» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோயிலில் முழுநேர அன்னதான திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்

வியாழன் 16, செப்டம்பர் 2021 4:37:23 PM (IST)திருச்செந்தூர் திருக்கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாகத் துவக்கி வைத்தார்.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தைத் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (16.9.2021) தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, துவக்கி வைத்தார்.

முதலமைச்சர் இன்று துவக்கி வைத்த அன்னதானத் திட்டத்தின் வாயிலாக இம்மூன்று திருக்கோயில்களிலும் நாள்தோறும் சுமார் 7,500 பக்தர்கள் பயனடைவார்கள். இந்த அன்னதானத் திட்டத்தின்கீழ்ப் பக்தர்களுக்குக் காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை உணவு பரிமாறப்படும். தற்போது இத்திட்டத்தில் 754 திருக்கோயில்களில் மதியவேளை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. முந்தைய காலகட்டங்களிலும் திருக்கோயில்கள் மூலம் ஏழைகளுக்கு உணவளிக்கும் நடைமுறை இருந்து வந்துள்ளது. 

இதனைப் பின்பற்றி கொரோனா பெருந்தொற்று காலத்தில், ஏழை எளிய மக்களின் பசியினைப் போக்கும் விதமாகத் திருக்கோயில்கள் சார்பாக 44 இலட்சம் பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இறையருள் பெறத் திருக்கோயில்களுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு உணவளிப்பதே அன்னதானத் திட்டமாகும்.  திருக்கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதானம் தரத்துடனும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுவதை உறுதி செய்திட, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தால் வழங்கப்படும் தரச்சான்று அனைத்து முதுநிலை திருக்கோயில்களிலும் பெறப்பட்டுள்ளது.

தற்போது, பழநி - அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், திருவரங்கம் - அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் ஆகிய இரண்டு திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டமானது விரிவுப்படுத்தப்பட்டு, திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் 4.9.2021 அன்று இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில் திருச்செந்தூர் - அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சமயபுரம் - அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திருத்தணி - அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய மூன்று திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.இந்நிகழ்ச்சியில், மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்,  இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தர மோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ. குமரகுருபரன், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் சு. சிவராசு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர்  டாக்டர் கே. செந்தில்ராஜ், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory