» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கீதாஜீவன் எம்எல்ஏ மீண்டும் போட்டி - திமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு

வெள்ளி 12, மார்ச் 2021 12:18:49 PM (IST)

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் கீதாஜீவன் எம்எல்ஏ மீண்டும் போட்டியிடுகிறார். 

தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்தார். இதன்படி தூத்துக்குடி தொகுதியில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான கீதாஜீவன் மீண்டும் போட்டியிடுகிறார். 

இதுபோல் திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணனும், ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் சண்முகைய்யாவும் திமுக சார்பில மீண்டும் களமிறங்குகின்றனர். மேலும், விளாத்திகுளம் தொகுதியில் ஜிவி மார்க்கண்டேயன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி தொகுதி சிபிஎம் கட்சிக்கும் ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

கீதாஜீவன் பயோ-டேட்டா

கீதா ஜீவன், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்டச் செயலாளருமான என். பெரியசாமியின் மகள் ஆவார். இவர் தூத்துக்குடியில் மே 06, 1970 அன்று பிறந்தார். தமிழ்நாடு அரசின் முன்னாள் சமூகநலத்துறை அமைச்சர். இவர் தூத்துக்குடியில் ஆங்கிலவழிக் கல்வியளிக்கும் ஒரு பள்ளியின் தாளாளராக உள்ளார். 

இவர் இதற்கு முன்பாக 1996 முதல் 2001 வரை உள்ளாட்சி அமைப்புத் தேர்தலில், தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்வுச் செய்யப்பட்டு பணியாற்றியுள்ளார். பின்னர் 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், திமுக கட்சியின் சார்பாக தூத்துக்குடி தொகுதியிலிருந்து, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக பதவி வகித்து வருகிறார். 

அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்

திருச்செந்தூர் தொகுதி தி.மு.க. வேட்பாளராக அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் (68) அறிவிக்கப்பட்டு உள்ளார். இவரது சொந்த ஊர் உடன்குடி அருகே உள்ள தண்டுபத்து கிராமம் ஆகும். இவர் கடந்த 2001&ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக பணியாற்றினார். பின்னர் 2006ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

பின்னர் அவர் தி.மு.க.வில் இணைந்ததால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து 2009&ம் ஆண்டு இடைத்தேர்தல், 2011, 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக உள்ளார். இவர் 10ம் வகுப்பு வரை படித்து உள்ளார். பாத்திர உற்பத்தி நிறுவனமும் நடத்தி வருகிறார்.இவருடைய மனைவி ஜெயகாந்தி. இவர்களுக்கு அனந்த பத்மநாபன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேசுவரன் ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

ஜி.வி. மார்கண்டேயன் 

விளாத்திகுளம் வேட்பாளர் ஜி.வி. மார்கண்டேயன், இவரது சொந்த ஊர் ராமசந்திராபுரம், தற்போது அம்பாள் நகரில் வசித்து வருகிறார். இவரது மனைவி ரேபாகா அனிதா, ஒரு மகனும், மகளும் உள்ளனர். பி.ஏ.,பி.எல்., படித்துள்ளார். தொழில் விவசாயம். 2001 முதல் 2011 வரை புதூர் யூனியன் தலைவராக இருந்தார். பின்னர் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக சார்பில் விளாத்திகுளம் தொகுதியில் இருந்து, சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அதிமுகவில் சீட் கிடைக்காததால் அக்கட்சியில் இருந்து விலகி 2019ல் நடந்த இடைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு, தோல்வி அடைந்தார். பின்னர் 2020ல் திமுகவில் இணைந்தார். அவருக்கு விளாத்திகுளம் தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 

ஒட்டபிடாரம் எம்.சி.சண்முகையா 

ஒட்டபிடாரம் தொகுதி திமுக வேட்பாளராக எம்.சி.சண்முகையா அறிவிக்கப்பட்டுள்ளார். ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட அயிரவன்பட்டியை செல்லையா - சின்னத்தாய் மகனான இவர் எல்எல்பி படித்துள்ளார். இவரது மனைவி சுகிர்தா, ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக பணியாற்றியுள்ளார். 1992 முதல் திமுக உறுப்பினராக இருந்து வரும் சண்முகையா கடந்த 2019 - ல் நடந்த ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவை தொகுதி இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார். கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார் சண்முகையா தற்போது ஓட்டப்பிடாரம் ஒன்றியச் செயலாளராக செயல்பட்டு வருகிறார்.


மக்கள் கருத்து

peterMar 12, 2021 - 03:37:28 PM | Posted IP 108.1*****

A good field worker for perople when in power. Easy to approach at functions.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest Cakes
Thalir Products

Thoothukudi Business Directory