» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சுசீந்திரம் கோவில் ஆவணி திருவிழா கொடியேற்றம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!
திங்கள் 9, செப்டம்பர் 2024 12:36:45 PM (IST)
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் எனும் ஊரில் பிரசித்தி பெற்ற தாணுமாலயன் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மார்கழி பெருந்திருவிழா, சித்திரை தெப்பத்திருவிழா, மாசி திருக்கல்யாண விழா மற்றும் ஆவணி திருவிழா ஆகியவை 10 நாட்கள் நடப்பது வழக்கம். இதில் ஆவணி திருவிழா மட்டும் திருமாலுக்காக நடத்தப்படுகிறது.
அந்த வகையில் இன்று காலை சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி சந்நதியின் அருகிலுள்ள திருவேங்கட விண்ணவரம் பெருமாள் சந்நதியின் எதிரிலுள்ள கொடி மரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது. விழா நாட்களில் தினமும் வாகனபவனி, சிறப்பு வழிபாடு நடக்கிறது. ஒன்பதாம் நாள் விழா அன்று தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் காலையில் ஆராட்டு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தேவஸம் போர்டு செய்து வருகிறது.