» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாழ்நாள் முழுவதும் நாட்டிற்காக போராடியவர் வஉசி : கனிமொழி எம்பி புகழாரம்!

வியாழன் 18, நவம்பர் 2021 3:02:21 PM (IST)நாட்டின் சுதந்திரத்திற்காக, நாட்டு மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய மிகப் பெரிய தலைவர் வ.உ.சி. என கனிமொழி புகழாரம் சூட்டினார். 

வ.உ சிதம்பரனாரின் 150வது பிறந்த ஆண்டு மற்றும் 85ஆவது நினைவு தினத்தினை முன்னிட்டு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டுக் மையத்தின் சார்பில் மெக்கவாய் கிராமிய மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழக தொழில் துறை, தொல்லியல், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டு ஸ்ரீமான் வி.ஓ.சிதம்பரம்பிள்ளை ஜீவிய சரித சுருக்கம் பதிப்பகத்தினை வெளியிட்டு ஓவியப்போட்டியினை துவக்கி வைத்தார்கள். 

இந்நிகழ்ச்சியில் ஆணையர் கலை பண்பாட்டுத்துறை கோ.பிரகாஷ், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா (ஓட்டப்பிடாரம்) மார்க்கண்டேயன் (விளாத்திக்குளம்) ஆகியோர் வ.உ.சி. திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி முன்னிலை வகித்தார்கள்.

நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட சில மாதங்களுக்குள்ளாக இந்த நாட்டு விடுதலைக்காக தமிழ் மண்ணின் பெருமைக்காக போராடி இருக்கக்கூடிய அத்தனை தலைவர்களையும் மதிக்கக்கூடிய வகையிலும் மொழிக்காக பாடுபட்டு இருக்கக்கூடிய தலைவர்கள், எழுத்தாளர்கள் இவர்களை எல்லாம் பெருமைப்படுத்தக்கூடிய வகையிலே தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். 

வ.உ.சி அவர்களை பெருமைப்படுத்தக்கூடிய வகையிலே பல்வேறு அறிவிப்புகள் அவரது நினைவு நாளையொட்டி செய்யப்பட்டது. இந்த பகுதியிலே இருக்கக்கூடிய மக்கள் எல்லாம் பெரு மகிழ்வு அடையக்கூடிய வகையிலே அந்த அறிவிப்புகள் செய்யப்பட்டு இருந்தது. அதன் ஒரு பகுதியாகத்தான் காலையில் தொடங்கி மாலை வரை கலை நிகழ்ச்சிகளோடு முடியக்கூடிய வகையிலே புத்தக வெளியீடு, அதன் பிறகு ஓவிய போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் என்று இன்று நாள் முழுதும் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வ.உ.சி. அவர்களைப் பற்றியும், அவர்களது பெருமைகளை பற்றியும் நாம் இங்கே பேசியவர்கள் எல்லோரும் எடுத்துரைத்தார்கள். 

வ.உ.சி. அவருடைய பொருளாதாரத்தை பற்றி வாழ்நாளில் எந்த ஒரு சூழ்நிலையிலும் அக்கறை கொள்ளாமல் வாழ்ந்து வந்துள்ளார். மிகச்சிறந்த பாரிஸ்டர் பட்டம் பெற்றிருக்கக்கூடிய வழக்கறிஞராக இருந்தாலும்கூட அதன் மூலம் அவர் பெரிய பொருளை ஈட்டியதில்லை. அவர் தான் யாருக்கெல்லாம் வழக்காடினார்களோ அவர்களை எல்லாம் வீட்டிற்கு அழைத்து உணவு வழங்கி அவர்களுக்காக வாதாடி வெற்றி பெற்று தந்த வழக்கறிஞர்தான் வ.உ.சிதம்பரனார், இப்படி நாட்டின் சுதந்திரத்திற்காக நாட்டு மக்களுக்காக தன்னை சார்ந்துள்ள மக்களுக்காக வாழ்நாள் எல்லாம் போராடிய மிகப் பெரிய தலைவர் ஆவார். 

அவர்களின் முப்பாட்டன் தந்தையார் சேர்த்து வைத்த சொத்துக்கள் மற்றும் அவர் சேர்த்து வைத்த சொத்துக்கள் அனைத்தையும் கப்பல் நிறுவனத்திற்காகவும், சுதந்திர போராட்டத்திற்காகவும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து பொருளாதாரத்தை காப்பாற்ற முடியாத நிலையை பெற்றிருந்தாலும் அவரை கைது செய்தபோது அவரை ஆங்கிலேய அரசு சிறையில் அடைத்தது மட்டும் அல்லாமல் அவர் வாங்கியிருந்த பாரிஸ்டர் பட்டத்தையும் எடுத்துக்கொண்டார்கள். 

மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை அவர் சந்தித்தார். அவரை சார்ந்திருந்த யாரும் உதவி செய்யவில்லை. ஆனால் உறுதுணையாக நின்றவர் தந்தை பெரியார் . வ.உ.சி. மறைந்த பொழுது தந்தை பெரியார் அவரை பற்றி 2 தலையங்கங்கள் பத்திரிக்கையில் எழுதி சமூக நீதிக்கு அக்கறை கொண்டவராக இருந்தார். இதன் மூலம் சமூக நீதியில் எல்லோரும் சமம் என்று வ.உ.சி. வாழ்நாள் முழுதும் பணியாற்றினார் என்றார்கள்.  முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாடி வ.உ.சி. அவர்களுக்கு பெருமை சேர்த்தார்கள். தற்பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் அந்த வகையில் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150வது ஆண்டு மற்றும் 85வது நினைவு நாளை கொண்டாடும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு பெருமை சேர்த்தார்கள். எனவே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் மண்டல கலை பண்பாட்டு மையம் திருநெல்வேலி கோபாலகிருஷ்ணன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மைய செயலர் மு.ராமசாமி, ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் எல்.ரமேஷ், ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா, ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் சித்ராதேவி, ஓட்டப்பிடாரம் வட்டாச்சியர் நிஷாந்தினி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (ஓட்டப்பிடாரம்) இப்ராகிம் சுல்தான், வெங்கடாசலம், முக்கிய பிரமுகர்கள் ஜெகன்பெரியசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Nalam PasumaiyagamThoothukudi Business Directory