» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் : பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது

செவ்வாய் 9, நவம்பர் 2021 7:50:03 PM (IST)திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா சூரசம்ஹார நிகழ்வு இன்று(நவ.9) மாலை பக்தர்களின்றி நடைபெற்றது. 

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த நவ. 4 (வியாழக்கிழமை ) காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 6-ம் திருநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனையும், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளினார். 

பின்னர் கோவில் கடற்கரை நுழைவுவாயில் பகுதியில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. முதலில் மாயையே உருவான யானை முகனையும், பின்னர் கன்மமே உருவாக கொண்ட சிங்கமுக சூரனையும், தொடர்ந்து ஆணவமே உருவான சூரபத்மனையும் சுவாமி ஜெயந்திநாதர் வேல் கொண்டு அடுத்தடுத்து வதம் செய்தார். இறுதியாக மாமரமும், சேவலுமாக உருமாறி வரும் சூரபத்மனை சேவலும், மயிலுமாக மாற்றி சுவாமி ஆட்கொண்டார். மயிலை தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியாகவும் சுவாமி வைத்துக்கொள்கிறார். 

விழாவின் முதல் 5 நாள்கள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று சூரசம்ஹார நிகழ்வில் மக்கள் அதிகம் கூடுவார்கள் என்பதால் கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை முகப்பில் மூன்று பக்கமும் சுற்றி தகரகத்தினால் தடுப்புகள் அமைக்கப்பட்டது. மேலும், கடற்கரை வழியாக பக்தர்கள் வரமுடியாதபடி நாழிக்கிணற்றில் இருந்து கடல்நீர் வரை தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.போலீசார் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. துாத்துக்குடி எஸ்.பி., தலைமையில், 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருக்கல்யாணம்:

7-ம் திருநாளான நாளை (10ம் தேதி) அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. காலை 9:00 மணிக்கு சுவாமிக்கு உச்சிகால அபிஷேகமும், மதியம் 4:00 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுத்து, மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடக்கிறது. திருக்கல்யாணம் நடைபெறும் தினமான நாளையும் பக்தர்கள் கோயிலில் தரிசனம் செய்யவோ, நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கோ அனுமதி இல்லை. தொலைக்காட்சி, வலைத்தளங்கள் வாயிலாக பக்தர்கள் இந்நிகழ்வை காணலாம். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து

PitchaiahNov 10, 2021 - 11:33:03 AM | Posted IP 157.4*****

திருச்செந்தூர் முருகருக்கு அரோகரா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam
Black Forest CakesThoothukudi Business Directory