» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மீனவர்கள் திடீர் சாலை மறியல்: 6-வது நாளாக விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை!
சனி 15, பிப்ரவரி 2025 10:38:34 AM (IST)

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 270 விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக மீன்கள் சரிவர கிடைக்காததால் ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 10-ம் தேதி முதல் விசைப்படகு மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று 6-வது நாளாக விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக சுமார் 270 விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் ரூ.10 கோடிக்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில், மீனவர்களின் போராட்டத்தை கண்டுகொள்ளாத மீனவளத்துறை அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒருங்கிணைந்த அனைத்து விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சேவியர் வாஸ் தலைமையில் 50 பெண்கள் உட்பட 300 பேர் மீன்வளத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் திடீரென்று புதிய துறைமுகம் பீச் ரோட்டில் தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பி மதன், இன்ஸ்பெக்டர்கள் திருமுருகன் பாஸ்கரன், ஜெயந்தி சப் இன்ஸ்பெக்டர் காமராஜ், மற்றும் மீன் வள துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு செல்ல மீனவர்கள் முடிவு
இதனைத் தொடர்ந்து மீனவ பிரதிநிதிகளுடன் தூத்துக்குடி சப்-கலெக்டர் பிரபு பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், சுமூக உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மீனவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். நாளை மாவட்ட ஆட்சியர் உடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதில் சுமூக உடன்பாடு ஏற்படாத பட்சத்தில் அனுமதியின்றி ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு செல்ல உள்ளதாக விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முன் விரோதத்தில் தாக்கிய வழக்கில் 6 பேர் கைது: தவறி விழுந்ததில் 2 பேருக்கு கை எலும்பு முறிவு
வியாழன் 13, மார்ச் 2025 9:50:47 PM (IST)

நுண் உர செயலாக்க மையங்களில் மேயர் ஆய்வு
வியாழன் 13, மார்ச் 2025 9:43:29 PM (IST)

நெல்லை-திருச்செந்தூர் இடையே 2 ரயில்கள் மார்ச் 20 முதல் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
வியாழன் 13, மார்ச் 2025 8:36:12 PM (IST)

போதையில்லாத தமிழகம் விழிப்புணர்வு பேரணி: எஸ்பி ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்தார்
வியாழன் 13, மார்ச் 2025 8:15:38 PM (IST)

நில ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் : விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 13, மார்ச் 2025 8:11:28 PM (IST)

மேயரின் இல்லத்தில் தூய்மைப் பணியாளர்கள் முற்றுகைப் போராட்டம் : தூத்துக்குடியில் பரபரப்பு
வியாழன் 13, மார்ச் 2025 4:16:47 PM (IST)
