» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் : கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
செவ்வாய் 15, அக்டோபர் 2024 8:24:55 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதன்மைச் செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கோ.பிரகாஷ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (15.10.2024) வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் / முதன்மைச் செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கோ.பிரகாஷ் தலைமையில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், முன்னிலையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவித்ததாவது: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கடந்த ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் பெரியளவில் பாதிப்பை சந்தித்தபோது, போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகள், நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உயர்நிலை இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களை எல்லாம் நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்கள்.
அந்த நிவாரணப் பணிகளில் நானும் ஈடுபட்டேன். அந்த சமயம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, போக்குவரத்துத்துறை, மின்சாரத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நீர்வளத்துறை, பொது சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களும் ஒவ்வொரு குழுவாக சிறப்பாகப் பணிகளை மேற்கொண்டனர். அதே உத்வேகத்துடன் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பெய்த மழை அளவு குறித்தும், மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளில் உள்ள நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து குறித்தும், நீர் வெளியேறும் அளவும் மேற்கண்ட அணைகளின் மூலம் எந்தெந்த கண்மாய்களுக்கு நீர் செல்கிறது என்பது குறித்தும், மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் நீர் இருப்பு குறித்தும் கேட்டறிந்து, அனைத்து நீர் பிடிப்புப் பகுதிகள், கண்மாய்கள் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்கும், தேவையான அளவு மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்து கொள்ளவும், அணைகளில் சேமிக்கப்படும் நீர் மற்றும் உபரிநீரை முறையாக கண்மாய்களுக்கு பகிர்ந்தளிப்பது குறித்தும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள்.
மேலும், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் / முதன்மைச் செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் நடைபெற்ற ஆய்வின்போது, கடந்த ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக கோரம்பள்ளம் கண்மாயில் ஏற்பட்ட உடைப்பினை ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிரந்தர சீரமைப்புப் பணிகள் குறித்தும், கோரம்பள்ளம் ஆற்றின் இருபுறங்களிலும் (உப்பாத்து ஒடை) ரூ.5.91 கோடி செலவில் நடைபெற்று வரும் கரைகள் பலப்படுத்தும் பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் விரிவாக எடுத்துரைத்தார்கள்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அவசர கால செயல்பட்டு மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது எனவும், கூடுதலாக தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ஒரு அவசர கால செயல்பட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது எனவும், மாவட்டத்தில் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ள 36 இடங்களை வட்டாட்சியர்களால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது எனவும்,
அவசர காலங்களில் பொதுமக்களுக்கு அளிக்க வேண்டிய முதலுதவி தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டு 3500 முதல் நிலை மீட்புப் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர் எனவும், 97 புகலிட மையங்கள் கண்டறியப்பட்டு தயார்நிலையில் உள்ளது எனவும், ஜெனரேட்டர்கள், பம்பு செட்டுகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள் ஆகியவற்றை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் மூலமாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது எனவும், அவசரகால உபகரணங்களை பாதிப்பிற்கு உள்ளாகும் இடங்களுக்கு எளிதில் கொண்டு செல்ல ஏதுவாக இடங்களை தேர்வுசெய்து அந்த இடங்களில் உபகரணங்களை பாதுகாப்பாக வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும்,
ஜேசிபி இயந்திரங்களை வைத்துள்ளவர்களின் தொலைபேசி எண்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது எனவும், மணல் மூடைகள் போதிய அளவில் இருப்பு உள்ளதாகவும், மணல் மூடைகளை பாதிப்பிற்கு உள்ளாகும் இடங்களுக்கு எளிதில் கொண்டு செல்ல ஏதுவாக இடங்களை தேர்வு செய்து அந்த இடங்களில் மணல் மூடைகளை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது எனவும்,
மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர் எனவும், பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ள இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அலுவலர்கள் மூலமாக பேரிடர் காலங்களில் தற்காத்தல் மற்றும் எதிர்கொள்ளுதல் குறித்து செயல்முறை விளக்க ஒத்திகைப் பயிற்சி நடத்தப்பட்டது எனவும், மேலும், வருகின்ற 21ஆம் தேதி தேசிய பேரிடர் மீட்புப் பணியாளர்கள் மூலமாக செயல்முறை விளக்க ஒத்திகைப் பயிற்சி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது எனவும், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு ஏதுவாக பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைத்து குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவத்தார்.
மேலும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலமாக நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் சீரமைப்புப் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைவாக முடிக்க வேண்டும் என்றும், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் / முதன்மைச் செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.
முன்னதாக, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காலாங்கரை கிராமம் கோரம்பள்ளம் கண்மாயில், கடந்த வருடம் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கோரம்பள்ளம் கண்மாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிரந்தர சீரமைப்புப் பணிகளையும், தொடர்ந்து, தூத்துக்குடி வட்டத்திற்குட்பட்ட காலங்கரை - அத்திமரப்பட்டி வழியாக செல்லும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கோரம்பள்ளம் ஆற்றின் (உப்பாத்து ஒடை) குறுக்கே நெடுஞ்சாலைத்துறை, நபார்டு மற்றும் கிராம வங்கியின் மூலம் ரூ.14.88 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றும் வரும் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகளையும், கோரம்பள்ளம் ஆற்றின் இருபுறங்களிலும் (உப்பாத்து ஒடை) ரூ.5.91 கோடி செலவில் நடைபெற்று வரும் கரைகள் பலப்படுத்தும் பணிகளையும் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் / முதன்மைச் செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கோ.பிரகாஷ், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இக்கூட்டத்தில், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம், வருவாய் கோட்டாட்சியர்கள் ம.பிரபு, மகாலட்சுமி, சுகுமாறன் உட்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.