» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் மூதாட்டி பலி; டிரைவர் உட்பட 2 பேர் படுகாயம்!
வியாழன் 19, செப்டம்பர் 2024 5:25:59 PM (IST)
குரும்பூர் அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்தார். ஆட்டோ டிரைவர் உட்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், அம்மன்புரம் அருகே உள்ள காணம் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் சண்முகம் மனைவி ஜெயகுருத்து (68). இவரது மகன் மணிகண்டன்(38). நேற்று இரவு ஜெயகுருத்துக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் மணிகண்டன் தாய் ஜெயகுருத்துவை சோனகன்விளையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆட்டோவில் அழைத்து சென்றார்.
ஆட்டோவை காணம் மேலத் தெருவை சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் ஆத்திராஜ் (44) ஓட்டினார். சோனகன்விளை பஜார் வந்தபோது திருச்செந்தூர் நோக்கி சென்ற கார், ஆட்டோ மீது வேகமாக மோதியது. இதில் ஆட்டோ டிரைவர் ஆத்திராஜ், மணிகண்டன், ஜெயகுருத்து ஆகிய 3பேரும் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் வழியிலேயே ஜெயகுருத்து பரிதாபமாக இறந்தார். ஆத்திராஜ் மற்றும் மணிகண்டன் ஆகிய 2 பேரும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து குறித்து குரும்பூர் போலீசார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தியதில், காரை திருச்செந்தூர் முத்தாரம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுதாகர்(45) என்பவர் ஓட்டி வந்ததும், ஓட்டல் மேனேஜாரான இவர் நெல்லைக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து குரும்பூர் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.