» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் மேம்பாலத்திற்கு நில எடுப்பு பணிகள்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்!

வெள்ளி 20, மே 2022 4:18:07 PM (IST)தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு நில எடுப்பு பணிகள் நடந்து வருகிறது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்..

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் (கட்டுமானம்) சந்திரசேகர் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2010-ம் ஆண்டு 2 லட்சத்து 8 ஆயிரம் வாகனங்கள் இருந்தன. தற்போது வாகனங்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 15 ஆயிரமாக உயர்ந்துள்ளன. கொரோனா தொற்று காலத்துக்கு பிறகு இருசக்கர வாகனங்கள், கார்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. கடந்த ஆண்டு 52 ஆயிரத்து 713 விபத்துகள் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளன. இதில் 48 ஆயிரத்து 607 விபத்துகள் ஓட்டுனரின் கவனக்குறைவால் ஏற்பட்டுள்ளது.

2020-ம் ஆண்டு 8 ஆயிரத்து 60 உயிரிழப்புகள்தான் நிகழ்ந்தன. ஆனால் 2021-ம் ஆண்டு உயிரிழப்புகள் 14 ஆயிரத்து 912 ஆக அதிகரித்துள்ளது. ஓட்டுனர்கள் கவனக்குறைவால் 11 ஆயிரத்து 633 விபத்துகளில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 2021-ம் ஆண்டு 1255 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 390 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அதிகமான விபத்துகள் நடக்கும் மாவட்டங்களில் தூத்துக்குடியும் ஒன்றாக உள்ளது. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய கவனம் எடுத்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் சாலை விதிகளை மீறியதாக 2021-ம் ஆண்டு 92 ஆயிரத்து 491 பேருக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 'நம்மை காக்கும் 48 மணி நேரம்' திட்டத்தில் 58 ஆயிரத்து 191 பேர் காப்பாற்றப்பட்டு உள்ளனர். இதற்காக தமிழக அரசு ரூ.501 கோடி செலவு செய்துள்ளது.

விபத்து அதிகம் நடைபெறும் இடங்களாக தமிழகத்தில் 1,337 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 70 இடங்கள் உள்ளன. விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்துகளை குறைப்பதற்காக 400 பொறியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. சாலை விதிகள் தெரியாதவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் அளிக்க கூடாது. ஓட்டுனர் உரிமம் வழங்குவதில் கூடுதல் கட்டுப்பாடுகள் வேண்டும். இதுதொடர்பாக பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

சாலைகள் விரிவாக்கம் நடைபெறும்போது, ஒரு மரம் அகற்றினால் 10 மரங்களை நட வேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். சாலை பாதுகாப்பு இயக்கம் மக்கள் இயக்கமாக மாற வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தை சாலை விபத்துகள் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்.

பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி முதல் மணியாச்சி வரை 21 கிலோ மீட்டர் தூர சாலை அமைப்பதற்கு ரூ.28 கோடியே 53 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. தெற்கு வீரபாண்டியபுரத்தில் இருந்து சிப்காட் வளாகத்துக்கு ரூ.19.9 லட்சம் மதிப்பில் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

தூத்துக்குடி- கன்னியாகுமரி சாலையில் தண்ணீர்பந்தல் பகுதியில் ரூ.5 கோடியே 66 லட்சம் மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட உள்ளது. தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு நில எடுப்பு பணிகள் நடந்து வருகிறது. திருச்செந்தூர் கோவிலுக்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆய்வு செய்துள்ளோம். இதுதொடர்பாக முழு திட்ட அறிக்கை தயாரித்து விரைவில் பணிகள் தொடங்கப்படும்.

மீளவிட்டான் ரெயில்வே மேம்பாலம் பணிகள் நடந்து வருகிறது. ஜூலை மாதத்துக்குள் அந்த பணிகள் முடிந்து விடும். தூத்துக்குடி மாநகராட்சி சாலை மையப்பகுதியில் தடுப்புகள் காரணமாக மண்திட்டுகள் ஏற்படுகிறது. இதனால் மெக்கானிக்கல் துடைப்பான் மூலம் மணல் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 25 தரைப்பாலங்களில் 13 தரைப்பாலங்களை மேம்பாலமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வல்லநாடு பாலம் தொடர்பாக ஆய்வு நடந்து வருகிறது. டெண்டர் விடப்பட்டு, அந்த பணி விரைவில் தொடங்கப்படும் என்றார்.

அமைச்சர் கீதாஜீவன்

கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், ''சாலை பாதுகாப்பு கூட்டங்களில் மக்கள் பிரதிநிதிகளை பங்கேற்க செய்ய வேண்டும். நகரின் மையப்பகுதியில் போக்குவரத்து பூங்கா உள்ளது. இதனை பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட வேண்டும். தூத்துக்குடியில் பல இடங்களில் சிக்னல்கள் அமைக்கப்பட உள்ளன. ஜோதிநகர் சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி 3-ம் கேட் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டது. அந்த பகுதியில் இணைப்புசாலை அமைக்கப்படவில்லை. அதனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வி.வி.டி. சிக்னல் மேம்பாலம் விரைவில் அமைக்கப்படும்'' என்று கூறினார்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், ''தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு அதிக அளவில் லாரிகள் வருகின்றன. அந்த லாரிகள் மீண்டும் பொருட்களை ஏற்றி செல்வதற்காக சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. தூத்துக்குடி துறைமுகம் சார்பில் லாரிகள் நிறுத்தும் இடம் இருந்தாலும், கூடுதல் கட்டணம் காரணமாக லாரிகள் அங்கு நிறுத்தப்படாமல் உள்ளது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் லாரிகள் நிறுத்தும் இடம் அமைக்க வேண்டும். முத்தையாபுரத்தில் இருந்து அத்திமரப்பட்டி வழியாக புதுக்கோட்டை செல்லும் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். தூத்துக்குடி மக்கள் மணியாச்சியில் இருந்து ரெயில் பயணம் மேற்கொள்வதற்கு வசதியாக தூத்துக்குடி-மணியாச்சி சாலை பணியை உடனடியாக தொடங்க வேண்டும்'' என்று கூறினார்.

விழிப்புணர்வு புத்தகம் வெளியீடுஇந்நிகழ்வில் CII மற்றும் 'யங் இந்தியா' அமைப்பு சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிறுவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிதி உதவியுடன் பொன்குமரன் என்பவரால் வடிவமைக்கப்பட்ட விழிப்புணர்வு புத்தகத்தை அமைச்சர் எ.வ.வேலு  வெளியிட்டார்.  

இந்த புத்தகத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ.,க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, ஊர்வசி அமிர்தராஜ், யங் இந்தியா சார்பாக தலைவர் சில்வியா ஜான், துணை தலைவர் ராஜேஷ் மற்றும் சாலை பாதுகாப்பு துறை தலைவர் தினேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory