» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கனிம அலுவலகத்தில் ரூ.60 லட்சம் முறைகேடு : அதிகாரிகள் விசாரணை

வியாழன் 19, செப்டம்பர் 2024 5:49:53 PM (IST)

தூத்துக்குடியில் கனிம அலுவலகத்தில் ரூ.60 லட்சம் வரை முறைகேடு மற்றும் பெண் ஊழியர் மாயமானது குறித்து சென்னையில் இருந்து வந்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 

துாத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக மூன்றாவது தளத்தில், கனிம வளத்துறை அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில் மாவட்ட, 'மினரல் பவுண்டேஷன் டிரஸ்ட்' என்ற அரசு சார்ந்த பிரிவு செயல்படுகிறது. அரசுக்கு குவாரி உரிமையாளர்கள் செலுத்தும் கட்டணத்தில், 5 சதவீதம் இந்த டிரஸ்ட் பெயரில் வரவு வைக்கப்படும்.

அத்தொகை, குவாரி அமைந்துள்ள பஞ்சாயத்து பகுதியில், வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்படும். இந்த பிரிவில், கணக்கு அதிகாரியாக மறவன்மடம் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வி (43), என்பவர் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த இவர், ஜூலை 27ம் தேதிக்கு பின், பணிக்கு வரவில்லை.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியருக்கு கனிம வளத்துறை உதவி இயக்குனர் பிரியா கடிதம் அனுப்பினார். '15 ஆண்டுகளாக பணியில் இருந்த ஒப்பந்த ஊழியர், திடீரென பணிக்கு வராததற்கு காரணம் ஏதும் உள்ளதா' என, ஆட்சியர் இளம்பகவத் கேள்வி எழுப்பி, தமிழ்செல்வி குறித்து முழு தகவலை தருமாறு உத்தரவிட்டார்.

இதற்கிடையே, தமிழ்செல்வி மாயம் குறித்து, கனிம வளத்துறை அதிகாரிகள் விசாரித்தபோது, 60 லட்சம் ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. அதிகாரிகள் சிலர் கூறியதாவது: குவாரி உரிமையாளர்கள் கட்டணத்தை, இ-செலான் முறையில் செலுத்தி, ரசீது பெற வேண்டும். தமிழ்செல்வி மூலம் பலர், லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து, கட்டணத்தை செலுத்தி உள்ளனர்.

குவாரி உரிமையாளர் ஒருவர், 11 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தியிருந்த நிலையில், அவரது பெயரில், 2 லட்சம் மட்டுமே வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவருக்கு வழங்கப்பட்ட ரசீதில், 11 லட்சம் ரூபாய் என, குறிப்பிடப்பட்டு உள்ளது. இ-செலானில் திருத்தம் செய்து, 20 குவாரி உரிமையாளர்களிடம், 60 லட்சம் ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக  சென்னையில் உள்ள கனிம வளத்துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து வந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Arputham Hospital








Thoothukudi Business Directory