» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாங்குநேரியில் ரயில் எஞ்சின் தொழிற்சாலை : தென்மாவட்ட மக்கள் கோரிக்கை!

வியாழன் 19, செப்டம்பர் 2024 12:00:41 PM (IST)



நாங்குநேரியில் ரயில் எஞ்சின் தொழிற்சாலை அமைக்க தமிழக அரசு தனியார் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி தொழிற்சாலை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

"வடக்கு வாழ்கிறது..தெற்கு தேய்கிறது...........” சில ஆண்டுகளுக்கு முன் வரை திராவிட கட்சிகள் எழுப்பிய கோஷமிது. இக்கோஷம் இப்போது தொழில் வளர்ச்சிக்கு தென் மாவட்டங்களுக்கு ஏற்றதாக உள்ளது. அரசியல் களத்தை நிர்ணயிக்கும் மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் போக்குவரத்து, கட்டமைப்பு வசதிகள், படித்த இளைஞர்கள், இருந்தும் தொழில் வளர்ச்சி "கானல் நீராக' இருக்கிறது. சென்னை மற்றும் வட மாவட்டங்கள், கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்கள் தொழில் துறையில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளன..

வேலையில்லா திண்டாட்டம், வறுமை, தொழில்வளர்ச்சியில்லாமை மற்றும் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் தென்தமிழகத்தின் பல மாவட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளன. போதிய வேலைவாய்ப்பு வசதிகள் எதுவும் இல்லாத காரணத்தால் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் தென்மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் சென்னை, கோவை மற்றும் பெங்களுர் நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். தமிழகத்திற்கென வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில்கள் துவங்க வந்தால் அவையும் சென்னையிலும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே அமைக்கப்படுகின்றன. தென்மாவட்டங்கள் அனைத்திலுமே போதிய வசதிகளோ அல்லது தொழில் வளர்ச்சிக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளோ இல்லை.

கடந்த 60 ஆண்டுகளாகவே இந்த மாவட்டங்கள் அனைத்தும் வளர்ச்சி காணாமல் இருந்து வருகின்றன. பல்வேறு வகையான மூலப்பொருட்களும் கிடைக்கக்கூடிய வசதிகள் இருந்தும் இந்த மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சி மிகவும் பலவீனமாக இருந்து வருகிறது. இந்த மாவட்டங்களில் புதிய தொழில்களை துவங்குவதற்கு எந்த ஒரு பெரிய நிறுவனங்களோ அல்லது தொழிலதிபர்களோ முன்வருவதில்லை. இந்த மாவட்டங்களைச் சேர்ந்த 80 சதவீத மக்கள் ஏழ்மையிலும் வறுமையிலும் இருக்கின்றனர். லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி வீதிகளில் திரிந்து தவிக்கும் நிலை காணப்படுகிறது.

மழை மறைவு தொழில் குறைவு பகுதியான தென்மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் வாழ வழியின்றி 1800களில் பர்மா மலேசியா சிலோன் என்று சென்றனர் 1960களில் அரபு நாடுகளுக்கு சென்றனர் 1990களில் அமெரிக்கா ஐரோப்பா அரபுநாடுகள் சிங்கப்பூர் என்று பிழைப்புக்காக அலைவது இன்றும் தொடர்கிறது. தென் மாவட்ட ஜாதி கலவரங்கள் குறித்து ஆராய, 1997ல், ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரத்னவேல் பாண்டியன் தலைமையிலான குழு, அரசிடம்தாக்கல் செய்த அறிக்கையில், "வேலை வாய்ப்பு இல்லாதது தான் ஜாதி கலவரங்களுக்கு காரணம்; எனவே, வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த தொழில்களை துவங்க வேண்டும்' என, அரசுக்கு பரிந்துரைத்தது. 

இதைபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் நீதிபதி வேனுகோபால் கமிஷன் அறிக்கையிலும் தென்மாவட்டங்களில் அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரைத்தது. ஆனால், அடுத்தடுத்து அமைந்த அரசுகள், இந்த பரிந்துரையை அமல்படுத்துவதில் அக்கறை செலுத்தவில்லை. அவ்வப்போது தலைமை செயலகத்தில் நடைபெறும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட தொழிற்சாலைகளும், சென்னையை சுற்றியே அமைக்கப்படுகிறது. திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் கோடி மாவட்டங்கள் தொழில் ரீதியில் மிகவும் பின்தங்கியுள்ளன. வானம் பார்த்த பூமியாக விளங்கும் இந்த பகுதி, மிகவும் பின் தங்கிய பகுதி. இந்த பகுதியில் வசிக்கும் மக்களும் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.

வேலை வாய்ப்பில் பின்தங்கியுள்ள தென் மாவட்டங்களில் உள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்காக வேண்டி நெல்லை மாவட்டம் நான்குநேரி சிறப்பு பொருதாளார மண்டலம் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் 2006-ம் ஆண்டு தமிழ்நாடு தொழில்வளர்ச்சி கழகமும் தனியார் நிறுவனமும் இணைந்து செய்வது என ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இத்தனை ஆண்டுகள் ஆகியும் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்த திட்டத்துக்கு என்று 2600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் எந்த பணிகளும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்த நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலதடதை ரயில்வேக்கு என தனியாக சிறப்பு பொருளாதார மண்டலமாக மாற்றியமைத்து மின்சார ரயில் இஞ்சின் தொழிற்சாலை அமைக்க வேண்டும். நாங்குநேரியில் 2600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி தமிழ்நாடு தொழில்வளர்ச்சி கழகத்தின் வசம் உள்ளது. ஆகவே இங்கு ரயில் இஞ்சின் தொழிற்சாலையும் அமைக்க வேண்டும் என்று தென்மாவட்ட மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

ரயில்வேத்துறையில் புதிய வழித்தடங்களில் அதிக ரயில்கள் இயக்கவும் அதிக ரயில் இஞ்சின்கள்; தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது. தேவையாள அளவுக்கு தயாரிப்புகள் போதுமானதாக இல்லை. ஆகவே புதிய தொழிற்சாலைகள் நிறுவவேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். இந்திய ரயில்வேக்கு 2020-ம் ஆண்டுக்கு சுமார் 5334 டீசல் இஞ்சின்களும், 4281 மின்சார இஞ்சின்களும், 50,880 ரயில் பெட்டிகளும் தேவைபடுகிறது. இதற்கு என 1,20,000 கோடிகள் முதலீடு தேவைப்படும் என்று ரயிலவேத்துறையின் பாராளுமனடறத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரயில்வேத்துறை அதிக முதலீடு செய்து ரயில் இஞ்சின் தயாரிப்பதற்கு பதிலாக  தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து ரயில் இஞ்சின் வாங்கும் திட்டமும் உள்ளது.

ரயில்வே வாரியத்தால் புறங்கணிக்கப்படும் தெற்கு ரயில்வே: ரயில்வேத்துறையில் அதிக அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் தொழிற்சாலைகள் அனைத்தும் வடஇந்தியாவிலேயே உள்ளது. தமிழகத்தில் சென்னையில் உள்ள இணைப்பு பெட்டி தொழிற்சாலை மட்டுமே உள்ளது. திருச்சியில் உள்ள பொன்மலை தொழிற்சாலையை விரிவுபடுத்தி ரயில்பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையாக மாற்ற வேண்டும் என்று கடந்த இருபது ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் ரயில்வேத்துறை கண்டு கொள்ளவேஇல்லை. இதைப்போல் தெற்கு ரயில்வேயின் எல்லைக்கு உட்ப்பட்ட  கேரளா மாநிலத்தின் பாலக்காட்டில் புதிய ரயில் பெட்டி தொழிற்சாலை அமைக்க 2008 ரயில் பட்ஜெட்டில் அறிவிக்கப்ட்டது. இந்த திட்டம் ரயில்வேக்கு தேவையான நிலம் கையகப்படுத்தி முடியாத காரணத்தாலும் மற்றும் பல்வேறு பிரச்சனைகளாலும்  கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ரயில் இஞ்சின் தயாரிக்கும் தொழிற்சாலை: ரயில்வேயில் தற்போது மின்சார இஞ்சின் தாயாரிக்கும் தொழிற்சாலை மேற்கு வங்காளத்தில் சித்தரஞ்சன் இஞ்சின் தொழிற்சாலையும் டீசல் இஞ்சின் தொழிற்சாலை வாரணாசியிலும் உள்ளது. இதில்; சித்தரஞ்சன் தொழிற்சாலை உலகத்திலேயே பெரிய இஞ்சின தொழிற்சாலைகளில் இதுவும் ஒன்று. இந்த தொழிற்சாலையில் தான் இந்திய ரயில்வேயில் அதிகம் உபயோகப்படுத்தும் மின்சார இஞ்சின்களான WAP-4, WAP-5, WAP-7, WAG-9  தயாரிக்கப்படுகிறது. 

இந்த தொழிற்சாலை 4522 ஏக்கர் பரப்பளவு கொண்ட வளாகமாக உள்ளது. இந்த வளாகத்தில் 203கி.மீ தூரத்துக்கு சாலை வசதி, 9,356 ஊழியர் வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரி, கலையரங்கம், சினிமா தியேட்டர், வணிகவளாகங்கள், சந்தைகள், கிளப்கள் என அனைத்து வசதிகளும் கொண்;ட வளாகமாக உள்ளது. இந்த ரயில் இஞ்சின் தொழிற்சாலையில் நேரடியாக 12,837 ஆட்கள் பணியாற்றுகின்றனர். இதைப்போன்று ஓர் ரயில்  இஞ்சின் தொழிற்சாலை நாங்குநேரியில் அமைக்ப்பட்டால் தென்மாவட்டத்தில் சார்ந்த இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை நேரடியாகவும், மறைமுகமாகவும் உருவாகும்.

கடந்த 2017-ம் ஆண்டு  வடஇந்தியாவில் உள்ள பீகார் மாநிலத்தில் உள்ள மாதேபுராவில் ரயில் இஞ்சின் தொழிற்சாலை அறிவிக்கப்பட்டு தனியார் நிறுவனத்துடன் இணைந்து இஞ்சின் தயாரிப்புகளை உற்பத்தி செய்யத் தொடங்கியது. இது பிரான்சின் அல்ஸ்டோம் இந்திய இரயில்வேயின் கூட்டு முயற்சியாக வெளிநாட்டு முதலீடு செய்து தொடங்கப்பட்டுள்ளது.

இதைப்போன்ற ரயில்வே துறைக்கு சொந்தமான ரயில் இஞ்சின் தொழிற்சாலை ஏதும் தென்இந்தியாவில்  எந்த ஒரு மாநிலத்திலும் கிடையாது. இதைப்போல் டீசல் ரயில் இஞ்சின் தயாரிக்கும் தொழிற்சாலை வாரணாசியில் உள்ளது. டீசலை அதிக விலை கொடுத்து  வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்தால் ரயில்வேக்கு அதிக செலவு ஆகின்றது. ரயில்வேயின் செலவை குறைப்பதற்காக் ரயில்வேதுறை தற்போது அனைத்து முக்கிய ரயில்வழித்தடங்களை மின்சார வழித்தடமாக மாற்றி வருகிறது. இவ்வாறு மின்மயமாக மாற்றுவதால் அதிக மின்சார இஞ்சின்கள் தேவைப்படுகிறது. ஆகவே நாங்குநேரியில் சிறப்பு பொருதாளர மண்டலத்தில் மின்சார ரயில் இஞ்சின் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று தென்மாவட்ட மக்கள் மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறப்பம்சம்: இந்த தொழிற்சாலை அமைக்க தேவையான அளவுக்கு 2600 ஏக்கர் நிலம் கைவசம் உள்ளது. தேவைப்பட்டால் 1500 ஏக்கர் கையகப்படுத்தி தர முடியும் என்று தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் அறிவித்துள்ளது. இது மட்டும் இல்லாமல் கூடுதல் நிலம் தேவைப்பட்டால் இந்த பகுதியில் பயன்படுத்தப்படாத கோயில் நிலையங்களும் அரசு புறம்போக்கு நிலையங்களும் பெருமளவில் உள்ளன. இந்த பகுதி தூத்துகுடி துறைமுகம் மற்றும் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து 82 கி.மீ அருகில் உள்ளது. 

இதனால் துறைமுகத்திலிருந்து  சரக்கு போக்குவரத்துக்க மிகவும் எளிதாக இருக்கும். மதுரை விமான நிலையத்திலிருந்து 180 கி.மீ அருகில் உள்ளது. இந்த இடத்தில் தொழிற்சாலை அமைப்பதற்கு தேவையான அனைத்து விதமான மத்திய மாநில அரசின் அனுமதிகளும் பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணைமின்நிலைய வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலைக்கு தேவையான மின்சாரம் இதன் அருகில் உள்ள ஆரல்வாய்மொழி பகுதியில் காற்றாடி மூலமாக அதிக அளவுக்கு கிடைத்து வருகிறது. இதன் அருகில் நான்குநேரி ரயில் நிலையம் வருவதால் ரயில் போக்குவரத்துக்கு எளிதாக இருக்கும் இதற்கு என தனியாக ரயில்வழித்தடம் அமைக்க வேண்டியது இருக்காது.

நேரடி வேலைவாய்ப்பு: இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டால் படித்தவர்கள் அதிகம் உள்ள குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களை சார்ந்த அதிலும் குறிப்பாக இயந்திரவியல், மின்னியல் போன்ற பாடபிரிவுகளில் பொறியியல் பட்டம், பாலிடெக்கனிக், ஐடிஐ முடித்த  இளைஞர்களுக்கு வரபிரசாதமாக அமையும். தென்மாவட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்பிற்காக சென்னை போன்ற பொருநகரங்களுக்கு செல்ல வேண்டியது அவசியம் வராது.

துனை தொழிற்சாலைகள்: இந்த மின்சார ரயில் இஞ்சின் தொழிற்சாலை இங்கு அமைக்கப்பட்டால் இந்த இஞ்சின் தயாரிப்பதற்கு என தேவைப்படும் பல்வேறு துனை தொழிற்சாலைகள் தென் மாவட்டங்களில் அமைக்கப்படும். எடுத்துகாட்டாக ரயில் இஞ்சினுக்கு தேவையான ரயில் வீல் தயாரிக்கும் தொழிற்சாலை இதன் அருகில் அமைக்க வேண்டும். இவ்வாறு அருகில் அமைத்தால் தான் எந்த ஒரு தடங்கலும் இன்றி ரயில் இஞ்சின் தயாரிக்க முடியும். இவ்வாறு ரயில் வீல் தயாரிக்கும்தொழிற்சாலை நெல்லை மாவட்டத்ல் உள்ள ராதாபுரம் தாலுகாவில் அமைக்கப்பட்டால் ராதாபுரம் தாலுகா வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். இதைப்போல் பல்வேறு உரிதிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் தென்மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களில் அமைக்கப்படும்.

மறைமுக வேலைவாய்ப்பு: ரயில் இஞ்சின் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டால் இந்த பகுதியில் குறைந்தபட்சம் சுமார் ஒரு லட்சங்கள் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பு உருவாகும். இந்த தொழிற்சாலைக்கு தேவையான பல்வேறு உதிரிபொருட்கள் தயாரிக்கும் சிறிய அளவிலான இயந்திரவியல் தொழிற்பேட்டைகள் இங்கு ஆயிரக்கணக்கில் அமைக்கப்படும.; இதனால் பொருளாதரத்தில் பின்தங்கிய தென்மாவட்டங்கள் வளர்ச்சி பெறும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

பொருளாதாரம் முன்னேற்றம்: இது போன்று பல்வேறு தொழிற்சாலைகள் தென்மாவட்டங்களில் அமைத்தால் இந்த பகுதிகளில் பொருளாதாரம் கணிசமான அளவில் முன்னேற்றம் அடையும். மக்களின் வாழ்க்கைதரமும் முன்னேறும். ஆகவே இந்த ரயில் இஞ்சின் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை அடுத்து வருகின்ற மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தென்மாவட்ட மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

தகவல்தொழில்நுட்பம்: தற்போது தயாரிக்கப்படும் மின்சார ரயில் இஞ்சின்களில் முக்கியமான அனைத்து கட்டுபாடுகளும் கணிப்பொறி மூலமாகவே மைக்ரோபிராசசர் வழியாக இயங்குமாறு வடிவமைக்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் மின்சார இங்சின்களில் அனைத்து கட்டுபாடுகள் மற்றும் இயக்கங்கள் அனைத்தும் கணிப்பொறி மூலமாக இயக்கப்படுமாறு மாற்றப்பட்டுவிடும். இவ்வாறு தயாரிப்பதால் அதிக அளவில் கணிப்பொறி பொறியாளர்களுக்கும் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

வெளிநாட்டு நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் துவங்குதல்: மத்திய அரசு தற்போது பொதுதுறை நிறுவனங்கள் தொடங்குவதை தவிர்த்து தனியார் நிறுவனங்களுக்கு ஊக்கம் தந்து ரயில்வேத்துறையில் 100 சதமானம் வெளிநாடு முதலீட்டை ஆதரித்து வருகிறது. அரசிடம் உள்ள பொதுதுறை நிறுவனங்களின் பங்குகளையும் தனியாருக்கு விற்கும் நடவடிக்கையை செய்து வருகிறது. இந்த வகையில் இந்த நாங்குநேரியில் ரயில் இஞ்சின் தொழிற்சாலை அமைக்க பல ஆயிரம் கோடிகள் தேவைப்படும். 

இந்த அளவுக்கு முதலீடு செய்ய மத்திய அரசோ அல்லது ரயில்வேத்துறையோ தயார் இல்லை. ஆகவே இந்த பகுதியில் புதிய ரயில் இஞ்சின் தொழிற்சாலை மத்திய ரயில்வேத்துறை மற்றும் வெளிநாட்டு ரயில் இஞ்சின் தயாரிக்கும் நிறுவனத்துடன் ஐம்பது சதவிகிதம் ரயில்வேயும் ஐம்பது சதவிகிதம் வெளிநாட்டு நிறுவனமும் என கூட்டு முயற்சியில் துவங்கலாம் என்ற ஆலோசனையும் வைக்கப்படுகிறது....


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


Arputham Hospital







Thoothukudi Business Directory