» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாகர்கோவிலுக்கு ரயில்நிலையத்துக்கு அடுத்த அடி: பயணிகள் சங்கம் கடும் எதிர்ப்பு
வியாழன் 19, செப்டம்பர் 2024 10:01:57 AM (IST)
கன்னியாகுமரி எம்.பி புதிய ரயில்களை கொண்டுவர முடியாவிட்டாலும் பரவாயில்லை. தானாக வருகின்ற ரயில்களையாவது நமக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொச்சுவேலியிருந்து நிலாம்பூர்க்கு செல்லும் ரயிலின் காலி பெட்டிகளை கொண்டு கடந்த மார்ச் 1ம் தேதி முதல் நாகர்கோவில் - கொச்சுவேளி பயணிகள் ரயிலாக இயக்கி நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது.
தற்போது இவ்வாறு இரண்டு ரயில்களாக இயங்கி வருவதை ஒரே ரயிலாக நாகர்கோவில் - நிலாம்பூர் என்று இயக்க கேரளாவிலிருந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் அதற்கான பணிகளை செய்து வருகின்றனர். இவ்வாறு ஒரே ரயிலாக இயக்கவும் நாகர்கோவிலில் பராமரிப்பு செய்யவும் கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கடுமையாக எதிர்க்கின்றது.
இவ்வாறு நேரடி ரயிலாக இயக்கும் போது கொச்சுவேலி- நாகர்கோவில் பயணிகள் ரயில் எக்ஸ்பிரஸ் கட்டண ரயிலாக மாற்றம் செய்து விடுவார்கள். இவ்வாறு எக்ஸ்பிரஸ் கட்டணமாக இயக்கும் போது பயணிகள் அதிக கட்டணம் கொடுத்து பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இதனால் தினசரி பயணம் செய்யும் பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இவ்வாறு இயக்கும் போது ஒருசில வருவாய் குறைந்த ரயில் நிலையங்களின் ஆளூர், பள்ளியாடி, குழித்துறை மேற்கு நிறுத்தம் ரத்து செய்யப்படும் வாய்ப்பு உள்ளது.
தினசரி திருவனந்தபுரத்துக்கு எவ்வாறு தினசரி வேலைக்கு சென்று வருகிறார்களோ அது போன்று தற்போது தான் நாகர்கோவிலுக்கு பாறசாலை, குழித்துறை, பள்ளியாடி, இரணியல் போன்ற ரயில் நிலையங்களில் இருந்து நாகர்கோவிலுக்கு தினசரி பல்வேறு பயணிகள் தினசரி பயணம் செய்கிறார்கள். ரயில்வேயின் இந்த திட்டத்தால் இனி இவ்வாறு பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது.
கானல்நீரான திருவனந்தபுரம் - நாகர்கோவில் பயணிகள் ரயில் திருநெல்வேலி நீட்டிப்பு:
திருவனந்தபுரத்திலிருந்து காலையில் நாகர்கோவிலுக்கு புறப்படும் பயணிகள் ரயிலை திருநெல்வேலிக்கு தினசரி பல்வேறு அலுவல் பணிகளுக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கைக்கு திருநெல்வேலி – நாகர்கோவில் இருவழிபாதை பணிகள் முடிவு பெற்றதும் இது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கோட்ட அதிகாரிகள் உறுதி அளித்தார்.
இந்த பயணிகள் ரயிலை திருநெல்வேலிக்கு நீட்டிப்பு செய்ய முடியாதவாறு ரகசியமாக திட்டம் தீட்டப்பட்டு கொச்சுவேலி –நிலாம்பூர் ரயிலாக இயக்கி நாகர்கோவிலில் பராமரிப்பு செய்யும் திட்டத்தை செயல்படுத்தும் விட்டனர். இவ்வாறு இயக்கும் போது எந்த எதிர்ப்பையும் பதிவு செய்யாமல் இருந்த காரணத்தால் அடுத்ததாக நேரடி ரயிலாக இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இவ்வாறு இயக்கப்பட்டால் திருவனந்தபுரம் - நாகர்கோவில் பயணிகள் ரயில் திருநெல்வேலி நீட்டிப்பு என்பது கானல் நீராக மாறிவிடும்.
கொச்சுவேலிருந்து நிலாம்பூர்க்கு இயக்கப்பட்டு வரும் ரயில் திருவனந்தபுரம் நகரத்தில் ஒதுக்கு புறமான கொச்சுவேலியிருந்து புறப்பட்டு வந்த காரணத்தால் இந்த ரயில் நிலையத்தை அங்கு உள்ள பயணிகள் பயன்படுத்த யோசிக்கின்றனர். ஆகவே கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் பயன்படும் வகையில் திருவனந்தபுரம் - மங்களூர் 16347-16348 ரயிலை நாகர்கோவிலுக்கு அல்லது திருநெல்வேலிக்கு நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.
இவ்வாறு நீட்டிப்பு செய்து இயக்கும் போது திருவனந்தபுரம் ரயில் நிலையம் இடநெருக்கடி மற்றும் பராமரிப்பு நெருக்கடி குறையும். இவ்வாறு குறையும் போது எளிதாக நிலாம்பூர் – கொச்சுவேலி ரயிலை திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்து இயக்கலாம் என்ற ஆலோசனையும் திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகளிடம் வைக்கப்பட்டுள்ளது என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
இது மட்டுமல்லாமல் குமரி மாவட்டத்தில் உள்ள இருப்பு பாதை வழித்தடங்கள் அனைத்தும் திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ளது குறிப்பிடதக்கது. திருவனந்தபுரம் கோட்டம் சார்பாக எப்போது நமக்கு மிளகாய் அரைப்பார்கள் என்று தெரியாது. இந்த நிலையில் மக்கள் பிரதிநிதிகள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். இல்லை என்றால் தற்போது நடந்துள்ளது போன்று நமக்கு பாதிப்புடைமாறு பல்வேறு மறைமுக திட்டங்கள் செயல்படுத்துவார்கள்.
கன்னியாகுமரியிலிருந்து சென்னை வழியாக ஜபல்பூருக்கு சிறப்பு ரயிலை வடக்கு மத்திய ரயில்வே மண்டலம் சார்பாக அறிவித்து முன்பதிவு துவங்கி விட்டது. இந்த நிலையில் ரயில் இயங்குவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென இந்த ரயில் மதுரையுடன் நிறுத்தப்பட்டது. இதற்கு காரணம் நாகர்கோவிலில் பராமரிப்பு பணிகள் செய்ய போதுமான பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் இடவசதி இல்லை என்று திருவனந்தபுரம் கோட்டம் சார்பாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதே வாரத்தில் இந்த கொச்சுவேலி – நீலாம்பூர் ரயில் நாகர்கோவில் பராமரிப்புக்கு என்று கொண்டுவரப்பட்டது.
இதனால் வார விடுமுறையின் போது சென்னைக்கு செல்லத்தக்க வகையில் கால அட்டவணை அமைக்கப்பட்டு இயக்க இருந்த கன்னியாகுமரி ஜெபல்பூர் நேரடி ரயிலை நாம் இழந்துள்ளோம். இந்த ரயில் இயக்கப்பட்டிருந்தால் சென்னைக்கு அதிக பயணிகள் முன்பதிவு செய்து நாகர்கோவில் ரயில் நிலையத்தின் வருவாய் இன்னும் அதிகரித்திருக்கும். தற்போது நிலம்பூர் – கொச்சுவேலி ரயிலை நாம் பராமரிப்பு செய்கிறோம் ஆனால் வருவாய் கொச்சுவேலி ரயில் நிலையத்துக்கு சென்று விடுகிறது. இதுபோன்ற பல்வேறு இன்னல்களை திருவனந்தபுரம் கோட்டம் சார்பாக இழந்து வருகின்றோம்.
கன்னியாகுமரி எம்.பி புதிய ரயில்களை வாங்கி தர முடியாவிட்டாலும் பரவாயில்லை. தானாக வருகின்ற ரயில்களையாவது நமக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது ரயில் நிலையங்கள் பாதிக்கப்படுகின்ற அளவில் திட்டங்களை ஆரம்பத்திலே கடும் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். இதற்காக இந்த விஷயத்தில் உடனடியாக களத்தில் இறங்கி கடும் எதிர்ப்பை பதிவு செய்து நமது மாவட்ட பயணிகள் பாதிக்கும் வகையில் உள்ள திட்டங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அவர் நீண்ட உறக்கத்தில் உள்ளார் என்பது மட்டும் தெரிகிறது.