» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவாவில் இருந்து கடத்தி வந்த மதுபாட்டில்கள் பறிமுதல்: லாரி உரிமையாளர் கைது!
சனி 5, அக்டோபர் 2024 9:01:49 AM (IST)
கயத்தாறு அருகே, கோவாவில் இருந்து சரக்கு லாரியில் கடத்தி வந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, லாரி உரிமையாளரை கைது செய்தனர்.
நெல்லை-மதுரை நாற்கர சாலையில் தேவர்குளம் விலக்கில் கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆர்தர் ஜஸ்டின் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோவாவில் இருந்து வந்த சரக்கு லாரியை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது லாரியை ஓட்டிவந்த முனியசாமி முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியில் சோதனை நடத்தினர்.
அப்போது லாரியில் பிஸ்கட் மற்றும் ஓட்ஸ் சரக்குகளுக்கு இடையில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு, கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த லாரியில் இருந்த 180 மில்லி அளவு கொண்ட 1,248 பாட்டில்களும், 150 மில்லி அளவில் 624 பாட்டில்களும், 750 மில்லி அளவில் 24 பாட்டில்களும், ஆக மொத்தம் 1,896 கோவா மாநில மதுபாட்டில்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் என கூறப்படுகிறது. மதுபாட்டில்களுடன் சரக்கு லாரியை போலீசார் பறிமுதல் ெசய்து கயத்தாறு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதை தொடர்ந்து அந்த லாரியை ஓட்டி வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அவர் ராஜாபுதுக்குடியை சேர்ந்த பலவேசம் என்பவரின் மகன் முனியசாமி (34) என்பதும், இவர் தற்போது பேட்டை சுத்தமல்லியில் திருமணம் செய்து மாமியார் வீட்டுடன், குடியிருந்து வருவதும், லாரியின் உரிமையாளர் அவர் தான் எனவும் தெரிய வந்தது. இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.