» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கூகுள் பேயில் ஒரு ரூபாய் அனுப்பி ரூ.65 ஆயிரம் மோசடி: சைபர் கிரைம் போலீசார் விசாரணை

வெள்ளி 10, மார்ச் 2023 11:18:43 AM (IST)

கோவில்பட்டியில் பர்னிச்சர் கடை உரிமையாளரிடம் 'கூகுள் பே' மூலம் ரூ.65 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (52). இவர் கோவில்பட்டியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இதன் கிளைகள் விருதுநகர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்திகேயனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு ஒருவர் பேசினார். அப்போது, தான் சாகில் குமார், ராணுவ வீரர் காஷ்மீரில் இருந்து பேசுவதாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். 

பின்னர் தனக்கு பர்னிச்சர் பொருட்கள் வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு கார்த்திகேயன் நீங்கள் காஷ்மீர் மற்றும் அருகில் உள்ள இடங்களில் வாங்கிக் கொள்ளலாமே என தெரிவித்துள்ளார். அதற்கு பதில் அளித்த சாகில் குமார், சாத்தூரில் உள்ள எனது நண்பருக்கு அன்பளிப்பு வழங்க வேண்டும் என்பதாலும், உங்கள் கடை 4 நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளதால் தரமாக இருக்கும் என்பதாலும் உங்களிடம் வாங்க முடிவு செய்துள்ளேன் என தெரிவித்தார்.

பின்னர் மீண்டும் கார்த்திகேயனை தொடர்பு கொண்ட சாகில் குமார், தனக்கு சோபா, மேஜை, கட்டில் உள்ளிட்ட பொருட்கள் வேண்டும் என அதற்குரிய மாதிரி படங்களை செல்போன் வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி வைத்தார். அதனை பார்த்த கார்த்திகேயன், அதற்கான மதிப்பு ரூ.80 ஆயிரம் என தெரிவித்துள்ளார். பின்னர் அவர்கள் பேரம் பேசி ரூ.65 ஆயிரம் என விலை நிர்ணயித்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஆன்-லைன் மூலம் பணம் அனுப்புவதாக சாகில் குமார் தெரிவித்துள்ளார்.

இதனால் கார்த்திகேயன் தன்னுடைய நடப்பு வங்கி கணக்கு எண்ணை அனுப்பி உள்ளார். அப்போது, தான் ராணுவ வீரர் என்பதால் இந்த கணக்கில் பணம் அனுப்ப முடியாது. எனவே வேறு கணக்கு எண்ணை தருமாறு சாகில் குமார் கேட்டுள்ளார். இதனால் கார்த்திகேயன் தனது மகன் அருண்குமார் என்பவரின் வங்கி கணக்கு மற்றும் அதற்குரிய 'கூகுள் பே' எண்ணையும் அனுப்பி உள்ளார். முதலில் 1 ரூபாய் அனுப்பிவிட்டு அந்த பணம் வந்துள்ளதா என சாகில் குமார் கேட்டுள்ளார். 

ஆம் என கார்த்திகேயன் கூறியதும், செல்போனில் ஒரு லிங்கை அனுப்பி அதன் மூலம் பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். அருண்குமார் தனது செல்போன் எண்ணிற்கு வந்த லிங்கை தொட்டதும், அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.65 ஆயிரம் எடுக்கப்பட்டதற்கான தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது தந்தையிடம் இதுபற்றி கூறி உள்ளார்.

பின்னர் அவர் சாகில் குமாரை தொடர்பு கொண்டு விபரம் கேட்டுள்ளார். அப்போது ரூ.35 ஆயிரம், ரூ.18 ஆயிரம் என பல்வேறு லிங்குகளை அனுப்பி, அதனை தேர்வு செய்தால் உங்களுக்குரிய பணம் மீண்டும் உங்களது வங்கி கணக்கில் வந்துவிடும் என கூறி உள்ளார். ஆனால் உஷாரான கார்த்திகேயன் இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து

பின்Mar 10, 2023 - 12:06:40 PM | Posted IP 162.1*****

நம்பர் போடாமல் பணம் போகாது... முட்டாள்களின் வேலை இது...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital






Thoothukudi Business Directory