» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சொத்து வரி உயர்வை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் : எஸ்.பி.சண்முகநாதன் அறிவிப்பு
சனி 5, அக்டோபர் 2024 9:37:06 PM (IST)
தொடர்ந்து வரும் சொத்து வரி உயர்வை கண்டித்து தூத்துக்குடியில் அதிமுக சார்பில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என்று தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் கடந்த 40 மாதகாலமாக பல்வேறு இன்னல்களை மக்கள் சந்தித்து வருவதற்குக் காரணமான திரு. ஸ்டாலினின் திமுக அரசைக் கண்டித்தும், உயர்த்தப்பட்ட சொத்து வரியை மக்கள் நலன் கருதி உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், கழக நிரந்தர பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தமிழர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தமிழ்நாடு முழுவதும் 08.10.2024 அன்று மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடத்திட ஆணையிட்டுள்ளார்.
அதன்படி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், எனது தலைமையில் வரும் 08.10.2024 செவ்வாய் கிழமை காலை 10.00 மணியளவில் தூத்துக்குடி புதிய மாநகராட்சி அலுவலகம் முன்பு, மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற உள்ளது. இதே போல் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட காயல்பட்டிணம், திருச்செந்தூர் நகராட்சி மற்றும் ஸ்ரீவைகுண்டம், பெருங்குளம், சாயர்புரம், ஏரல், ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம், நாசரேத், தென்திருப்பேரை, ஆத்தூர், ஆறுமுகநேரி, கானம், உடன்குடி ஆகிய பேரூராட்சிகளிலும் நடைபெறு உள்ளது.
இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, மாநகரபகுதி, நகர, பேரூராட்சி, மாநகர வட்ட, நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மற்றும் முன்னாள் கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள், கழக தொண்டர்கள், மகளிர்கள் பொதுமக்களின் நலன் கருதி நடைபெறும் இந்த மனித சங்கிலி போராட்டத்தில் பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளது.