» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த பெண்: மகன் பலி; 3பேருக்கு சிகிச்சை!
வியாழன் 19, செப்டம்பர் 2024 4:50:45 PM (IST)
ஆழ்வார்குறிச்சி அருகே கடன் பிரச்சனையால் பெண், தனது 3 குழந்தைகளுக்கு அரளி விதையை அரைத்து கொடுத்துள்ளார். இதில் ஒரு மகன் சிகிச்சை பலனின்றி இறந்தான்
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள செல்லப் பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்தவர் குமாரவேல். இவர் ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி உச்சிமாகாளி (38). இவர்களுக்கு பழனிசக்தி குமரன் (7), இந்திரவேல் (6), பிரவீன் ராஜா (3) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
உச்சிமாகாளி மகளிர் சுய உதவி குழு மூலம் ரூ.3 லட்சம் கடன் பெற்றதாகவும், இதற்காக வாரந்தோறும் ரூ.2,700 கட்டிவந்தாகவும் கூறப்படுகிறது. ஆனால், கடந்த சில மாதங்களாக அவரால் கடனை கட்ட முடியவில்லை. இதனால் விரக்தியில் இருந்த உச்சிமாகாளி அரளி விதையை (விஷம்) அறைத்து தனது தனது மகன்களான பழனிசக்தி குமரன், இந்திரவேல் ஆகியோருக்கு மருந்து என்று கொடுத்தார்.
கடைசி குழந்தையான பிரவீன் ராஜாவுக்கு தேனில் கலந்து கொடுத்தார். பின்னர் அரளி விதையை தானும் குடித்தார். சிறிது நேரத்தில் 4 பேரும் வாந்தி எடுத்தனர். அவர்கள் சத்தம் கேட்டு உடனடியாக அக்கம்பக்கத்தினர் அங்கு சென்றனர். அப்போது, அங்கு 4 பேரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக ஆழ்வார்குறிச்சி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கடையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை பிரவீன் ராஜா பரிதாபமாக இறந்தது.
மற்ற 3 பேரும் உயர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குழந்தைக்கு விஷம் கொடுத்து தாயே கொன்ற சம்பவம் குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.