» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண் குழந்தைகளைக் காப்போம் பயிலரங்கம் : எஸ்பி துவக்கி வைத்தார்!

வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:37:35 PM (IST)



தூத்துக்குடியில் ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற தலைப்பில் காவல் துறையினருக்கான ஒருநாள் பயிலரங்கத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பாலாஜி சரவணன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

சமூகநலன் மற்றும் உரிமைத்துறை சார்பாக இன்று (29.09.2023) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக கூட்ட அரங்கில் வைத்து ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற தலைப்பில் மாவட்ட காவல்துறையினருக்கான ஒருநாள் பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேற்படி பயிலரங்கத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எல். பாலாஜி சரவணன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தையாக இருந்தாலும் அவர்களை நல்ல முறையில் வளர்ப்பது தாயின் கடமையாகும். ஒரு சமுதாயம் நன்றாக இருக்க வேண்டுமென்றால் பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர வேண்டும். அவ்வாறு ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பாட்டாலே நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும். பாலின பாகுபாடு கூடாது. தற்போது சமுதாயத்தில் பல துறைகளில் பெண்கள் சாதித்து உயரிய பதவிகளில் உள்ளனர்.

தற்போது சமூக வலைதளங்களை பெண் குழந்தைகள் பயன்படுத்தும்போது அவர்களை அறியாமலேயே அதற்கு அடிமையாகி விடுகிறார்கள். அதனால் பல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் செல்போன்களை பயன்படுத்தும்போது அவர்களது கண்காணிப்பிலேயே பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துறையினர் மூலம் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்களிடையே தொடர்ந்து மாற்றத்தை தேடி என்ற விழிப்புணர்வு நிகழச்சி நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

மேலும் பெண்கள் பாதிக்கப்பட்டு காவல் நிலையத்திற்கு புகாரளிக்க வந்தால், அவர்களை காவல்துறையினராகிய நீங்கள் இன்முகத்துடன் வரவேற்று அவர்களுடைய குறைகளை கேட்டறிந்து சட்டப்படி தீர்த்து வைக்க உதவ வேண்டும்.  காவல் துறையினர் குழந்தைகளிடம் விசாரணையில் ஈடுபடும்போது அவர்களிடம் அன்பாகவும், மதிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும். காவல் துறையினர் பொதுமக்களிடம் கனிவாகவும், பண்புடனும் நடந்துகொள்வது மிக முக்கியமானதாகும். எனவே காவல்துறையினராகிய நீங்கள் இந்த பயிலரங்கத்தை பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றும் இதுசம்மந்தமாக சமூகநலன் மற்றும் உரிமைத்துறைக்கு எல்லாவித ஒத்துழைப்பையும் மாவட்ட காவல்துறை வழங்கும் என்றும் கூறி தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.

அதனை தொடர்ந்து தூத்துக்குடி ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி ஷெலின் ஜார்ஜ், மாவட்ட காவல்துறையினருக்கு பெண்குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், பெண் கல்வியினை ஊக்குவித்தல், படிப்பை இடைநிறுத்திய பெண் குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் கல்வி பயிலவும், ஊக்குவித்து உதவுவது குறித்தும் எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட சமூகநல அலுவலர் (பொறுப்பு) திலகா, ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட அலுவலர் சரஸ்வதி, வழிகாட்டி செயல் அலுவலர் வீரலெட்சுமி உட்பட உறுப்பினர்கள் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






CSC Computer Education



Thoothukudi Business Directory