» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடிக்கு 900 டன் டிஏபி உரம் வருகை: 72 வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பிவைப்பு
ஞாயிறு 6, அக்டோபர் 2024 9:24:59 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஒடிசா மாநிலத்திலிருந்தும், ஸ்பிக் நிறுவனத்திலிருந்தும் வந்த 900 டன் டிஏபி உரம், மாவட்டத்திலுள்ள 72 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட வேளாண் இணை இயக்குநர் வே. பாலசுப்ரமணியன் கூறியது: தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், புதூர், ஓட்டப்பிடாரம், கருங்குளம் வட்டங்களில் ராபி பருவத்தில் சுமார் 1.60 லட்சம் ஹெக்டேரில் மக்காச்சோளம், பயறு வகைகள், சிறுதானியங்கள், பருத்தி, எண்ணெய்வித்துப் பயிர்கள், மிளகாய், வெங்காயம் ஆகியவை மானாவாரியாக பயிரிடப்படுகின்றன.
தற்போது பெய்த மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் சாகுபடிப் பணிகளை தொடங்கியுள்ளனர். இதனிடையே, அடி உரமாக பயன்படும் டிஏபி உரத்தை போதிய அளவு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்புவைக்குமாறு விவசாயிகள், விவசாயச் சங்கங்கள் கோரிக்கை வைத்தன. அதனடிப்படையில், ஆட்சியர் க. இளம்பகவத் அறிவுரைப்படி, ஒடிசா மாநிலத்திலிருந்து ரயிலில் 600 டன், தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்திலிருந்து 300 டன் என மொத்தம் 900 டன் டிஏபி உரம் வந்துள்ளது.
இது, மாவட்டத்திலுள்ள 72 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், ஓமனிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு 3 மாநிலங்களுக்கான டிஏபி உரம் 43 ஆயிரம் டன் கப்பலில் வந்துள்ளது. தற்போது இந்த உரத்தை இறக்கி, பைகளில் நிரப்பும் பணி நடைபெறுகிறது. இதிலிருந்து மாவட்டத்தில் அடிஉரம் தேவையான அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும் திங்கள்கிழமைக்குள் (அக். 7) அனுப்பப்படும்.
விவசாயிகள் உரம் வாங்கச் செல்லும்போது கண்டிப்பாக ஆதார் அட்டையை எடுத்துச் சென்று விற்பனை முனையக் கருவியில் ரசீது பெற வேண்டும். ஒரு மூட்டை டிஏபி உரத்துக்கு அரசின் நிர்ணய விலை ரூ. 1,350. இதற்கு கூடுதலாக விற்பனை செய்யும் கடைகள் மீது உரிமம் ரத்து உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.