» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நெல்லையில் புதிய ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும்: ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை!

சனி 27, ஜூலை 2024 11:33:43 AM (IST)



திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியின் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றகோரி மத்திய ரயில்வே அமைச்சரிடம் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் நேரடியாக வலியுறுத்தினார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள மனுவில், "தென் தமிழகத்தில், குறிப்பாக திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதிக்கு ரயில் சேவைகளின் நீண்ட நாள் கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகள் பல ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும் தீர்வு காணப்படவில்லை. இந்தத் தருணத்தில், திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி ரயில்வே பயணிகளின் நீண்டகாலக் கோரிக்கையான கீழ்க்கண்டவாறு வலியுறுத்த விரும்புகிறேன். திருநெல்வேலியில் புதிய ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும்.

மதுரைகோட்டம் தெற்கு ரயில்வே மண்டலத்தில் உள்ள கோட்டங்கள் அதிக இருப்பு பாதை வழித்தடம் உள்ள கோட்டம் ஆகும். ஆனால் தெற்கு ரயில்வே மண்டலத்தில் மிகவும் புறக்கணிக்கப்பட்ட கோட்டமும் மதுரை கோட்டம் ஆகும். மதுரை கோட்டத்தில் எந்த ஒரு புதிய ரயில்வே தொழிற்சாலைகள் குறிப்பாக மெமு பராமரிப்பு பணிமனை, ரயில் பெட்டிகள் பழுதுபார்த்தல், எஞ்சின் பராமரிப்பு போன்றவைகள் கிடையாது. 

ஆனால் தெற்கு ரயில்வேயில் மற்ற அனைத்து கோட்டங்களிலும் ஏதாவது ஒரு பணிமனை யாவது உள்ளது. கடந்த 70 ஆண்டுகளாக; இதுபோன்ற ஆக்கபூர்வ திட்டங்களுக்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் மதுரை கோட்டத்துக்கு கடைசியாக வருகிறது. தற்போது மதுரை கோட்டத்தில் உள்ள முக்கிய இருப்புப்பாதையின் திருச்சி -திருநெல்வேலி பாதை இருவழிப்பாதையாக மாற்றம் பெற்ற பிறகு மதுரை கோட்டத்தில் ரயில்களை தேவையின்றி அதிக நேரங்கள் ரயில் நிலையங்களில் நிறுத்தி பயணிகளை அவதிக்குள்ளாகிறார்கள். 

இது மட்டுமில்லாமல் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் உள்ள இருப்பு பாதைகள் மதுரை மற்றும் திருவனந்தபுரம் என்று இரண்டு கோட்டங்களின் கீழ் வருகின்ற காரணத்தால் இந்த பகுதிகளில் ரயில்வே தொடர்பான நலன்கள் பாதிக்கப்படுகின்றன. திருவனந்தபுரம் மற்றும் மதுரை கோட்டங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல்கள் பிரச்சனையை அதிகாரிகள் மேலும் தீவிரப்படுத்தி பயணிகளை அவதிக்குள்ளாகுகிறார்கள். எனவே, திருநெல்வேலியை தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே கோட்டம் உருவாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நெல்லை எக்ஸ்பிரஸ் தினசரி கோரிக்கை

திருநெல்வேலி - சென்னை எழும்பூர் 12631/12632 நெல்லை எக்ஸ்பிரஸ் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயணிகளுக்கு சேவை செய்து திருநெல்வேலியை மாநில தலைநகர் சென்னையுடன் இணைக்கும் ஒரே ஒரு மிக மிக முக்கிய பாப்புலர் ரயிலாக உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில்  பயணிகள் எண்ணிக்கை கணிசமாக பல மடங்கு அதிகரித்துள்ளது.  வளர்ச்சி இருந்த போதிலும், திருநெல்வேலிக்கு என்று கூடுதல் புதிய தினசரி ரயில்கள் அறிமுகப்படுத்தப்படவில்லை. 

திருநெல்வேலி வழியாக சென்னைக்கு  ரயில்கள் இயக்கப்பட்டாலும் இந்த ரயில்களில் திருநெல்வேலி பயணிகளுக்கு முன்பதிவு இருக்கைகள் கிடைப்பது இல்லை. ஆகவே சென்னை-திருநெல்வேலி வழித்தடத்தில் டிக்கெட்டுகளுக்கு அதிக தேவை இருப்பதால்,சென்னை மற்றும் திருநெல்வேலி இடையே, நேர்வழி பாதையில் (வாஞ்சி மணியாச்சி, மதுரை, திருச்சி மற்றும் விழுப்புரம்) தினசரி இரண்டாவது அல்லது குளோன் நெல்லை எக்ஸ்பிரஸ் இயக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

16347/16348 திருவனந்தபுரம் - மங்களூர் எக்ஸ்பிரஸ் திருநெல்வேலி வரை நீட்டிக்கக் கோருதல்: மங்களூர் இருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தினசரி இரவு நேர ரயில் ரயில் இயக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை நிலுவையில் உள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், பயணிகள் சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கைகள் விடுத்த போதிலும், அத்தகைய சேவை அறிமுகப்படுத்தப்படவில்லை. 

இதற்காக16347/16348 மங்களூர்-திருவனந்தபுரம் அல்லது 16603/16604 மாவேலி எக்ஸ்பிரஸ் ரயிலை நாகர்கோவில் வழியாக திருநெல்வேலிக்கு நீட்டிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். திருநெல்வேலியை மையமாக வைத்து இயங்கி கொண்டிருந்த இரண்டு தினசரி ரயில்கள் திருவனந்தபுரம் கோட்டத்துக்கு நீட்டிப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கன்னியாகுமரி - ஹவுரா தினசரி ரயில் சேவை: தற்போது, தென்மாவட்டத்திலிருந்து ஹவுராவுக்கு ஒரே ஒரு வாராந்திர ரயில் (ஹவுரா-கன்னியாகுமரி) 12665/12666 வழித்தடத்தில் இயங்கி வருகின்றது. தென்மாவட்டங்களில் இருந்து மும்பை மற்றும் புதுடில்லிக்கு ஓரளவுக்கு நேரடி ரயில்கள் இருப்பது போன்று ஹவுராவுக்கும் கூடுதல் நேரடி ரயில் இயக்க வேண்டும்.  ஆகவே தற்போது இயங்கிவரும் திருச்சி-ஹவுரா, திருநெல்வேலி-புருலியா (வழி-விழுப்புரம்-ஹராக்பூர்,சென்னை-ஷாலிமார்) ஆகிய ரயில்களை நீட்டிப்பு செய்து தற்போது உள்ள ரயில் பெட்டிகளை வைத்து எந்தவித புதிய ரயில் சேவையும் இன்றி தற்போது இயங்கும் ரயில்களையும் ரயில் பெட்டிகளையும் இணைத்து கன்னியாகுமரி - ஹவுரா தினசரி ரயிலாக இயக்கவேண்டும்.

சென்னைக்கு அதிக ரயில் சேவைகள்

திருநெல்வேலி மற்றும் நாகர்கோவிலிருந்து சென்னைக்கு இடையே கூடுதல் தினசரி ரயில் சேவைகள் அவசர தேவையாக உள்ளது. சென்னை-மதுரை-திருநெல்வேலி-கன்னியாகுமரி ரயில் பாதையானது தெற்கு ரயில்வேக்கு அதிகமான வருவாய் ஈட்டித் தருகிறது. இருப்பினும், கடந்த பத்தாண்டுகளில் புதிய தினசரி இரயில் முன்பதிவு செய்யப்பட்ட தினசரிரயில் எதுவும் அறிமுகப் படுத்தப்படவில்லை. வாரம் 3 முறை இயக்கப்படும் 20683/20684 செங்கோட்டை-தாம்பரம் மற்றும் 22657/22658 நாகர்கோவில்-தாம்பரம் ஆகிய இரண்டு ரயில்களையும் தினசரி ரயிலாக சேவையை அதிகரித்து இயக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதே போல் திருநெல்வேலி-பாலருவி எக்ஸ்பிரசிற்கு கல்லிடைக்குறிச்சியில் நிறுத்தம் அளிக்க வேண்டும்.

திருநெல்வேலியில் மெமு ரயில் பராமரிப்பு பணிமனை: தெற்கு ரயில்வே மண்டலத்தில் உள்ள கோட்டங்களில் மதுரை கோட்டத்தில் அதிக அளவில் ரயில்வே வழித்தடங்கள் மற்றும் கிளை இருப்பு பாதை வழிகள் இருக்கின்றன. ஆனால் இதுவரை மதுரை கோட்டம் திருநெல்வேலியில் மெமு ரயில் பராமரிப்பு பணிமனை அமைக்க எந்த ஒரு திட்டமும் இருப்பதாக தெரியவில்லை. 

திருவனந்தபுரம் கோட்டம் அவர்கள் பகுதியில் மின்மயமாக்கல் பணிகள் நடந்து கொண்டிருக்கும் போதே மெமு ரயில்கள் இயக்க வேண்டி பணிமனை பணிகளை ஆரம்பித்து மின்மயமாக்கல் முடியும் போது மெமு பணிமனை பணிகளை முடித்தும் விட்டார்கள்.  இந்த விஷயத்தில் மதுரை கோட்ட அதிகாரிகள் நீண்ட உறக்கத்தில் உள்ளார்கள். ஆகவே ரயில்வே அமைச்சர் தலையீட்டு திருநெல்வேலியில் குறிப்பாக மேலப்பாளையத்தில் மெமு பராமரிப்பு பணிமனை கொட்டகையை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இது தென் தமிழகத்தில் மெமு ரயில்கள் இயக்கத்தை எளிதாக்கும் என்பதோடு பயணிகளுக்கு பயனிப்பதோடு;   செயல்பாட்டு செலவுகளைக் குறைக்கவும் வழி ஏற்படும்.

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ரயில் நிலைய மறு சீரமைப்புத் திட்டம்: திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ரயில் நிலையத்தை மறுசீரமைக்கும் திட்டத்திற்கு ரயில்வே துறை அனுமதி அளித்துள்ளது. திருநெல்வேலி ரயில் நிலைய விரிவாக்கம் மற்றும் மறுசீரமைப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் மிகவும் தாமதமான சூழ்நிலை இருப்பதோடு இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது போல் தெரிகிறது. திருநெல்வேலி ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகளை ஆர்விஎன்எல் நிறுவனம் பொறுப்பேற்று இதற்கு என்று சிறப்பு அதிகாரியை நியமித்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

ரயில் நிறுத்தம் கோரிக்கை:  திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் இருந்து பொதுமக்கள் சார்பாக தினசரி பல்வேறு ரயில் நிறுத்தம் கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளது.  அதிலும் குறிப்பாக நாகர்கோவில் - திருநெல்வேலி மற்றும் திருநெல்வேலி - செங்கோட்டை பிரிவுகளில் கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன்பு இருந்த பலரயில் நிறுத்தங்கள் மீண்டும் கொடுக்கப்படவில்லை. இது திருநெல்வேலி தொகுதியில் உள்ள பயணிகளை வெகுவாக பாதித்துள்ளது. ரயில்வேயின் வசதியை அதிகரிக்கவும், வருமானத்தை ஈட்டவும் இந்தப் பிரிவுகளில் ரயில்களுக்கான அனைத்து நிறுத்தங்களிலும் மீண்டும் தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நிறுத்தக் கோரிக்கைகள்

•காவல்கிணறு ரயில் நிலையம்: ரயில் எண். 16321/16322 நாகர்கோவில் - கோயம்புத்தூர், அந்தோதயா ரயில்கள் நிறுத்த வேண்டும்

•N.பணகுடி நிலையம்: ரயில் எண். 20636/20635 கொல்லம் - சென்னை எழும்பூர் மற்றும் ரயில் எண்.16321/16322 நாகர்கோவில் - கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ், அந்தோதையா ரயில்கள் என்.பணகுடியில் நிறுத்த வேண்டும்.

•வள்ளியூர் ரயில் நிலையம்: வள்ளியூரில் ஏற்கனவே நிறுத்தப்பட்ட ரயில்களுடன் பின்வரும் ரயில்களுக்கு நிறுத்தம் கோருதல்:
12666/12665 கன்னியாகுமரி - ஹவுரா வாரந்திர ரயில்
12668/12667 நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வாரந்திரரயில்
12641/12642 திருக்குறள் எக்ஸ்பிரஸ்
12690/12689 நாகர்கோவில் - எம.;ஜி.ஆர் சென்னை மத்திய வாரந்திரரயில்

• நாங்குநேரி  ரயில் நிலையம்: நாங்குநேரியில் ஏற்கனவே நிறுத்தப்பட்ட ரயில்களுடன் பின்வரும் ரயில்களுக்குநிறுத்தம் கோருதல்:
12633/2634 சென்னை எழும்பூர்-கன்னியாகுமரி
17236/17235 நாகர்கோவில் - பெங்களூர்
22667/22668 நாகர்கோவில் - கோயம்புத்தூர்
22627/22628 திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி
20691/20692 நாகர்கோவில் - தாம்பரம் அந்த்யோதயா
16729/16730 மதுரை - புனலூர் எக்ஸ்பிரஸ்

•மேலப்பாளையம்  ரயில் நிலையம்

மேலப்பாளையம் மிகப்பெரிய அளவில் மக்கள் தொகை கொண்ட நகரமாகும். ஆனால் இங்கு எந்த ரயில்களுக்கான நிறுத்தம் அளிக்கப்படவில்லை. கோவிட் தொற்றுக்கு முன்னர் மேலப்பாளையத்தில் நின்று சென்ற கோயம்புத்தூர் ரயிலையும், நாகர்கோவிலில் இருந்த திருநெல்வேலி வழியாக சென்னை செல்லும் ரயில்கள் ஏதாவது ஒன்றிற்கு மேலப்பாளையத்தில் நிறுத்தம் அளிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.  மேற்கூறிய கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital






Thoothukudi Business Directory