» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: வாலிபர் பலி!
ஞாயிறு 8, டிசம்பர் 2024 9:34:57 AM (IST)
தூத்துக்குடி அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி ஸ்பிக் நகர் எம். சவேரியார்புரம் வேத கோவில் தெருவைச் சேர்ந்தவர் மரியராஜன் மகன் விஸ்வராஜ் (36). கட்டிட தொழிலாளியான இவர் தற்போது நாசரேத் அருகிலுள்ள இடையன்விளையில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர் சம்பவத்தன்று காலையில் தூத்துக்குடி ஸ்பிக் நகருக்கு கட்டிட வேலைக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். முக்காணி புதிய பாலத்தில் சென்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த விஸ்வராஜை ஆத்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விஸ்வராஜின் மனைவி தீபா ஏஞ்சல் கொடுத்த புகாரின் பேரில், ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.