» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஓட்டப்பிடாரம் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

புதன் 24, ஜூலை 2024 3:46:12 PM (IST)



"உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின்கீழ், ஓட்டப்பிடாரம்  வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி ஆய்வு செய்தார். 

அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 23-11-2023 அன்று அறிவித்து 31.01.2024 அன்று தொடங்கி வைத்தார்.

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம், மாவட்டத்தில் குறிப்பிட்ட வட்டத்தில், ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும். இத்திட்டத்தின்படி, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள், குறிப்பிட்ட வட்டத்தில் தங்கி அன்று காலை 9.00 மணி முதல், மறுநாள் காலை 9.00 மணி வரை பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் / சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேறகொள்வார்கள். 

கள ஆய்வின் போது பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர்கள், மேம்பட்ட சேவைகள் வழங்குதல் / திட்டங்களை விரைவுபடுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காண்பர். மேலும், இன்றையதினம், மாவட்ட ஆட்சியர்கள் மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, மனுக்களைப் பெற்று அவற்றின்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

அரசின் சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் பெற்றிட ஏதுவாக, இந்த முகாமினை பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துறை அலுவலர்கள் பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை கனிவோடு பரிசீலித்து, எவ்வித தாமதமும் இன்றி அவற்றை நிறைவேற்றிட வழிவகை காண வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் மக்களை நாடி அவர்களின் குறைகளைத் தீர்க்க தொடங்கப்பட்ட ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், இன்று (24.07.2024) ஓட்டப்பிடாரம் வட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் / சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, கள ஆய்வு மேற்கொண்டார்கள்.

அதன்படி, ஓட்டப்பிடாரம் வட்டம் முறம்பன்குளம் கிராமத்தில் உள்ள முறம்பன்குளத்தில் நீர்வளத்துறையின் மூலம் ரூ.36 இலட்சம் செலவில் நடைபெற்றுவரும் நிரந்தர மறுசீரமைப்புப் பணிகளையும், ஓட்டப்பிடாரம் வ.உ.சி அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தினை உணவருந்தி ஆய்வு செய்து, உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் உள்ள மேசை கணினி மற்றும் அதிநவீன தொலைக்காட்சிப் பெட்டி மூலமாக மாணவர்களுக்கு கற்பிக்கும் முறைகள் குறித்து ஆய்வு செய்து, அதன் பயன்கள் பற்றி மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

ஓட்டப்பிடாரம் வட்டத்தில் பொதுப்பணித்துறையின் மூலமாக ரூ.4.74 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் புதிதாக கட்டப்பட்டுவரும் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகக் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து, சிலோன் காலனியில் குறுங்காடு அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். பாஞ்சாங்குறிச்சி அங்கன்வாடி மையத்தில்; நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவர்களின் கோரிக்கைகள் குறித்து கனிவுடன் கேட்டறிந்தார்கள். பின்னர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் 45 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து, ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், அனைத்துத்துறை மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் முற்பகலில் மேற்கொண்ட களப்பயணங்கள், அலுவலக ஆய்வுகள் குறித்து கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலர்கள் உறுதிசெய்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென அறிவுறுத்தினார்.

 ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், மேற்பார்வைப் பொறியாளர் (தாமிரபரணி வடிநில வட்டம்) சிவக்குமார், செயற்பொறியாளர் (கீழ் தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டம்) வசந்தி, செயற்பொறியாளர் (கட்டடம் மற்றும் பராமரிப்பு) செல்வி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் சுரேஷ், ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிரி, வசந்தா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital






Thoothukudi Business Directory