» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா, துவக்கி வைத்தார்!
வியாழன் 19, செப்டம்பர் 2024 5:06:31 PM (IST)
அளந்தங்கரை உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டியினை குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டிகள் கடந்த 10.09.2024 முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்ஒருபகுதியாக இன்று (19.09.2024) அளந்தங்கரை உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கல்லூரி மாணவியர்களுக்கிடையேயான கபடி போட்டியினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில் "தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பை 2024-2025ஆம் ஆண்டிற்கான விளையாட்டுப்போட்டிகள் கன்னியாகுமரி மாவட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகள் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் இப்போட்டிகளின் முக்கிய நோக்கம் அனைவருடைய திறமைகளை வெளிக்கொண்டு வருவதேயாகும். இப்போட்டிகள் பள்ளி, கல்லூரி, மாணவ மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் 24.09.2024 அன்று வரை தொடர்ந்து நடைபெற உள்ளன.
இப்போட்டிகளில் பெறப்படும் சான்றிதழ்கள் மூலம் கல்வி, வேலைவாய்ப்புகளில் சிறப்பு சலுகைகள் பெற இயலும். போட்டியில் திறமையானவர்கள் கண்டறிவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாநில அளவில் குழுப்போட்டியில் வெற்றிப்பெறும் அணிகளுக்கு பரிசுத்தொகையுடன் முதலமைச்சர் கோப்பையும் வழங்கப்படும். எனவே மாவட்ட அளவில் நடைபெறும் இப்போட்டிகளில் அனைத்து தரப்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு, பரிசு பெறுவதோடு, வெற்றி பெற்றவர்கள் மாநில, தேசிய மற்றும் உலகளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு, வெற்றி பெற்று நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர், நாகர்கோவில் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியர்கள் மற்றும் குழித்துறை ஸ்ரீ தேவி குமாரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியர்களிடையே நடைபெற்ற கபடி போட்டியினை துவக்கி வைத்து, வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தார்.