» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்: 19 தீர்மானங்கள் நிறைவேற்றம்
வெள்ளி 6, டிசம்பர் 2024 4:14:01 PM (IST)
வரதம்பட்டி கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் தொடர்பான சமூகத்தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு சமூக தணிக்கை சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் 23 கட்டங்களாக சமூக தணிக்கை நடைபெற்று வருகிறது.இதில் 12வது கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியத்தில் 19 கிராம ஊராட்சிகளில் டிச-2ம் தேதி முதல் 6ம் தேதி வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்,பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் கிராம வள பயிற்றுநர்களால் சமூகத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான சமூகத் தணிக்கை அறிக்கை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம்.கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், வரதம்பட்டி கிராம ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு கூட்டத் தலைவர் காளீஸ்வரி தலைமை வகித்தார்.ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன் ,சமூகத் தணிக்கை வட்டாரவள பயிற்றுனர் மணி,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி செயலர் கதிர்வேல்முருகன் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட சமூகத் தணிக்கை மாவட்ட வள அலுவலர் மணி கலந்துகொண்டு சமூக தணிக்கை அறிக்கை தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடல் செய்தார். கூட்டத்தில் சமூகத் தணிக்கை அறிக்கை குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் பஞ்.துணைத் தலைவர் வெள்ளத்துரை மக்கள் நலப்பணியாளர் கோமு.கிராம வள பயிற்றுநர்கள்,பணித்தள பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் சின்னமலை குன்று,துறையூர் உள்பட தூத்துக்குடி மாவட்டத்தில் 19 ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.