள் அறிவித்துள்ளனர். இதனால் மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு கிராமங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழர் திருநாளில் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டால்தான், மக்களின் கலாச்சாரம் மட்டுமின்றி பொங்கல் பண்டிகையின் நோக்கமே நிறைவேறும் என்று மாடு பிடி வீரர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உச்சநீதிமன்றம் இன்னும் 48 மணி நேரத்தில் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

selvam aqua

Sterlite Industries (I) Ltd

CSC Computer Education

New Shape Tailors

Johnson's Engineers


Universal Tiles Bazar


Nalam Pasumaiyagam





Thoothukudi Business Directory