» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஆட்டோ கண்ணாடி உடைப்பு : ஆயுதங்களுடன் 10 பேர் கும்பல் அட்டகாசம்!
வெள்ளி 6, டிசம்பர் 2024 11:35:02 AM (IST)
தூத்துக்குடியில் நள்ளிரவில் ஆயுதங்களுடன் வந்து ஆட்டோ கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி கே.வி.கே., நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மகிழ்ச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது 2 கோஷ்டிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் 10 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி உள்பட ஆயுதங்களுடன் மகிழ்ச்சிபுரத்தைச் சேர்ந்த நாராயணன் மகன் லட்சுமி நாராயணன் என்பவரை தேடி அவரது வீட்டுக்கு சென்றனர்.
அவர் வீட்டில் இல்லாததால் அவர் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அவரது ஆட்டோவை அடித்து நொறுக்கி கண்ணாடிகளை சேதப்படுத்தி, வீட்டுக்குள் கற்களை தூக்கி வீசினார்களாம். மேலும் அந்த தெருவில் சாலையோரம் நிறுத்தியிருந்த வாகனங்களையும் சேதப்படுத்தினார்களாம்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட போலீஸ் எஸ்பி ஆல்பர்ட் ஜான், ரூரல் டிஎஸ்பி சுதிர், சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சைரஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் அந்தப் பகுதியில் பதட்ட நிலை உருவானதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்
இது சம்பந்தமாக ஆட்டோ டிரைவர் நாராயணன் கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து 10 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது