» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை : வியாபாரி கைது!
ஞாயிறு 8, டிசம்பர் 2024 8:05:43 PM (IST)
சாத்தான்குளம் அருகே மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற வியாபாரியை போலீசார் கைது செய்து, 35 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளர் எட்வின் அருள்ராஜ் தலைமையிலான போலீசார் நேற்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேல அம்பலச்சேரி பகுதியில் உள்ள மளிகை கடையில் சோதனை நடத்தினர்.
இதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைபொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடையில் விற்பனைக்கு வைத்திருந்த 35 கிலோ மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து கடை உரிமையாளர் அம்பலச்சேரியை சேர்ந்த கோயில் பிச்சை மகன் சின்னப்பா (38) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.