» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ரூ.77.80 கோடி நலதிட்ட உதவிகள்: அமைச்சர் பி.கீதா ஜீவன் வழங்கினார்

திங்கள் 9, செப்டம்பர் 2024 8:37:33 PM (IST)



தூத்துக்குடியில்  881 பயனாளிகளுக்கு ரூ.77.80 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் வழங்கினார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று(09.09.2024) மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், காணொலிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 2735 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கி தொடங்கி வைத்ததைத்தொடர்ந்து, தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில், மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத், தலைமையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 723 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.73 கோடி வங்கிக் கடன் இணைப்புகள், 

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 50 பயனாளிகளுக்கு ரூ.77.32 இலட்சம் கடன் உதவிகள், தொழிலாளர் துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.11.65 இலட்சம் பணியிடத்து விபத்து மரணம் மற்றும் இயற்கை மரணத்திற்கான உதவித்தொகைகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், தூத்துக்குடி, திருவைகுண்டம், விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் மற்றும் ஆழ்வார்திருநகரி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 82 பயனாளிகளுக்கு ரூ.2.87 கோடி செலவில் வீடு கட்டுவதற்கான வேலை உத்தரவு ஆணைகள், 

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் கை, கால் பாதிக்கப்பட்ட 20 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.21.14 இலட்சம் மதிப்பிலான (செயற்கைக்கால் மற்றும் கைகள்) செயற்கை அவையங்கள் என மொத்தம் 881 பயனாளிகளுக்கு ரூ.77.80 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்ததாவது: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலமாக ஊரகப் பகுதிகளில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், நகர்புற பகுதிகளில் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக கிராமப் புறங்களில் உள்ள ஏழை மகளிரை ஒருங்கிணைத்து சுய உதவிக்குழுக்கள் அமைத்தல், பயிற்சிகள் வழங்குதல், மக்கள் அமைப்புகளை உருவாக்குதல், 

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தேவையான கடன் பெற்றுத்தருதல், வாழ்வாதார தொழில்களில் ஈடுபட வைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தகுதியான இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சிகள் வழங்குதல், அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை செயல்படுத்துதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக நகர்புறப் பகுதிகளில் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்புகள் அமைத்தல் பயிற்சி வழங்குதல், நகர்புற வாழ்வாதார மையம் மூலமாக சேவைகள் வழங்குதல் தொழில்முனைவோர்களை உருவாக்குதல் மற்றும் தொழில்திறன் பயிற்சிகள் வழங்குதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் பெறுதல் தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் அரசின் மூலமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதனை தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக எய்தப்பட்டு வருகிறது. அதன்படி 2024-25 ஆம் ஆண்டிற்கு தூத்துக்குடி மாவட்டத்திற்கு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான வங்கிக்கடன் இலக்கு ரூ.948 கோடி என நிர்ணயிக்கப்பட்டு நாளது தேதி வரை ரூ.417 கோடி எய்தப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு மாதமும் தகுதியான குழுக்களை தரமதிப்பீடு செய்து வங்கிகள் மூலமாக கடன் பெற்று கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்புகள் பெற்று தருவதன் மூலம் சமூக பொருளாதார தடைகள் நீக்கப்பட்டு சமூகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு சக்தியாக செயல்படுவார்கள் என்பதை நன்கு அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு, இன்றைய தினம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்புகள் வழங்கி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான வங்கிக்கடன் இணைப்புகள் வழங்கும் விழாவிற்கு தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் 695 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.68 கோடி இலக்கீடாக நிர்ணயிக்கப்பட்டதில் 712 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.72.65 கோடி இலக்கீடு எய்தப்பட்டு வங்கிக்கடன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

2024-25ஆம் ஆண்டிற்கு தூத்துக்குடி மாவட்டத்திற்கு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான வங்கிக்கடன் இலக்கு ரூ.948 கோடி என நிர்ணயிக்கப்பட்டதில் நாளது தேதி வரை ரூ.489.65 கோடி எய்தி இலக்கை அடைந்துள்ளோம். மீதமுள்ள 458 கோடி ரூபாய் இலக்கினை வருகின்ற மாதங்களில் எய்தப்படும். தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆண்டு 2023-24-ல் மொத்தம் 30 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க வேண்டும் என்று ஒரு இலக்காக வைத்துள்ளார்கள். இந்த ஆண்டு 35 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க வேண்டும் என்ற இலக்கு வைத்துள்ளார்கள். இவ்வாறு ஆண்டுக்கு 5000 கோடி உயர்த்துவதன் மூலம் அதிகளவிலான மகளிர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

இந்தியாவிலேயே முதன்முதலாக பெண்களுடைய பொருளாதார முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் தான். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் தான் மகளிர் சுயஉதவிக்குழு என்ற திட்டம் உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள பெண்கள் எல்லாரும் உழைக்கும் பெண்கள். ஏதாவது ஒரு தொழில் செய்யாமல் வீட்டில் இருக்க மாட்டார்கள் என்ற நிலையை நாம் உருவாக்கியுள்ளோம். கடந்த ஆட்சி காலங்களில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தின் பிடியில் தான் பெண்கள் மாட்டியிருந்தார்கள். அவர்களால் மட்டுமே கடன் வழங்கப்பட்டு கொண்டிருந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மீண்டும் ஒரு அங்கீகாரம் கிடைக்கபெற்று வங்கிகள் மூலம் குறைந்த சதவீத வட்டியில் கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. 

வங்கிகளில் 20 இலட்சம் முதல் 40 இலட்சம் வரை பெண்களுக்கு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆகவே மகளிர்கள் ஒவ்வொருவரும் இந்த வாய்ப்பினை நல்லமுறையில் பயன்படுத்திகொள்ளுங்கள். தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வங்கிக்கடனுதவிகளை முறையாக நிதி மேலாண்மையினை கையாண்டு சரியாக திட்டமிட்டு தொழிலிலோ, வியாபாரத்திலோ முதலீடு செய்து நல்ல முறையில் லாபம் ஈட்டவேண்டும்.

நமக்கு கிடைக்கின்ற நிதியின் மூலமாக இலாபமும் பெற வேண்டும் சேமித்தும் வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு தொழிலை தொடங்கி உங்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றிக்கொள்ளுங்கள் என்று உங்களை அன்போடு வாழ்த்துகிறேன். அது போல் இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவிகள் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நம்முடைய முதலமைச்சர் அவர்களின் உன்னதமான திட்டம் கலைஞரின் கனவு இல்லம் திட்டம். 

இந்த திட்டத்தில் ரூ.3.50 இலட்சம் செலவில் வீடு கட்டித்தரப்பட்டு வருகிறது. இதில் மிகவும் பின்தங்கிய குடும்பமாக இருப்பின் அவர்களுக்கு கூடுதலாக ஒரு லட்சம் ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன்களை நம் அரசு பெற்றுத்தருகிறது. மேலும், தமிழகத்தில் தான் அதிகமாக அதாவது 42 சதவித பெண்கள் உழைக்கிறார்கள். 42 சதவீத பெண்கள் உழைக்கும் மகளிராகவும், பொருளாதாரத்தை உயர்த்தும் பெண்களாகவும் திகழ்ந்து வருகிறோம் என்பது பெரும் மகிழ்ச்சி. 

தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவிக்கையில் கூட நமது இலக்கு ஒரு டிரில்லியன் பொருளாதாரம் என்பது 2030. அதனை அனைத்து மகளிர்களும் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும். நம்முடைய பொருளாதார மேம்பாட்டின் மூலம் நம்முடைய வாழ்க்கைத்தரத்தையும், நம்நாட்டிற்கு பயனுள்ள பெண்களாக திகழ்வோம் என்று கூறி உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இந்த கடன் உதவிகளை வழங்குவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன் என தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், திருவைகுண்டம் சட்ட மன்ற உறுப்பினர் ஊர்வசி. அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் செ.ஜெனிட்டா, திட்ட இயக்குநர்(மகளிர் திட்டம்) மல்லிகா மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்மநாயகம், உதவி ஆணையர்(தொழிலாளர் துறை) மின்னல்கொடி, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் செயல் அலுவலர் தாமோதரன், உதவி திட்ட அலுவலர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

N.govindarajanSep 11, 2024 - 10:11:56 AM | Posted IP 162.1*****

Nalatthidangalsaridanoorupensan--valanga2;varudankalaakkinrathu

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital

New Shape Tailors



Thoothukudi Business Directory