» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் செப்.27ல் கடையடைப்பு போராட்டம் : தொழிற்சங்கங்கள் ஆலோசனை

திங்கள் 20, செப்டம்பர் 2021 4:58:12 PM (IST)மத்திய அரசைக் கண்டித்து செப்.27ல் நடைபெற உள்ள நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் தொடர்பாக தூத்துக்குடியில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

மத்திய பாஜக அரசு விவசாய சட்டங்களை கைவிடவேண்டும். தொழிலாளர்களுக்கு எதிராக தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்பப்பெற வேண்டும். மின்சார மசோதா 2020 ஐ கைவிட வேண்டும். தேசத்தின் சொத்துக்களை பணமாக்குதல் என்ற பெயரில் விற்றுத் தீர்ப்பதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு அழைப்பின் பேரில் செப்.27 அன்று நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இப்போராட்டத்தை தீவிரமாக ஆதரிப்பது என்று மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. 

செப் 15 அன்று சென்னையில் தொழிலாளர் முன்னேற்ற சங்க அலுவலகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் தமிழகத்தில் போராட்டத்தை வெற்றிபெறச்செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் செப் 27 போராட்டத்தை வெற்றிபெறச் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஐஎன்டியுசி அலுவலகத்தில் தொமுச மாவட்டச் செயலாளர் சுசி ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஐஎன்டியுசி சார்பில் மாநில செயல்தலைவர் பி.கதிர்வேல், மாவட்ட தலைவர் ராஜகோபாலன், சிஐடியு சார்பில் மாவட்டச் செயலாளர் ஆர்.ரசல், மாவட்டத் தலைவர் இரா.பேச்சிமுத்து, ஏஐடியுசி மாவட்டத் தலைவர் ஏ.பாலசிங்கம், மாவட்டச் செயலாளர் கிருஷ்ணராஜ், தொ.மு.ச சார்பில் முருகன், ஏஐசிசிடியு சார்பில் மாவட்டத் தலைவர் சகாயம், மாவட்டச் செயலாளர் சிவராமன் மற்றும் முருகன், ஹெச்எம்எஸ் தலைவர் துறைமுகம் சத்யா ஆகியோர் பங்கேற்றனர்

கூட்டத்தில்,விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ள போராட்டத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் வெற்றிபெறச் செய்வது என்றும், விவசாயிகள் போராட்டக்குழு அறிவித்துள்ளபடி தூத்துக்குடி, கோவில்பட்டி ஆகிய மையங்களில் செப் 27 அன்று நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்திலும், கயத்தார், எட்டையாபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், ஏரல், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம் ஆகிய 8 மையங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு நடைபெறும் மறியல் போராட்டத்திலும் திரளான தொழிலாளர்களை பங்கேற்கச் செய்வது, 

விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து செப் 23 அன்று 6 போக்குவரத்து பணிமனைகள், மின்வாரிய அலுவலகங்கள், தாரங்கதாரா கெமிகல், எட்டையபுரம் பாரதி நூற்பாலை, பாரத் பெட்ரோலியம் உள்ளிட்டு அனைத்து ஆலை வாயில்களிலும் ஆாப்பாட்டம் நடத்துவது, துறைமுகத்தில் செப் 24 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவது, மாவட்டம் முழுவதும் பொதுமக்கள், தொழிலாளர்கள் மத்தியில் துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பது, போஸ்டர் பிரச்சாரம் நடத்துவது, செப் 23 அன்று மாலை தூத்துக்குடியில் நிறைவடையும் விவசாயிகள் பிரச்சார பயணத்துக்கு பெரும் ஆதரவு அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த இயக்கங்களில் பெருந்திரளாக தொழிலாளர்கள் பங்கேற்க வேண்டும் என்று அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Nalam Pasumaiyagam


Thoothukudi Business Directory