» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ராமநாதபுரம் - தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் திட்டம்; வைகோ கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

வியாழன் 29, ஜூலை 2021 10:49:01 AM (IST)

ராமநாதபுரம் - தூத்துக்குடி இடையே ரூ.700 கோடி மதிப்பில் எரிவாயு குழாய் திட்டத்துக்காக 2021-22 ஆம் நிதி ஆண்டில் ரூ.12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

ராமநாதபுரம் - தூத்துக்குடி இடையேயான எரிவாயு குழாய் திட்டத்துக்கு தடை இன்மைச் சான்று தேவை இல்லை என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக, வைகோ, எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விகள்:

"1. ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி வரை, அண்மையில் பிரதமர் தொடங்கி வைத்த இயற்கை எரிவாயு குழாய் திட்டம் குறித்த விவரங்கள்;

2. அந்தத் திட்டச் செலவுத் தொகை எவ்வளவு? 2021-22 ஆம் நிதி ஆண்டில், அதற்காக எவ்வளவு தொகை ஒதுக்கி இருக்கின்றீர்கள்?

3. இந்தத் திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பு, சுற்றுச்சூழல் துறையில் அனுமதி பெறப்பட்டதா?

4. அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்கள்;

5. இந்தத் திட்டத்தால் பயன் பெறும் பகுதிகள் யாவை? அடுத்த மூன்று ஆண்டுகளில், எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாகும்?".

ஆகிய கேள்விகளை வைகோ எழுப்பியிருந்தார்.

இக்கேள்விகளுக்கு மத்திய எண்ணெய், இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் தாலி அளித்த விளக்கம்:

"இந்தியன் ஆயில் நிறுவனத்தின், எண்ணூர் - திருவள்ளூர் - பெங்களூரு - புதுச்சேரி - நாகப்பட்டினம் - மதுரை - தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தின் (ETBNMTL) ஒரு பகுதியான, ராமநாதபுரம் - தூத்துக்குடி இடையே, 142 கிலோ மீட்டர் நீளம், 4 MMSCMD திறன் கொண்ட, இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை, 17.02.2021 அன்று, பிரதமர் தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம் - தூத்துக்குடி இடையேயான எரிவாயு குழாய் திட்டத்துக்கான மொத்தச் செலவு மதிப்பு 700 கோடி ரூபாய் ஆகும். 2021-22 ஆம் நிதி ஆண்டுக்கு, 12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் இந்தியன் ஆயில் நிறுவனம், சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக, சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாறுபாடுகள் துறை அமைச்சகத்திடம் (Ministry of Environment, Forest and Climate Change - MoEF) திட்ட வரைவு வழங்கி இருக்கின்றார்கள். அதற்கான சட்டப்பிரிவுகளை, அமைச்சகம் ஆய்வு செய்தது; இந்தத் திட்டத்துக்கு தடை இன்மைச் சான்று தேவை இல்லை எனத் தீர்மானித்தது.

ராமநாதபுரம் - தூத்துக்குடி இயற்கை எரிவாயு திட்டத்தால், அந்த இரு மாவட்டங்களும் பயன்பெறும்; 30 பேருக்கு நேரடியாகவும், 75 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்; தவிர, அடுத்த மூன்று ஆண்டுகளில், இந்தத் திட்டத்தால் பயன்பெறும் தொழிற்கூடங்கள், எரிவாயு வழங்குதல் பணிகளில் நிறைய வேலைவாய்ப்புகள் உருவாகும்". இவ்வாறு அவர் பதிலளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Nalam Pasumaiyagam


Black Forest Cakes
Thoothukudi Business Directory