» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சூரசம்ஹாரம் விழாவிற்கு 4ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு : எஸ்பி ஆய்வு!
வியாழன் 10, அக்டோபர் 2024 8:35:03 PM (IST)
குலசேகரன்பட்டினம் சூரசம்ஹாரம் விழாவிற்கு சுமார் 4ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கடந்த 03.10.2024 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 12.10.2024 வரை நடைபெறவுள்ளது. கடந்த 03.10.2024 அன்று தசரா திருவிழாவின் முதல் நாள் கொடியேற்ற நிகழ்வின்போது சுமார் 850 காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டு இருந்தனர்.
3 லட்சத்திற்கும் அதிமாக பக்தர்கள் கலந்து கொண்ட இந்த கொடியேற்ற நிகழ்ச்சி காவல்துறையினரின் முன்னேற்பாடுகளால் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்நிலையில் 03.10.2024 அன்று கொடியேற்ற நிகழ்வின்போது 3 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை, தற்போதும் தசரா திருவிழாவிற்கு தினசரி பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வருவது போல் சமூக வலைதளங்களில் பரவி வருவதற்கு மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும் 12.10.2024 அன்று நடைபெறும் சூரசம்காரம் நிகழ்விற்கு சுமார் 4000 காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதன் முன்னேற்பாடுகளாக கோவில் வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 50 க்கும் மேற்பட்ட பகுதிகளில் மொத்தம் 250-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை பொருத்தி பக்தர்களின் பாதுகாப்பை மேம்படுத்தியும், பக்தர்களின் தேவைகள் மற்றும் சந்தேகங்களை பூர்த்தி செய்வதற்காக ஆங்காங்கே 10 காவல் உதவி மையங்கள் (May I help You) அமைத்தும், பக்தர்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, அவசர மருத்துவ உதவி மையம், கழிப்பிட வசதிக்காக ஆங்காங்கே நடமாடும் கழிப்பறை வசதிகள் (Mobile Toilet) அமைக்கப்பட்டும், தீயணைப்பு துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் 24 மணி நேரமும் பொதுமக்களின் சேவைக்காக வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
ஆகவே பக்தர்கள், தசரா குழுக்கள் பாதுகாப்பான முறையில் சுவாமி தரிசனம் செய்யவும், அவர்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, மாவட்ட நிர்வாகம், இந்து அறநிலையத்துறை இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாறு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.