» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆட்சியர் அலுவலகத்தில் போராட அனுமதி இல்லையா? சிபிஎம் கடும் கண்டனம்!
வியாழன் 19, செப்டம்பர் 2024 4:26:23 PM (IST)
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டங்களுக்கு அனுமதி இல்லை என்று எஸ்.பி., அறிவித்துள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலளார் கே.பி.ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர ஆட்சியர் அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்கள் முன்பு பொதுமக்களோ, தனி நபரோ அல்லது அமைப்புக்களோ பொதுமக்களுக்கு பங்கு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம், போராட்டம், தர்ணா ஆகியவற்றில் ஈடுபட அனுமதி இல்லை.
மேலும் மாவட்டத்தில் அந்தெந்த உட்கோட்ட அனுமதிக்கப்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் 7 நாட்களுக்கு முன்பாக அனுமதி பெற வேண்டும். மேலும் ஆர்ப்பாட்டம், போராட்டத்திற்கு முன் அனுமதி பெறமாலோ அரசு அலுவலகங்கள் முன்போ பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்றவற்றில் ஈடுபடுவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கோரிக்கைகளை அரசு கவனத்திற்கு கொண்டு சென்று அதை நிறைவேற்றுவதற்காக அரசு அலுவலகங்கள் முன்பு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து ஜனநாயக பூர்வமாக போராட்டம் நடத்துவது வழக்கத்திலும், நடைமுறையிலும் உள்ளது. ஆனால் நடைமுறைக்கு மாறாக தற்போது பொறுப்பேற்று இருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரசு அலுவலகங்களின் முன்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை என்று அறிவிப்பை வெளியிட்டிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
இந்த அணுகுமுறை மக்கள், அரசியல் கட்சிகளின் ஜனநாயக பூர்வமான போராட்டத்தை நசுக்கப்படும் அவசரகால நிலைமையை பிரதிபலிப்பதாக உள்ளது. மேலும் அரசு அலுவலகங்கள் முன்பு ஜனநாயக ரீதியான ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்திட அனுமதிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இதில் தமிழக அரசு தலையீட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் என தெரிவித்துள்ளார்.