» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வான் தீவு பகுதியில் கனிமொழி எம்பி ஆய்வு

சனி 24, செப்டம்பர் 2022 3:42:35 PM (IST)



தூத்துக்குடி அருகேயுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியான வான் தீவில் கனிமொழி எம்பி படகில்‌ சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி அருகேயுள்ள வான் தீவினை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர்  கனிமொழி கருணாநிதி, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி , மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ,  மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)  வெ.சரவணன்,   ஆகியோர் முன்னிலையில் இன்று (24.09.2022) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர் அவர் தெரிவித்ததாவது: மன்னார் வளைகுடா இந்தியாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு இயற்கை பொக்கிஷமாகும். இங்கு பவளப்பாறைகள், கடற்புற்கள், அலையாத்து காடுகள், தீவுகள் மற்றும் கழிமுகங்கள் போன்ற முக்கியமான வாழிடங்கள் அமைந்துள்ளதால் கடல் உயிரிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும். குறிப்பாக வனக்குடாவில் தூத்துக்குடிக்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையே அமைந்துள்ள 21 தீவுகளும் அவற்றை சுற்றி அமைந்துள்ள பவளப்பாறைகளும் உலகப்புகழ் பெற்றவையாகும். 

இந்த தீவுகள் மன்னர் வளைகுடாவின் உயிர்ப்பன்வகையை பெருக்குவதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இந்த தீவுகளில் பல்வேறு வகையான தாவரங்கள், பறவைகள் மற்றும் பூச்சியினங்கள் தஞ்சம் கொண்டுள்ளன. மேலும், கடல் சீற்றம் மற்றும் புயல் நேரங்களில் மீனவர்கள் ஒதுங்குவதற்கு புகலிடமாக விளங்குகின்றன. இத்தீவுகள் மன்னார் வளைகுடா கடற்பகுதிக்கு இயற்கை அரணாக விளங்குகின்றன. 

குறிப்பாக 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவின் போது இந்த தீவுகள் மற்றும் அவற்றை சுற்றி உள்ள பவளப்பாறைகள் சுனாமி பேரலையின் வீரியத்தை குறைத்து தூத்துக்குடி மற்றும் ராமேஸ்வரம் வரை உள்ள கடற்கரை கிராமங்களில் எந்த ஒரு உயிர் சேதமும் இல்லாதவாறு மக்களை பாதுகாத்தன. இவ்வாறு இந்தத் தீவுகள் கடல் சுற்றுச்சூழலுக்கும் மீனவ மக்களுக்கும் மிகவும் இன்றியமையாததாகும்.

ஆனால் பருவநிலை மற்றத்தால் ஏற்படும் கடல் மட்டம் உயர்வினாலும் பவளப்பாறைகள் அளவு குறைவதாலும் தீவுகளின் நிலப்பரப்பு கடந்த 40 வருடங்களில் வெகுவாகக் குறைந்துள்ளன. தீவுகளைச் சுற்றி அமைந்துள்ள பவளப்பாறைகள், தீவுகளை பெரிய அலைகள் தாக்காமலும், கடற்கரையில் மண் அரிப்பு ஏற்படாமலும் பாதுகாக்கின்றன. பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் வெளிறுதல், நோய்கள் மற்றும் பல்வேறு காரணங்களால் பவளப்பாறைகள் பாதிக்கப்பட்டு அழிந்து வருகின்றன. இதனால் உயர்ந்து வரும் கடல் மட்டம் மற்றும் பெரிய அலைகளின் தாக்கத்தால் தீவுகளில் அரிப்பு ஏற்பட்டு நிலப்பரப்பு குறைந்துள்ளன. 

இவற்றின் காரணமாக விலாங்குச்சல்லி மற்றும் பூவரசன்பட்டி ஆகிய இரண்டு தீவுகள் ஏற்கனவே மூழ்கிவிட்டன. ராமேஸ்வரம் முதல் தூத்துக்குடி வரையில் 21 தீவுகளில்   தூத்துக்குடியிலிருந்து துவங்கும் முதல் தீவுதான் வான் தீவு ஆகும். மேற்கூறப்பட்ட காரணங்களால் இந்த தீவு கடந்த 40 வருடங்களில் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

1969ம் ஆண்டு இந்திய அரசு வரைபடத்தின்படி வான் தீவின் நிலப்பரப்பு சுமார் 20.08 ஹெக்டேர் அளவு இருந்தது. அந்த அளவு குறைந்து 1986ஆம் ஆண்டு வனத்துறை அறிக்கையில் சுமார் 16 ஹெக்டேர் அளவு இருந்தது. பவளப்பாறைகள் அளவு தொடாச்சியாக குறைந்ததால் 2015ம் ஆண்டு இந்த தீவின் அளவு வெறும் 2.3 ஹெக்டேர் அளவு மட்டுமே இருந்தது. மேலும் அந்த குறைந்த நிலப்பரப்பும் குறைந்து கொண்டே இருந்தது. 

சுற்றுச்சூழலையும் இயற்கை வளங்களையும் பாதுகாப்பதில் அக்கறை கொண்ட தமிழக அரசு வான் தீவைப் பாதுகாக்கவும் தீவை சார்ந்துள்ள பல்வகையான உயிர்கள் பாதுகாக்கவும் மற்றும் மீனவ மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் முயற்சி எடுத்தது. 2015ம் ஆண்டு முதல் அரசின் உதவியோடு வான் தீவைச் சுற்றிலும் பல்வேறு நன்மைகளைத் தரும் செயற்கைப் பவளப்பாறைகள் இடப்பட்டன.

தூத்துக்குடியில் உள்ள சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிலையம் மத்திய சுற்றுச்சூழல் வனம மற்றும் பருவ நிலை மாற்ற துறையின் நிதி உதவியோடு தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை மற்றும் சென்னை ஐஐடி உடன் இணைந்து இந்த  திட்டத்தை நிறைவேற்றியது. இந்த செயற்கை பவளப்பாறைகள் தீவுக்கரையில் மோதும் அலைகளின் மும்முரத்தைக் குறைத்து தீவை மண் அரிப்பிலிருந்து பாதுகாக்கின்றன. 

அதுமட்டுமல்லாமல் இவை பவளப்பாறைகள், கடல் பாசிகள், கடற்பஞ்சுகள், கடல் விசிறிகள் போன்ற அரிய உயிரிகள் ஒட்டி வளரும் ஆதாரமாக உதவி செய்து ஒரு இயற்கை வாழிடத்தை உருவாக்குவதனால் உயிர் பல்வகையை பெருக்குவதோடு வாழிடமாக விளங்குவதால் இந்த செயற்கை பவளப்பாறைகள் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு மீன் வகைகள் பெருகுவதற்கு உதவி செய்கின்றன. 

அரசின் இந்த துரித நடவடிக்கையால் தீவில் மண் அரிப்பு படிப்படியாக குறைந்தது. அதுமட்டுமல்லாமல் செயற்கைப் பவளப்hறைகள் தீவில் மண் சேரவும், தீவின் அளவு அதிகரிக்கவும் உதவின. தற்பொழுது இந்த தீவின் அளவு அதிகரித்து சுமார் 3.75 ஹெக்டேர் அளவாக உள்ளது. இவ்வாறு அரசின் முயற்சியால் வான் தீவு மூழ்காமல் காக்கப்பட்டுள்ளது. இடப்பட்ட செயற்கை பவளப்பாறைகளைச் சுற்றிலும் மீன்வளம் வெகுவாக அதிகரித்துள்ளது. 

எனவே அரசின் இந்த நடவடிக்கையால் மன்னர்வளைகுடாவின் இயற்கை வளங்களான தீவும், பவளப்பாறைகளும் அவற்றை சார்ந்து வாழும் மீன்கள் மற்றும் பல்வேறு உயிரிகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தீவு மற்றும் பவளப்பாறைகளைச் சார்ந்து வாழும் மீனவ மக்களின் வாழ்வாதாரம் அரசினால் பாதுகாக்கப்;பட்டுள்ளது. இந்த செயற்றைப் பவளப்பாறைகள் இனி வரும் பல ஆண்டுகளுக்கு தீவு மற்றும் அரிய பவளப்பாறைகளைப் பாதுகாத்து உயிர் பல்வகையையை பேணிக்காத்து மீன்வளத்தை பெருக்கி மீனவ மக்களுக்கு பேருதவியாக அமையும். 

மேலும் மூழ்கி வரும் மற்ற தீவுகளான காசுவரி மற்றும் காரியாச்சல்லி தீவுகளுக்கும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டதால் அந்த தீவுகளும் காப்பாற்றப்பட்டு உயிர் பல்வகையையும் பெருகும் என  தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர்  கனிமொழி கருணாநிதி  தெரிவித்தார். நிகழ்ச்சியில்  நபார்டு பொது மேலாளர் சுரேஷ் ராமலிங்கம்,SDMRI இயக்குநர் பேட்டர்சன் எட்வர்ட் ஆகியோர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital



Thoothukudi Business Directory