» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை : ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்

சனி 3, ஜூன் 2023 11:35:40 AM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளிகளின் தரத்தினை உயர்த்துவதற்கு மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்தார். 

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து வருகின்ற 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தூய்மைப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருவதையொட்டி, சாமுவேல்புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் சோரீஸ்புரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், இன்று (03.06.2023) நேரில் சென்று ஆய்வு செய்து தெரிவித்ததாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 88 மேல்நிலைப்பள்ளிகள், 524 தொடக்கப்பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் இன்றைய தினம் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள் உதவியோடு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறுகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும் துணை ஆட்சியர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

மாநகராட்சி பகுதியில் உள்ள 21 பள்ளிகளிலும் சுத்தம் செய்யும் பணிகளை மாநகராட்சி மேயர் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தியுள்ளார்கள். பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள், மேசைகள், இருக்கைகள், கழிப்பறைகள், குடிநீர் தொட்டிகள் ஆகியவை சுத்தம் செய்யப்படுகிறது. மேலும் பள்ளிகளில் உள்ள மின் அமைப்புகளையும் ஆய்வு செய்து பழுதுகள் இருப்பின் சரிசெய்யப்பட உள்ளது. பள்ளிகள் வருகிற 7ம் தேதி திறக்கப்படவுள்ளதால் மாணவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்காக இன்றைய தினம் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறுகிறது.

தனியார் பள்ளிகளில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ், மாணவர் சேர்க்கை நடைபெறும் பணிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான குழுவினர் கண்காணித்து வருகின்றனர். நமது மாவட்டத்தில் 56 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 80க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகள் இருக்கின்றன. 

இப்பள்ளிகளில் படித்து கல்லூரியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் பள்ளிப்படிப்பு முடித்து கல்லூரி சேர்வதற்கு பொருளாதார சூழல் தடையாக இருக்கக்கூடாது என்று தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தி இருக்கின்றார்கள். 

அதனடிப்படையில் ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியர்களின் இருப்பிடம், பெற்றோரின் நிலை, மதிப்பெண்கள், வங்கி கணக்கு, கல்லூரியில் சேர்வதற்கான விவரங்கள், கல்வி கட்டணம் போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. கல்வி கடன் தேவைப்படும் மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் வங்கிகளில் கடன்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 

புதுமைப்பெண் திட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு அதிகளவில் மாணவிகள் கல்லூரியில் சேர்கின்றனர். திருச்செந்தூர் பகுதியில் பிளஸ் 2 முடித்து வறுமை காரணமாக கல்லூரியில் சேராத ஒரு மாணவி 2 ஆண்டுகளுக்கு பிறகு கல்லூரியில் சேர்ந்துள்ளார். மாநகராட்சி பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் திறந்தபிறகு 300ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 700ஆக உயர்ந்துள்ளதாக தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.


அரசு பள்ளிகளின் வசதிகளை அதிகரித்து தரத்தினை உயர்த்துவதற்கு மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதனால் அரசு பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர் என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்தார். ஆய்வில், மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், வட்டாட்சியர் பிரபாகரன், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறை, உள்ளாட்சி அமைப்பு பணியாளர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital









Thoothukudi Business Directory